மணிலால் பானர்ஜி எழுதிய ஸ்வயம்சித்தா நாவலைத் தழுவி ஆச்சார்யா ஆத்ரேயா திரைக்கதை, வசனம் எழுத, புல்லையாவின் இயக்கத்தில் அர்தங்கி தயாரானது. இதில் ஜமீன்தாரின் மூத்த மகனாக அக்னியேனி நாகேஸ்வரராவ் நடித்தார். சற்று மூளை வளர்ச்சி இல்லாதவர். அவரது அம்மா இறந்தப் பிறகு ஜமீன்தார் இரண்டாவது திருமணம் செய்து கொள்வார். அந்தத் திருமணத்தில் அவருக்கு ஒரு மகன் பிறப்பார். அந்த வேடத்தில் ஜக்கைய்யா நடித்தார். அண்ணன் அப்பாவியாகவும், தம்பி கொடூரமானவனாகவும் வளர்ந்திருப்பார்கள்.
ஜமீன்தார் கிராமத்துப் பெண் பத்மாவை (சாவித்ரி) ஜக்கைய்யாவுக்கு திருமணம் செய்து வைக்க நினைப்பார். ஜக்கைய்யாவின் தாயின் தலையீட்டால் சாவித்ரியை மூளை வளர்ச்சி குறைந்த நாகேஸ்வரராவுக்கு திருமணம் செய்து வைப்பார்கள். நாகேஸ்வரராவ் குழந்தையாக இருக்கையில் அவரை தூங்க வைக்க வேலைக்காரி மயக்க மருந்து தந்ததே அவரது மூளை வளர்ச்சி குறைபாடுக்கு காரணம் என்பதை அறிந்த சாவித்ரி அவரை மெல்ல குணப்படுத்துவார்.
இந்நிலையில் ஜமீன்தார் அனைத்து சொத்துக்களையும் நாகேஸ்வரராவ் பெயரில் எழுதி வைத்து இறந்துவிடுவார். ஆனால், அவரோ தனது சொத்துக்கள் அனைத்தையும் தம்பி ஜக்கைய்யாவுக்கு தந்துவிடுவார். தனது நிலத்தில் விவசாயம் செய்கிறவர்களிடமிருந்து அண்ணன் காசு வசூலிக்கிறான் என கேள்விப்பட்டு தம்பி துப்பாக்கியுடன் வருவான். ஆனால், அண்ணனோ பணத்தை தம்பியிடம் தர வந்து கொண்டிருப்பான். இருவருக்கும் வாக்குவாதம் வரும். ஜக்கைய்யாவை சமாதானப்படுத்த முடியாத நிலையில் அவரது தாயாரே அவரை துப்பாக்கியால் சுட முயல, சாவித்ரி இடையில் புகுந்து காப்பாற்றி, ஜக்கைய்யாவின் குரோதத்தை தெளிய வைப்பார்.
குடும்பம், சென்டிமெண்ட் அனைத்தும் கலந்த அர்தங்கி ஆந்திராவில் 5 திரையரங்குகளில் 100 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் அண்ணனாக என்டி.ராமராவையும், தம்பியாக நாகேஸ்வரராவையும் நடிக்க வைக்க புல்லையா விரும்பினார். தம்பியாக எதிர்மறை வேடத்தில் நடித்தால் தனது இமேஜ் பாதிக்கப்படும் என நாகேஸ்வரராவ் அண்ணன் வேடத்தை தேர்வு செய்ய, தம்பியாக ஜக்கைய்யா நடித்தார்.
இந்தப் படத்தை அவர் தமிழில் பெண்ணின் பெருமை என்ற பெயரில் தயாரித்து இயககியபோது அவர் எதிர்பார்த்த நடிகர்கள் அமைந்தனர். அப்பாவி சகோதரனாக ஜெமினி கணேசனும், அடாவடி சகோதரனாக சிவாஜியும் நடித்தனர். தெலுங்கில் நடித்த அதே வேடத்தை சாவித்ரி இதிலும் செய்தார். அங்கு அவர் நாகேஸ்வரராவின் மனைவி, இதில் ஜெமினி கணேசனின் மனைவி. ஜெமினி கணேசன் - சாவித்ரி என்ற நட்சத்திர ஜோடி முதல்முறை இந்தப் படத்தில்தான் இணைந்து நடித்தனர்.
பெண்ணின் பெருமை படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர்கள் பி.என்.ராவ் மற்றும் ஏ. ராமராவ். தெலுங்குப் படத்துக்கு இசையமைத்த வேணு தமிழ்ப் படத்திற்கும் பின்னணி இசையமைத்தார். சிவாஜியின் வில்லனிக் நடிப்பும், சாவித்ரியின் பாந்தமான முகபாவங்களும், ஜெமினியின் அப்பாவி கதாபாத்திரமும் ரசிகர்களை கவர்ந்து படம் 100 நாள்கள் ஓடியது.