துஷ்யந்தன் - சகுந்தலாவுக்குப் பிறக்கும் குழந்தை பரதன். சின்ன வயதிலேயே துணிச்சலும், பராக்கிரமும் மிக்கவன். காட்டில் புலிகளுக்கிடையே நடமாடியவன். சிறு வயது முதலே அவனுக்கு காட்டுயிர்களிடம் அச்சமில்லை என்பதை காண்பிப்பதற்காக ஒரு காட்சியை படத்தில் வைத்திருந்தனர். புலிக்குட்டியுடன் குழந்தை பரதன் புலியின் மீது சவாரி செய்ய வேண்டும். குட்டி பத்மினிக்கு அப்போது 10 வயது நிரம்பவில்லை. காட்சியைச் சொன்னால் அவரது தாய் நிச்சயம் ஒத்துக் கொள்ள மாட்டார் என்று அவரை செட்டுக்கு வெளியே ஏதாவது சொல்லி அழைத்துப் போய் காட்சியை படமாக்குவது என்று தீர்மானித்திருக்கிறார்கள்.
அதன்படி குட்டி பத்மினியின் தாய் ராதா பாயை வெளியே அழைத்துச் சென்றிருக்கிறார்கள். குட்டி பத்மினிக்கு நிறைய சாக்லெட்கள் தந்து, புலிக்குட்டியை பிடிக்குமா என்று கேட்க, நாயக்குட்டி போலத்தானே அதுவும் என்று, 'ஓ, பிடிக்குமே' எனச் சொல்ல, ஒரு புலிக்குட்டியைத் தூக்கி கையில் தந்திருக்கிறார்கள். அத்துடன், வளர்ந்த தாய் புலியின் முதுகில் அவரை உட்கார வைத்து படமாக்கினார்கள்.
வாய் தைக்கப்படாத புலி, சிறுத்தை, சிங்கத்துடன் நடிக்க இந்தக் காலத்திலேயே யாரும் தயாராக இல்லை. பெரியவர்கள் என்றால் பரவாயில்லை. குட்டி பத்மினி பத்து வயது நிரம்பாத சிறுமி. புலி கடிக்க வேண்டாம். கையால் ஒரு தட்டு தட்டினாலே விபரீதமாகிவிடும். ரிஸ்க்கான இந்தக் காட்சியை எடுக்க உதவியவர் கோவிந்தராஜ் மாஸ்டர். புலி, சிங்கங்களை பழக்குகிறவர். புலி கோவிந்தராஜ் என்றுதான் அவரை அழைப்பார்கள். அவர் பயிற்சி கொடுத்த புலியின் மீது குட்டி பத்மினி தைரியமாக ஏறி அமர, அந்தக் காட்சியை எடுத்தனர்.
எல்லாம் முடியப் போகிற நேரம், ராதா பாய் செட்டுக்கு வந்து, தனது மகள் புலியில் அமர்ந்திருப்பதைப் பார்த்து, திகிலாகி சத்தம் போட, ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி காட்சியை எடுத்து முடித்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் குட்டி பத்மினி புலி சவாரி பெரிதும் பேசப்பட்டதுடன் ஆந்திர அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதும் குட்டி பத்மினிக்கு கிடைத்தது.
குழந்தை நட்சத்திரமாக 100 க்கும் மேற்பட்ட படங்களில் குட்டி பத்மினி நடித்துள்ளார். பேபி ஷாலினி, ஷாம்லிக்கெல்லாம் முன்னோடி இவர். ஏவிஎம்மின் குழந்தையும் தெய்வமும் படத்தில் இரண்டு வேடங்களில் சிறப்பாக நடித்ததற்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது அவருக்குக் கிடைத்தது. இந்த விருதை தமிழில் வாங்கிய முதல் பெண் குழந்தை நட்சத்திரம் குட்டி பத்மினி என்பது முக்கியமானது.