சி.வி.ஸ்ரீதரும், சித்ராலயா கோபு என்கிற சடகோபனும் பள்ளித் தோழர்கள். செங்கல்பட்டு புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போதே ஸ்ரீதரும் சித்ராலயா கோபுவும் நாடகங்கள் எழுதியுள்ளனர். ஸ்ரீதரின் கதையில் காதலும், சென்டிமெண்டும் நிறைந்திருக்கும். கோபுவின் கதைகளில் நகைச்சுவை நிரம்பி வழியும். ஸ்ரீதர் படம் இயக்க ஆரம்பித்ததும் கோபுவையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.
ஒருமுறை, காமெடிப் படம் பண்ணறியா என்று கோபு கேட்க, ஸ்ரீதர் யோசிக்காமல் ஒப்புக் கொண்டார். அதுவரை ஸ்ரீதர் முழுநீள காமெடிப் படம் இயக்கியதில்லை. அவரது படங்கள் நகைச்சுவைக்கு எதிர்திசையில் இருக்கும். மெரினா பீச்சின் காந்தி சிலைக்குப் பின்புறம்தான் அவர்கள் சினிமா குறித்து விவாதிக்கும் இடம். அங்குதான் ஸ்ரீதரின் காலத்தால் அழியாத பல காவியங்கள் உருவாகின.
விஸ்வநாதன் என்கிற பெரும் பணக்காரர் தனது மகள்கள் காஞ்சனா, நிர்மலா இருவரையும் அவரைவிட பெரும் பணக்கார இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புவார். ஆனால், நிர்மலா அவரிடம் வேலை பார்த்த, தற்போது வேலையின்றி இருக்கும் அசோக்கை காதலிப்பாள். விஸ்வநாதனை சரிகட்ட, தனது நண்பன் வாசுவை தனது பணக்கார தந்தை போல் வேஷமிட்டு அழைத்து வருவான்.
விஸ்வநான் வேடத்தில் பாலையாவும், செல்லப்பா வேடத்தில் நாகேஷையும் ஸ்ரீதர் நடிக்க வைத்தார். நாகேஷ் பாலையாவிடம் ஹாரர் கதை சொல்லும் காட்சி இன்றும் சிரிப்பை வரழைக்கும் எவர்கிரீன் காமெடி. முன்னணி நட்சத்திரங்களை தவிர்க்க வேண்டும் என்று முடிவு செய்த ஸ்ரீதர், அசோக் வேடத்தில் நடிக்க சிவகுமார், தெலுங்கு நடிகர் கிருஷ்ணா என பலருக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்தார். சிவகுமாருக்கு குழந்தைத்தனமான முகம் என்று அவரை நிராகரித்தார். கிருஷ்ணாவுக்கு தமிழ் உச்சரிக்க வரவில்லை.
இறுதியில் சென்னை மெடிகல் காலேஜில் சேருவதற்காக வந்த பி.எஸ்.ராமனை மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்த்து, அவரைப் பிடித்துப்போக, அசோக் வேடத்தில் நடிக்க வைத்தார். அந்த பி.எஸ்.ராமன்தான் பிரபல நடிகர் ரவிச்சந்திரன். நிர்மலா வேடத்திற்கு வெண்ணிற ஆடை நிர்மலாவை ஒப்பந்தம் செய்து, அனுபவம் புதுமை பாடலை படமாக்கினர். அவருக்கு சரியாக ஆட வராததால் அவரை நீக்கிவிட்டு ராஜஸ்ரீயை நிர்மலா வேடத்தில் நடிக்க வைத்தனர்.
ஏர் ஹோஸ்டசாக இருந்த வசுந்தரா தேவியை மேக்கப் டெஸ்ட் எடுத்து காஞ்சனா வேடத்தில் நடிக்க வைத்தார் ஸ்ரீதர். வைஜெயந்திமாலாவின் அம்மா, நடிகை வசுந்தராதேவியுடன் ஏர் ஹோஸ்டஸ் வசுந்தராதேவியும் சேர்ந்து பெயர் குழப்பம் ஏற்படும் என தனது கதாபாத்திரப் பெயரான காஞ்சனாவை வசுந்தராதேவிக்கு சூட்டினார். பிறகு அதுவே அவரது நிரந்தர பெயரானது. அப்படி காஞ்சனாவுக்கும் காதலிக்க நேரமில்லை முதல் படமானது.அவருக்கு ஜோடியாக முத்துராமனை ஒப்பந்தம் செய்தனர்.
சச்சு முதலில் மீனலோசினி வேடத்தில் நடிக்க விரும்பவில்லை. நகைச்சுவை வேடம், எப்படி இருக்குமே என்ற தயக்கம். இது கதையோடு சேர்ந்து வருகிற காட்சிதான், படம் முழுக்க வரும், ராஜஸ்ரீ - ரவிச்சந்திரன், காஞ்சனா - முத்துராமன் வரிசையில் சச்சு - நாகேஷ் மூன்றாவது ஜோடி எனப் பேசி அவரை சம்மதிக்க வைத்தார்.
படத்தின் பெரும்பாலான கதை நடக்கும் விஸ்வநாதனின் பங்களா ஆழியார் அணையில் உள்ள விருந்தினர் மாளிகை. பலமுறை இங்கே ஸ்ரீதர் கதை எழுத தங்கியுள்ளார். ஒரு பாடலை மெரினா கடற்கரையில் படமாக்கினர். அந்தக் காலத்தில் ஈஸ்ட்மென் கலரில் வெளியான முழுநீள நகைச்சுவை படம் இதுதான்.
விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 175 நாள்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கண்டது. இந்தப் படத்துக்குப் பின் நாகேஷ் - சச்சு காம்பினேஷனில் பல படங்கள் வந்தன. காஞ்சனாவும், ரவிச்சந்திரனும் முன்னணி நட்சத்திரங்களாயினர். இவர்கள் இணைந்து நடித்த அதே கண்கள், உத்தரவின்றி உள்ளே வா, காதல் ஜோதி, தேடிவந்த திருமகள், நாலும் தெரிந்தவன் உள்பட பல படங்கள் வெற்றி பெற்றன. காஞ்சனா, ரவிச்சந்திரன் என்ற நட்சத்திரங்களை உருவாக்கிய, நாகேஷ் - சச்சு என்ற நகைச்சுவை ஜோடிக்கு தொடக்கமாக அமைந்த, பல விஷயங்களுக்கு ட்ரெண்ட் செட்டராக விளங்கிய காதலிக்க நேரமில்லை, 59 வருடங்களுக்கு முன், 1964, பிப்ரவரி 27 இதே நாளில் வெளியானது. இன்றும் நம்மை சிரிக்க வைக்கும் புத்துணர்வுடன் படம் இருப்பதே காதலிக்க நேரமில்லையின் தனித்தன்மை எனலாம்.