தமிழின் சிறந்த படம் எது என்று கேட்டால் நாற்பது நாற்பத்தைந்து வருடங்கள் பின்னோக்கி போய், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் என்கிறார்கள். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இந்தப் படங்களை தாண்டுகிற தரத்தில் சொற்பமான படங்களே வந்திருக்கின்றன. தமிழின் தலைசிறந்த படங்களை தந்த இயக்குநர் மகேந்திரன் எளிமையான, வெளிப்படையான, சந்தர்ப்பவாதங்களில் சிக்காத நேர்மையான மனிதர்.
அந்த நோஞ்சான் பையன் கையில் கிடைத்த அனைத்தையும் படித்தான். பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டான், நாடகங்கள் போட்டான். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் மகேந்திரன் படித்துக் கொண்டிருந்த போது நாடோடி மன்னன் வெளியாகி வெற்றி பெற்றது. அதனை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் கூட்டம் நடத்தி வந்த எம்ஜிஆர் காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கும் வந்தார். அவர் கலந்து கொண்ட விழாவில் மாணவனாக மகேந்திரன் பேசினார்.
"நாம காதலிக்க எவ்வளவு கஷ்டப்படுறோம். நோட்டீஸ் போர்டுல பெயரை எழுதி வச்சிடறாங்க. ஆனா, இவர் (எம்ஜிஆர்) எவ்வளவு ஈஸியா லவ் பண்றார்..." என்று தொடங்கி, நாடோடி மன்னன் உள்ளிட்ட எம்ஜிஆர் படங்களின் க்ளிஷேக்களை பட்டியலிட்டிருக்கிறார். எம்ஜிஆர் முன்னிலையில் இப்படி யாரும் பேசியிருக்க மாட்டார்கள். பேசி முடித்து மேடையை விட்டு இறங்குகையில் எம்ஜிஆர் இவரை அழைத்து ஒரு பேப்பரில் பாராட்டி எழுதி தந்திருக்கிறார்.
மகேந்திரனின் குடும்பம் வறுமையுடன் போராடியது. சென்னையில் சட்டம் படிக்கையில் பொருளாதார காரணங்களால் படிப்பை பாதியில் நிறுத்தினார் மகேந்திரன். ஊருக்கு கிளம்புகையில் சி.பி.சிற்றரசின் இடி முழக்கம் பத்திரிகையில் வேலை கிடைக்க, ஊருக்குப் போகும் திட்டத்தை ஒத்தி வைத்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் எம்ஜிஆர் இவரைப் பார்த்து, அடையாளம் கண்டு, பொன்னியின் செல்வன் நாவலுக்கு திரைக்கதை எழுத பணித்தார். மகேந்திரனும் எழுதினார்.
ஆனால், அந்த முயற்சி சினிமாவாகவில்லை. அதன் பிறகு பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதினார். எந்த மாதிரி சினிமாவை விமர்சித்தமோ அதுபோன்ற சினிமாவையே உருவாக்க வேண்டியிருக்கே என்று வெறுத்துப் போன நேரத்தில், சோ கேட்டுக் கொண்டதால் அவரது துக்ளக் பத்திரிகையில் பணி செய்தார். சினிமாவிலிருந்து முற்றிலும் தன்னை துண்டித்து மூன்று வருடங்களுக்கு மேல் பத்திரிகையில் பணயாற்றி வந்த நேரம், நடிகர் செந்தாமரை எதேச்சையாக பத்திரிகை அலுவலகத்தில் இவரை சந்திக்க, இவர் சொன்ன ஒருவரி கதை பிடித்து அதனை நாடகமாக எழுதித்தர கேட்க, மீண்டும் திரைக்கதை எழுத ஆரம்பித்தார்.
அந்த நாடகம் 100 முறைக்கு மேல் மேடையேறியது. அதனைப் பார்த்த சிவாஜி நாடகம் பிடித்துப்போய், அதன் உரிமையை வாங்கி சில பல மாற்றங்கள் செய்ய வைத்து, தனது நடிப்பில் அரங்கேற்றினார். அதுதான் தங்கப்பதக்கம். நாடகத்தில் மேலும் பல மாற்றங்கள் செய்து அதனை படமாக்கினர். படம் வெற்றி பெற்றது. ஆனால், மகேந்திரனுக்கு படத்தில் செய்த மாற்றத்தில் இறுதிவரை உடன்பாடு இருக்கவில்லை.
எஸ்பி முத்துராமனின் மோகம் முப்பது நாள் (கமல்), ஆடு புலி ஆட்டம் (கமல், ரஜினி) படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதுகையில் கமல், ரஜினி பழக்கமாகிறார்கள். மகேந்திரன் சிகரெட் பிடிப்பார் என்பதால் புகைவிடும் நேரத்தில் ரஜினி - மகேந்திரன் நட்பு பலப்படுகிறது. வேணு செட்டியாருக்காக உமா சந்திரனின் நாவலை திரைக்கதையாக்குகிறார். அதனை அவரையே படம் பண்ணச் சொல்ல, முள்ளும் மலரும் படத்தின் மூலம் இயக்குனரானார் மகேந்திரன். புதுமைப்பித்தனின் சிற்றன்னை சிறுகதையை தழுவி உதிரிப்பூக்கள் எடுத்தார். பூட்டாத பூட்டுக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, நண்டு, மெட்டி, அழகிய கண்ணே, கை கொடுக்கும் கை, கண்ணுக்கு மை எழுது, ஊர் பஞ்சாயத்து என வரிசையாக படங்கள் இயக்கினார்.