அவருக்கு ஒரு தங்கை, ஒரு தம்பி. ஒரு மகள். மகளிடம் 7 கட்டளைகளை தந்து அதன்படி நடக்க வேண்டும் என அறிவுரை சொல்வார் சிவாஜி. பொய் சொல்லாதே, திருடாதே, ஆத்திரம் கொள்ளாதே... என்பது போன்ற 7 கட்டளைகள் அதில் இருக்கும். சந்தர்ப்ப சூழ்நிலையால் சிவாஜியே அந்தக் கட்டளைகளை மீற வேண்டிய நிர்ப்பந்தம் வரும். அது அவரை தீராத சோதனைக்குள் தள்ளும். இறுதியில் அவரது மகள் அந்த 7 கட்டளைகளை திருப்பி சிவாஜியிடம் தருவாள்.
சிவாஜி, கே.ஆர்.விஜயா, ஜோதிலட்சுமி, சிவகுமார், லட்சுமி, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், டி.எஸ்.பாலையா உள்பட பலர் இதில் நடித்திருந்தனர். பாலசந்தரின் வழக்கமான படங்களிலிருந்து இது மாறுபட்டிப்பதாக படம் வெளியான நேரம் அவரது ரசிகர்கள் அபிப்ராயப்பட்டனர். படம் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்று வெற்றியும் பெற்றது. மகத்தான வெற்றியல்ல. ஆனால், தோல்விப் படமும் அல்ல.
படத்துக்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். மொத்தம் ஐந்து பாடல்கள். அனைத்தையும் வாலி எழுதினார். கல்யாணம்.. கல்யாணம்.. பாடலை ஏ.எல்.ராகவனுடன் இணைந்து எல்.ஆர்.ஈஸ்வரி பாடினார். குங்குமச்சிமிழ் எனத் தொடங்கும் பாடலை டிஎம்.சௌந்தர்ராஜனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடினர். மீதி மூன்றிலும் ஆண் குரல் இல்லை. மூன்றையும் எல்.ஆர்.ஈஸ்வரியே பாடினார்.