நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆறு தெலுங்குப் படங்களில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்களும், தனது நண்பர்களுமான என்.டி.ஆர், நாகேஸ்வரராவ், யா, அஞ்சலி தேவி போன்றவர்களின் நட்புக்காக, அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நடித்துக் கொடுத்தப் படங்கள் அவை. அதில் ஒன்று 1964 இல் வெளியான ராமதாஸு என்ற திரைப்படம். நாகையா இயக்கி, நடித்த இந்தப் படத்தில் சிவாஜியுடன் மேலும் மூன்று முன்னணி நட்சத்திரங்கள் கௌரவ வேடங்களில் நடித்தனர்.
நாகைய்யா ஆந்திர மாநிலம் குண்டூரில் 1904 இல் பிறந்தார். திருப்பதி தேவஸ்தானம் இவரது கல்விக்கு உதவித் தொகை தந்து படிக்க வைத்தது. காந்தி, நேரு ஆகியோரால் கவரப்பட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். காந்தியின் தண்டி யாத்திரையில் நாகைய்யாவும் கலந்து கொண்டார். 'ஆந்திரா பத்திரிகா'வில் நிருபராக பணியாற்றியவர் பிறகு கிராமபோன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். முதல் மனைவி ஒரு பெண் குழந்தையை பெற்றுத் தந்து உயிர்விட, நாகைய்யா இரண்டாவது திருமணம் செய்தார். அவரும் எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கையில் இறந்து போனார். மகளும் மருத்துவ உலகம் அறிந்திராத ஒரு நோயால் மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து ரமண மகரிஷியின் ஆசிரமத்தில் சிலகாலம் நாகைய்யா தங்கியிருந்தார்.
நாகைய்யா தனது 34 வது வயதிலிருந்து (1938) நடிக்கத் தொடங்கினார். ஐம்பதுகள் மற்றும் அறுபதுகளில் ஏராளமான தமிழ்ப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் தோன்றினார். சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்தார். பொம்மை கல்யாணம், பாவ மன்னிப்பு, நிச்சய தாம்பூலம், கப்பலோட்டிய தமிழன், எல்லாம் உனக்காக, பாலும் பழமும், ஆலயமணி, வளர்பிறை, நான் வணங்கும் தெய்வம், பச்சை விளக்கு, கை கொடுத்த தெய்வம் ஆகியவை நாகைய்யா நடித்த சிவாஜி படங்களில் சில.
நாகைய்யா சிறந்த இசை ஞானம் கொண்டவர். அவரே மெட்டுகள் அமைத்து பாடுவார். பல படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். பாடல்களும் பாடியுள்ளார். 1946 இல் தியாகைய்யா என்ற பெயரில் தியாகராயரின் கதையை இயக்கினார். தமிழில் 1953 இல் என் வீடு என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். 1964 இல், 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாஸ்திரிய சங்கீத வித்வானும், ராம பக்தருமான பக்த ராமதாஸுவின் வாழ்க்கை வரலாறை எழுதி, இயக்கினார். இதில் ராமதாஸுவாக அவரே நடித்தார்.
இந்தப் படத்தில் விஷ்ணு, ராமர், லட்சுமணன், லட்சுமி போன்ற கடவுள் கதாபாத்திரங்களும் இடம்பெறும். இதில் தமிழ், தெலுங்கின் முன்னணி நட்சத்திரங்களை நடிக்க வைக்க விரும்பினார். அவர் மீது நட்பும், மரியாதையும் கொண்ட என்டி.ஆர்., அக்னியேனி நாகேஸ்வரராவ், சிவாஜி கணேசன், அஞ்சலி தேவி ஆகியோர் நாகைய்யாவின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டனர். என்.டி.ஆர். ராமராகவும், சிவாஜி அவரது தம்பி லட்சுமணனாகவும், நாகேஸ்வரராவ் விஷ்ணுவாகவும், அஞ்சலி தேவி லட்சுமியாகவும் நடித்தனர்.