கமல் சிங்காரவேலன் திரைப்படத்தில் நடித்த போது வடிவேலு வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர். சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சிங்காரவேலன் திரைப்படத்தில் கிராமத்திலிருந்து சென்னை வரும் கமல்ஹாசன் தனது நண்பரான மனோவின் வீட்டில் தங்குவார். அங்கு கவுண்டமணி உட்பட சிலர் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் வடிவேலு. படத்தில் நண்பர்களாக வந்தாலும் வடிவேலுவை சதா அடித்துக் கொண்டிருப்பார் கவுண்டமணி. இதனை படப்பிடிப்பில் கவனித்து வந்த கமல்ஹாசன், ஏன் இப்படி அடிச்சுட்டே இருக்கார் என்று கேட்டிருக்கிறார். அதற்கு, அவர் அப்படித்தான் என்று பதிலளித்திருக்கிறார் வடிவேலு.
அந்த நேரம் கமல் அவரிடம், என்னுடைய அடுத்தப் படத்தில் ஒரு வேடத்தில் நடிக்க அழைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இது போல் பெரிய நடிகர்கள் சிறிய வளர்ந்து வரும் நடிகர்களிடம் கூறுவது சாதாரணம். அது அப்போதைய பழக்கத்திற்காக சொல்லப்படுவது. படபிடிப்பு முடிந்து காரில் ஏறியதும் அதனை மறந்து விடுவது தான் வழக்கம். சம்பந்தப்பட்ட சிறிய நடிகருக்கும் இது சம்பிரதாயமாக சொல்லப்படுவது என்பது தெரியும். வடிவேலும் அப்படித்தான் நினைத்திருந்தார்.
ஆனால் சில வாரங்கள் கழித்து கமல் அலுவலகத்திலிருந்து வடிவேலுக்கு அழைப்பு வந்திருக்கிறது. அப்போது தேவர் மகன் படப்பிடிப்புக்காக கமல் தயாராகிக் கொண்டிருந்த நேரம். அந்தப் படத்தில் வேலைக்காரனாக முக்கிய வேடம் ஒன்றை வடிவேலுக்கு அவர் அளித்தார். தேவர் மகன் படத்தில் திருப்புமுனை கதாபாத்திரமாக வடிவேலின் கதாபாத்திரம் இருக்கும்.
ஊருக்கு வரும் கமல்ஹாசன் தனது காதலி கௌதமி விருப்பப்பட்டார் என்பதற்காக பூட்டிக் கிடக்கும் கோயிலை திறக்கச் சொல்வார்., பூட்டை உடைத்தால் பிரச்சனையாகும் என்பது வடிவேலுக்கு தெரியும். ஆனாலும் கேட்பது பெரிய தேவரின் மகன் என்பதால் கல்லால் பூட்டை உடைத்து அவர்களுக்காக கோயிலை திறந்து கொடுப்பார். இது ஊர் பிரச்சனைக்கு வழிவகுக்கும். வடிவேலின் கையை வெட்டி விடுவார்கள். மருத்துவமனையில் கமல் அவரை சந்திக்கும்போது, கழுவுற கையால சாப்பிடணும் சாப்பிடற கையால கழுவனும் அவ்வளவுதான் என்று அசட்டையாக பதில் சொல்வார் வடிவேலு. இன்றுவரை மறக்க முடியாத வசனமாக அது இருக்கிறது.
1992 முற்பகுதிவரை துண்டு துக்கடா வேடங்களில் நகைச்சுவை என்ற பெயரில் அங்க சேஷ்டைகள் செய்து கொண்டிருந்த வடிவேலை குணச்சித்திர நடிகராக காட்டிய திரைப்படம் 1992 அக்டோபரில் வெளியான தேவர்மகன். வடிவேலு வெறும் சாதாரண நடிகர் அல்ல திறமை மிக்கவர் என்பதை காட்டிய முதல் படமும் தேவர் மகன் தான். சிவாஜி உடன் நடித்ததோடு அவரது பாராட்டையும் அந்தப் படத்தில் வடிவேலு பெற்றார். அப்படி பல விதங்களில் கமல் அளித்த தேவர்மகன் பட வாய்ப்பு வடிவேலுக்கு மிக முக்கியமாக அமைந்தது. அதன் காரணமாகவே, கமல் சார்தான் என்னை யு டர்ன் செய்து இன்னொரு பரிமாணத்தை காட்டினார். அவரை சாகிற வரைக்கும் என்னால மறக்க முடியாது என்று வடிவேலு நன்றியுணர்வுடன் நினைவு கூர்ந்துள்ளார்.
வடிவேலுக்கு கமலின் தேவர் மகன் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்த பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. ஏன் கமல் வடிவேலுக்கு மறுபடியும் தனது படத்தில் வாய்ப்பு தரவில்லை என்ற கேள்வி நெடுங்காலமாக திரையுலகில் இருந்து வருகிறது. கமல் மீண்டும் நடிக்க அழைத்தார், கால்ஷீட் இல்லை என்று வடிவேலு பிகு செய்தார் என ஒரு வதந்தி முன்பு நிலவியது. இது உண்மையா என்பது தெரியாது. சுந்தர் சி உட்பட தனது திரை வாழ்க்கையின் ஏற்றத்திற்கு காரணமாக அமைந்த அனைவருடனும் வடிவேலு பகை கொண்டார் என்பது இன்னொரு குற்றச்சாட்டு. அதில் கமலும் ஒருவர் என்கிறார்கள்.