வருடத்துக்கு ஒரு வெற்றிப் படம் கொடுக்கவே நாக்கு தள்ளிவிடுகிறது. பாக்யராஜ் ஒரே வருடத்தில் நான்கு வெற்றிப் படங்கள் கொடுத்திருக்கிறார். இந்த நான்கிலும் அவர்தான் நாயகன். தவிர படத்தின் கதாசிரியரும் இவரே. இதுபோன்ற சாதனை இந்திய சினிமாவிலேயே ரொம்பவும் அரிது. பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த பாக்யராஜ், பாரதிராஜாவின் சிவப்பு ரோஜாக்கள் படத்தின் கதையை எழுதினார். புதிய வார்ப்புகள் படத்தின் கதையை எழுதியதுடன் நாயகனாக நடிக்கவும் செய்தார்.
1979 இல் சுவரில்லாத சித்திரங்கள் மூலம் இயக்குனரானார். இரண்டாவது படம் ஒரு கை ஓசை, 1980 இல் வெளியானது. 1981 ஜனவரி 23 ஆம் தேதி பாக்யராஜ் எழுதி, இயக்கி, நடித்த மௌன கீதங்கள் வெளியானது. ஜெயகாந்தனின் உண்மை சுடும் சிறுகதையின் இன்ஸ்பிரேஷனில் இந்தப் படத்தின் கதையை பாக்யராஜ் எழுதியிருந்தார். பாக்யராஜுடன் சரிதா நடித்த இந்தப் படம் வெளியாகி 25 வாரங்கள் ஓடியது. கங்கை அமரன் இசையில் மூக்குத்தி பூமேலே, டாடி டாடி, மாசமோ மார்கழி மாசம் ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன.
இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் ரீமேக்கும் செய்யப்பட்டது. மௌன கீதங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கையில் மார்ச் 27 ஆம் தேதி பாக்யராஜின் இன்று போய் நாளை வா வெளியானது. எதிர்வீட்டில் புதிதாக குடியேறும் இளம் பெண்ணை நண்பர்கள் மூவர் போட்டிப் போட்டு காதலிப்பதுதான் கதை. அந்தப் பெண்ணை கவர அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் திரையரங்கை சிரிப்பலையில் அதிர வைத்தது. இளைஞர்கள் படத்தை கொண்டாடித் தீர்த்தனர். படம் 175 நாள்களை கடந்து ஓடியது.
மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா படங்கள் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த நிலையில் 1981 மே 8 ஆம் தேதி பாக்யராஜின் விடியும்வரை காத்திரு வெளியானது. இதுவொரு க்ரைம் த்ரில்லர். பணத்துக்காக மனைவியை கொலை செய்ய திட்டமிடும் எதிர்மறை கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நடித்திருந்தார். அப்பாவி மனைவியாக சத்யாகலா. காமெடி வேடங்களில் பார்த்திருந்த பாக்யராஜை மனைவியை கொலை செய்ய திட்டமிடும் வில்லன் வேடத்தில் பார்த்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. இந்தப் படம் 100 நாள்கள் ஓடி வெற்றியை பதிவு செய்தது. 1981 முதல் அரை வருடத்திலேயே மூன்று வெற்றிப் படங்கள். அதில் இரண்டு சில்வர் ஜுப்லி.
அதே வருடம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 26 ஆம் தேதி பாக்யராஜின் அடுத்தப் படம், அந்த 7 நாட்கள் வெளியானது. அம்பிகா நாயகியாக நடிக்க, மலையாள இசைக்கலைஞனாக பாக்யராஜ் நடித்தார். முக்கியமான வேடத்தில் ராஜேஷ். இந்தப் படத்துக்கு மெல்லிசை மன்னர் இசையமைத்தார். கவிதை அரங்கேரும் நேரம், எண்ணி இருந்தது, தென்றல் அது உன்னிடத்தில் ஆகிய காலத்தால் அழியாத பாடல்கள் கிடைத்தன. என்னுடைய காதலி உங்க மனைவியாகலாம், ஆனா, உங்க மனைவி ஒருகாலத்திலும் என்னுடைய காதலியாக முடியாது என்ற கிளைமாக்ஸ் பன்ச் டயலாக் அப்போது பிரபலம். இந்தப் படமும் வெள்ளிவிழா கண்டது. ஒருவர் எழுதி, இயக்கி நடித்தப் படங்கள் ஒரே வருடத்தில் நான்கு வெளியாவதே அதிசயம். அந்த நான்கும் வெற்றிப் படங்களாக அமைவதும், அதில் மூன்று எவர்கிரீன் வெற்றிகளாக இப்போதும் தொடர்வதும் தமிழ் சினிமாவில் பாக்யராஜ் மட்டுமே செய்த சாதனை.