தொகுப்பாளரிடம் தான் ஒரு பாலிவுட் நடிகர் என ரன்வீர் சிங் அறிமுகப்படுத்திக் கொண்டது நெட்டிசன்களின் மனதை வென்றுள்ளது. ரன்வீர் சிங் சமீபத்தில் அபுதாபியின் யாஸ் தீவில் நடந்த ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் இந்திய பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அப்போது நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கார் பந்தய நிகழ்வில் ரன்வீர் சிங்கை நேர்காணல் செய்தார், முன்னாள் ஃபார்முலா ஒன் ரேஸர் மார்ட்டின் ப்ரண்டில். அப்போது ரன்வீர் யார் என்பதை மறந்த மார்ட்டின், உங்களை நீங்களே அறிமுகம் செய்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அதற்கு, “நான் ஒரு பாலிவுட் நடிகர் சார். பொழுதுபோக்கு துறையைச் சார்ந்தவன். இந்தியாவின் மும்பையை சேர்ந்தவன்” என பதிலளித்தார். ரன்வீர் சிங்கின் இந்த தன்னடக்கமான பதில் நெட்டிசன்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.