சிவாஜி - எம்ஜிஆர், கமல் - என்ற ஒப்பீடு பல ஆண்டுகளாக விஜய் - அஜித் என்பதில் வந்து நிற்கிறது. இவர்களில் யார் படங்கள் அதிகம் வசூலிக்கின்றன. யாருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்ற சண்டை இவர்கள் படம் நடிக்கும்வரை இருந்து கொண்டே இருக்கும். கமல் தனி நாயகனாக நடித்து வெளியான சிகப்பு ரோஜாக்கள் 1978 இல் வெளியாகி வெள்ளி விழா கண்டது. 1975 இல் சின்ன வேடத்தில் சினிமாவில் அறிமுகமான ரஜினி, 1978 இல் ப்ரியா படத்தில் தனி நாயகனாக நடித்து வெள்ளி விழா கண்டார். விஜய், அஜித்தின் முதல் வெள்ளி விழாப் படங்கள் எவை...?
வெற்றி, குடும்பம், நான் சிகப்பு மனிதன், வசந்தராகம் உள்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றிய விஜய், 1992 இல் தனது தாய் ஷோபா சந்திரசேகர் தயாரிப்பில், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு படத்தில் நாயகனாக அறிமுகமானார். கீர்த்தனா நாயகியாக நடித்த இந்தப் படத்திற்கு மணிமேகலை இசையமைத்தார். எஸ்.ஏ.சந்திரசேகரனின் மகன் என்ற அடையாளத்துடன் திரையில் அறிமுகமான விஜய்யை குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்தன. அவரது தோற்றம், நடிப்பு, நடனம் கேலி செய்யப்பட்டன. நாளைய தீர்ப்பு எவ்வித எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் திரையரங்குகளைவிட்டு அகன்றது.
ஒரு பெரிய நட்சத்திரத்தின் துணையிருந்தால் மட்டுமே தனது மகனை கடைகோடி ரசிகன்வரை விரைவில் கொண்டு சேர்க்க முடியும் என்பதை உணர்ந்த எஸ்.ஏ.சி. விஜயகாந்தின் உதவியை நாடினார். விஜயகாந்தின் ஆரம்ப காலத்தில் எஸ்.ஏ.சி.யின் சட்டம் ஒரு இருட்டறை போன்ற படங்கள் அவரது ஆக்ஷன் ஹீரோ இமேஜுக்கு பெரிதும் உதவியிருந்தன. அந்த நன்றிக்கடன் காரணமாக விஜய்யின் செந்தூரப்பாண்டியில் அவரது அண்ணனாக நடித்தார். எதிர்பார்த்தது போல் படம் பி அண்ட் சி சென்டர்களில் நன்றாகப் போய் வெற்றிப் படமானது.
அதற்கு அடுத்து 1994 இல் எஸ்.ஏ.சி. இயக்கத்தில் விஜய் நடித்த ரசிகன் திரைப்படம் அவரது திரைவாழ்க்கையின் முதல் சூப்பர் ஹிட் திரைப்படமானது. சென்னையில் நான்கு திரையரங்குகளில் 100 நாள்கள் ஓடிய ரசிகன், ஒரு திரையரங்கில் 147 நாள்கள் ஓடியது. அதன் பிறகு வெளிவந்த ராஜாவின் பார்வையில், விஷ்ணு, சந்திரலேகா, கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்றவை தோல்விகள் மற்றும் சுமார் வெற்றிகள்.
இந்த நேரத்தில் (1996) விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக படத்தில் விஜய் நடித்தார். அதற்கு முன் நடித்தப் படங்களின் விளையாட்டுத்தனங்கள் நிறைந்த கதாபாத்திரத்துக்கு மாறாக முழுக்க காதல் நாயகனாக இதில் தோன்றினார். படம் 250 நாள்களை கடந்து ஓடி விஜய்க்கு முதல் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் பூவே உனக்காக படம்தான் விஜய்யின் முதல் வெள்ளி விழா படமாகும்.
அப்படியே அஜித் பக்கம் வந்தால், 1993 இல் வெளியான அமராவதிதான் தனி நாயகனாக அவரது முதல் படம். செல்வா இயக்கத்தில் சங்கவி நாயகியாக நடிக்க, பால பாரதி இசையமைத்த அமராவதி நல்ல பாடல்களுடன் கையைக் கடிக்காத படமாக அமைந்தது. அதே வருடம் தெலுங்கில் பிரேம புஸ்தகம் என்ற படத்தில் அஜித் நடித்தார். 1994 இல் விஜய் ரசிகன் என்ற 100 நாள் படத்தை தந்த போது அஜித், பாசமலர்கள், பவித்ரா என்ற இரு சுமார் படங்கள் தந்தார். அதனைத் தொடர்ந்து விஜய்யின் ராஜாவின் பார்வையிலே படத்தில் சின்ன வேடம் ஏற்றார்.
அஜித் வாழ்க்கையில் முதல் சூப்பர் ஹிட்டாக அமைந்தது வஸந்த் (இப்போது சாய் வஸந்த்) இயக்கத்தில் அவர் நடித்த ஆசை (1995) திரைப்படம். வஸந்தின் கதை, இயக்கம், பிரகாஷ்ராஜின் வில்லத்தனமான நடிப்பு, தேவாவின் பாடல்கள் அஜித், சுவலட்சுமியின் காதல் காட்சிகள் எல்லாம் சேர்ந்து ரசிகர்களுக்குப் பிடித்த படமானது. திரையரங்கில் ஆசை 210 நாள்களுக்கு மேல் ஓடி அஜித்தின் முதல் வெள்ளி விழா திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது.
ஏறக்குறைய ஒரேகாலகட்டத்தில் திரைத்துறைக்கு வந்த விஜய்யும், அஜித்தும் தங்களின் முதல் வெள்ளி விழாப் படங்களை ஆறு மாத இடைவெளியில் தந்தனர். இப்போதும் இவர்களின் ரசிகர்கள் எண்ணிக்கையும், சந்தை மதிப்பும் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கிறது. இன்னும் குறைந்தது பத்து வருடங்களுக்கு இதில் மாற்றம் எதுவும் வரப்போவதில்லை. மாற வேண்டியது தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் விஜய், அஜித் ரசிகர்கள்தான்.