தனுஷ் தற்போது திருச்சிற்றம்பலம், மாறன் படங்களில் ஒரேநேரத்தில் நடித்து வருகிறார். இதில் முதலில் ஆரம்பிக்கப்பட்டது மாறன். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. க்ரேமேன் ஹாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்து தனுஷ் சென்னை திரும்பிய மறுநாளே ஹைதராபாத்தில் நடந்து வந்த மாறன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். முக்கியமான காட்சிகள் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டன. அதில் பாடல் காட்சியும் உண்டு. மாளவிகா மோகன் நாயகி. இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில் மகேந்திரன் நெகடிவ் சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், கிருஷ்ணகுமார் ஆகியோரும் நடிக்கின்றனர். தனுஷ், மாளவிகா மோகன் இருவரும் பத்திரிகையாளர்களாக நடிப்பதாக கூறப்படுகிறது. தனுஷின் 43 வது படமாக தயாராகிவரும் மாறனின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. பதினைந்து தினங்கள் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்கும் என கூறப்படுகிறது. அத்துடன் மொத்தக் காட்சிகளும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பமாகும். மாறனுக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க விவேக், கார்த்திக் நரேன் பாடல்கள் எழுதுகின்றனர்.