ஹேமமாலினியின் சொந்த ஊர் திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம். அப்பாவுக்கு வேலை டெல்லியில் என்பதால் 12 வயதுவரை அவர் டெல்லியில் வளர்ந்தார். அதன் பிறகு சென்னைவாசம். சின்ன வயதிலிருந்து நடனம் கற்று வந்ததால் 1963 இல் ஜிஎன் வேலுமணியின் சரவணா பிக்சர்ஸ் தயாரித்த, இது சத்தியம் படத்தில் நடனமாட வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் அசோகன், சந்திரகாந்தா நடித்திருந்தனர்.
1965 இல் பாண்டவ வனவாசம் தெலுங்குப் படத்தில் ஒரு பாடலுக்கு ஹேமமாலினி நடமாடினார். 1968 இல் இந்தியில் ராஜ் கபூரின், சப்னோம்கி சவுதாகர் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். படம் சுமாராகப் போனாலும் ஹேமமாலினியின் தோற்றமும், வனப்பும் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது. 1970 இல் தர்மேந்திராவுடன் முதல்முறையாக ஜோடியாக நடித்தார். அந்த வருட இறுதியில் தேவ் ஆனந்துடன் நடித்த, ஜானி மேரா நாம் திரைப்படம் அவரை இந்தியின் கனவுக் கன்னியாக உயர்த்தியது.
1970 க்குப் பிறகு வருடத்துக்கு இரண்டு படங்களாவது தர்மேந்திரா - ஹேமமாலினி ஜோடியின் நடிப்பில் வெளியானது. ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள தர்மேந்திராவும், ஹேமமாலினியும் காதலிக்க ஆரம்பித்தனர். ஹேமமாலினியின் பெற்றோருக்கு இந்த காதலில் விருப்பமில்லை. எப்படி தர்மேந்திராவை கழற்றிவிடுவது என்று அவர்களுக்கு தெரியவில்லை.
இந்த காலகட்டத்தில் ஹேமமாலினியுடன் ஜிதேந்திராவும் தொடர்ச்சியாக நடித்து வந்தார். அவருக்கு ஹேமமாலினி மீது ஒரு 'க்ரெஷ்' இருப்பதை அறிந்த ஹேமமாலினியின் பெற்றோர், தர்மேந்திராவுக்குப் பதில் ஜிதேந்திரா என்ற சாய்ஸை ஹேமமாலினியின் முன் வைத்தனர். ஜிதேந்திராவும் முன்னணி நடிகர், முக்கியமாக திருமணம் ஆகாதவர். தனது பெற்றோருக்கும் அதில் சம்மதம் என்பதால் ஹேமமாலினியும் அரைகுறையாக ஒப்புதல் அளித்தார்.
மும்பையில் திருமணத்தை நடத்தினால் பிரச்சனையாகும் என சென்னையில் திருமண ஏற்பாடுகளை செய்தனர். இதனை அறிந்த தர்மேந்திரா உடனடியாக சென்னைக்கு பறந்து வந்தார். ஹேமமாலினியின் பெற்றோர் தர்மேந்திராவை கழற்றிவிட எப்படி ஜிதேந்திராவை ஒரு சாய்சாக வைத்தார்களோ அப்படி தர்மேந்திராவும் ஒருவரை தன்னுடன் அழைத்து வந்தார். அவர் ஷோபா. ஏர்ஹோஸ்டசாக இருந்த ஷோபாவை ஜிதேந்திரா காதலித்து வந்தார். ஹேமமாலினியை திருமணம் செய்ய வாய்ப்பு கிடைத்ததும் ஷோபாவை உதறிவிட்டு வந்திருந்தார்.