1959 ஆம் ஆண்டு, ஏப்ரல் 9 ஆம் தேதி ஜெமினி கணேசன் நடிப்பில் சி.வி.ஸ்ரீதர் இயக்கிய முதல் படம் கல்யாணப் பரிசு வெளியானது. இந்தப் படத்தில் ஜெமினி கணேசனும், சரோஜாதேவியும் காதலர்களாக நடித்தனர். ஜெமினி கணேசன் சரோஜாதேவியின் வீட்டில் குடியிருப்பார். இவர்களின் காதல் தெரியாமல், சரோஜாதேவியின் அக்கா ஜெமினி கணேசனின் மீது காதல் கொள்வார். குடும்பத்தையும், தன்னையும் காப்பாற்றும் அக்காவுக்காக காதலை தியாகம் செய்வார் சரோஜாதேவி. இந்த காதல் தியாகம் குடும்பத்திற்குள் புயலை உருவாக்கி ஜெமினி, சரோஜாதேவி, அவரது அக்கா என மூவரது வாழ்வையும் சிதறடிக்கும்.
சுந்தர் லால் நஹாதா பிரபல தயாரிப்பாளர். விஜயவாடாவைச் சேர்ந்த இவர் சென்னை வந்து படத்தயாரிப்பில் இறங்கினார். பல்வேறு நிறுவனப் பெயர்களில் தமிழ், தெலுங்கு உள்பட பலமொழிப் படங்களை தயாரித்தார். 1959 இல் இவர் ஜெமினி கணேசன், ஜமுனா நடிப்பில் நல்ல தீர்ப்பு என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படத்தின் திரைக்கதை, வசனத்தை எழுதியவர் முரசொலி மாறன்.
நல்ல தீர்ப்பில் ஜெமினி கணேசன் இளம் வழக்குரைஞர். ஆரம்ப கட்டத்திலேயே வெற்றிகளை குவித்த அவருக்கு அவரது விதவை தாயார் கண்ணாம்பா ஆசி வழங்குவார். தொழிலதிபர் ஒருவர் அவருக்கு பார்ட்டி தருவார். தனது மகளை ஜெமினிக்கு திருமணம் செய்துத் தருவது அவரது நோக்கமாக இருக்கும். பார்ட்டி முடிந்து வரும் ஜெமினி தனது விதவை தாயாரின் நெற்றியில் குங்குமம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைவார். விதவை தாயார் எப்படி குங்குமம் வைத்துக் கொள்ளலாம்? குங்குமம் வைத்துக் கொண்டார் என்றால் அவர் விதவை இல்லையா?
ஜெமினியின் இந்த குழப்பத்துக்கு தாயார் கண்ணாம்பா ஒரு கடிதத்தின் மூலம் விளக்கம் தருவார். அதனை எழுதியவர் கண்ணாம்பாவின் கணவர், ஜெமினியின் தந்தை வி.நாகைய்யா. வங்கியில் பணிபுரிந்து வந்த நாகைய்யா, செய்யாத கொலை குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருப்பார். அவர் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், தான் இறந்துவிட்டதாக ஊராரிடம் சொல்ல வேண்டும், மகனை வழக்கறிஞருக்கு படிக்க வைக்க வேண்டும், அவன் என்னை நிரபராதி என இந்த உலகுக்கு தெரியப்படுத்துவான் என்று எழுதியிருப்பார். அதன் காரணமாகவே கண்ணாம்பா தானொரு விதவைப் போல வெளி உலகுக்கு காட்டிக் கொண்டிருப்பார். உண்மை தெரிய வந்த ஜெமினி கணேசன் சிறையில் இருக்கும் தனது தந்தையை எப்படி நிரபராதி என நிரூபித்து விடுதலை செய்கிறார் என்பது கதை.
திருப்பங்கள் நிறைந்த சுவாரஸியமான நல்ல தீர்ப்பு படத்தை டி.பிரகாஷ் ராவ் இயக்கியிருந்தார். ஜெமினி கணேசன், கண்ணாம்பா, நாகையா மூவரது நடிப்பும், எஸ்.எம்.சுப்பையாவின் இசையும், பாடல்களும் நல்ல தீர்ப்பை நல்லதொரு சினிமா அனுபவமாக மாற்றியிருந்தன. கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், உவமை கவிஞர் சுரதா ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.
மார்ச்சில் வெளியிட திட்டமிட்டிருந்த நல்ல தீர்ப்பு ஏப்ரல் 9 ஆம் தேதிக்குத் தள்ளிப் போனது. அதேநாளில்தான் கல்யாணப் பரிசும் வெளியானது. அதற்கு முன் ஒரேயொருமுறை ஜெமினி நாயகனாக நடித்த இரு படங்கள் ஒரே நாளில் வெளியாகியிருந்தது. 1959, ஏப்ரல் 9 ஆம் தேதி இரண்டாவது முறையாக ஒரே நாளில் இரண்டுப் படங்கள் திரைக்கு வந்தன. கல்யாணப் பரிசின் மெகா வெற்றிக்கு நடுவில் நல்ல தீர்ப்பும் நற்பெயர் எடுத்து வெற்றி பெற்றது. அப்படி ஒரே நாளில் இரண்டு வெற்றிகள் கொடுத்த அபூர்வ பட்டியலில் ஜெமினி கணேசனும் இடம்பிடித்தார்.