சென்ற வருடம் வெளியான இரண்டு தமிழ் வெற்றிப் படங்கள் டாக்டர், மாநாடு. இந்த இரு படங்களும் உலக அளவில் தலா 100 கோடிகள் வசூலித்தன. இது சாதனையாக பார்க்கப்பட்டது. அப்படியே தெலுங்கு சினிமாவுக்கு வந்தால் தெலுங்கானாவின் நிசாம் ஏரியாவில் மட்டும் ஆர்ஆர்ஆர் படம் 100 கோடியை வசூலித்துள்ளது. இது கிராஸ் வசூல் அல்ல. வரிகள் போக உள்ள நெட் கலெக்ஷன். நிசாம் ஏரியா என்பது தமிழ்நாட்டில் , நார்த், சௌத் ஆற்காடு, , , உள்பட ஒன்பது ஏரியாக்கள் இருக்கிறது அல்லவா. அதேபோல் தெலுங்கானாவின் ஒரு ஏரியா. அந்த ஏரியாவில் மட்டும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் டாக்டர், மாநாடு படங்களின் உலகளாவிய வசூலை தாண்டி வசூலித்துள்ளது.
டாக்டர், மாநாடு படங்களுடன் ஆர்ஆர்ஆர் படத்தை ஒப்பிட முடியாது. ஆர்ஆர்ஆர் படத்தின் சந்தை மதிப்பு மற்ற இரு படங்களைவிட பல மடங்கு அதிகம். எனினும் தெலுங்கானாவின் ஒரேயொரு ஏரியாவில் 100 கோடிகள் நெட் கலெக்ஷனை ஒரு படம் பெற முடிகிறது என்றால், அது சந்தை மதிப்பை மட்டும் சார்ந்தது அல்ல. அதற்கு மேல் ஒன்று உள்ளது. அது திரையரங்குகள்.
தமிழகத்தில் உள்ளதைவிட, ஆந்திரா, தெலுங்கானாவின் திரையரங்குகள் எண்ணிக்கை அதிகம். அவர்கள் இன்றும் திரையரங்குகளின் எண்ணிக்கையை குறையாமல் பாதுகாத்து வருகிறார்கள். தமிழக நிலைமை தலைகீழாக உள்ளது. 1967 செப்டம்பர் மாதம் சென்னையில் ஓடிய படங்களின் பட்டியலைப் பார்க்கையில் நமக்கு ஒரு விவரம் தெரிய வருகிறது. அன்று சென்னையில் இயங்கி வந்த திரையரங்குகளில் கேஸினோ திரையரங்கு தவிர்த்து ஒரு திரையரங்குகூட இன்று இல்லை. அதற்குப் பதில் நிறைய எண்ணிக்கையில் மல்டிபிளக்ஸ் வந்துள்ளன என்பது உண்மை தான். எனினும் தனி திரையரங்குகள் தமிழகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமலாகி வருகின்றன. சென்னையில் அவை பூஜ்ஜியத்தை நோக்கி வருகின்றன.
சென்னையில் இயங்கி வந்த ஸ்டார், மேகலா, பிராட்வே, பிளாசா, கபாலி, ராம் போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் அடித்தட்டு மக்களின் கேளிக்கை இடங்களாக இருந்தன. நகரமயமாதலில் முதலில் பலியானவை இந்த தனி திரையரங்குகள். ஸ்டார், மேகா, கெயிட்டி போன்ற திரையரங்குகள் கடைசிவரை போராடிப் பார்த்தன. ஒருகட்டத்திற்கு மேல் அவையும் இடிக்கப்பட்டு கார் ஷோரும், கல்யாண மண்டபம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என மாறின.
இந்தத் திரையரங்குகளில் படங்களை ஆரவாரமாக கண்டு ரசித்தவர்கள் ரோட்டோரமாக வசிக்கும் வீடு இல்லாத ஏழை மக்களும், ரிக்ஷா ஓட்டிகள், தினக்கூலிகள் போன்ற விளிம்புநிலை மக்களும் தான். இவர்களால் இன்று தனித் திரையரங்குகளுக்கு மாற்றாக வந்திருக்கும் மல்டிபிளக்ஸ்களில் படம் பார்க்க இயலாது. அவற்றின் பகட்டும், பல மடங்கு அதிக டிக்கெட் கட்டணமும் இந்த மக்களை அதற்குள் அனுமதிக்காது. பெரும்பான்மையான மக்கள் சினிமா பார்ப்பதற்கான வழியை தனித்திரையரங்குகளை மூடியதன் மூலம் தடை செய்திருக்கிறோம்.
சென்னையில் தனித்திரையரங்குகளுக்கு ஏற்பட்ட நிலை பிற நகரங்களுக்கும் பரவியிருக்கிறது. தனித்திரையரங்குகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது தமிழ்நாடு திரைப்பட வர்த்தகத்தில் நிலவும் சூதாட்டத்தன்மை. திரையரங்குகள் எத்தனை ரூபாய் அதிக கட்டணம் வைத்து விற்றாலும் இங்குள்ள அரசோ, அதிகாரிகளோ கண்டு கொள்வதில்லை.
இதனால், திரையரங்குகளுக்கு கலெக்ஷனை தரும் முன்னணி நட்சத்திரங்களின் படங்களை தனித்திரையரங்குகளுக்கு கட்டுப்படியாகாத தொகைக்கு தருகிறார்கள். திரையரங்குகள் இதனால் பல மடங்கு அதிக கட்டணம் வைத்து டிக்கெட்டுகளை விற்கின்றன. இந்த கொள்ளையில் கசப்புற்று கணிசமான பார்வையாளர்கள் திரையரங்குக்கு வருவதையே தவிர்த்து விடுகிறார்கள்.
அதிக கட்டணத்துக்கு டிக்கெட் விற்க முடியாது எனும் போது, திரையரங்குகளுக்கு கட்டுப்படியாகாத விலையில் தயாரிப்பாளர்கள் படத்தை தருவது தடைபடும். அரசு நிர்ணயித்த கட்டணத்தை திரையரங்குகள் வசூலிக்கையில் அதிக பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள். முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் மட்டுமின்றி சின்ன பட்ஜெட் படங்களும் பிழைக்கும்.