விலங்குகளை வைத்து படமெடுப்பவர் என்றால் இளைய தலைமுறைக்கு யாரும் நினைவுக்கு வர மாட்டார்கள். முந்தைய தலைமுறைக்கு சட்டென்று நினைவுக்கு வருகிறவர் ராம.நாராயணன். நடிகர்கள் அலுத்துப்போய் பாம்பு, குரங்கு, நாய், யானை என்று வாயில்லா ஜீவன்களை வைத்து வாயுள்ள ஜீவன்களை மகிழ்ச்சிப்படுத்தினார். அவருக்கு முன்னோடி சாண்டோ சின்னப்ப தேவர். எம்ஜிஆர், ரஜினி, கமல் என்று முன்னணி நடிகர்களை வைத்து ஏராளமான படங்கள் தயாரித்தவர். இவர் படங்களில் நாயகனுக்கு இணையாக விலங்குகளும் வரும். ஆட்டுக்கார அலமேலு படத்தில் சிவகுமார், ஸ்ரீப்ரியா இருந்தாலும் ஸ்ரீப்ரியா வளர்க்கும் கிடா ஆடுதான் படத்தின் பிரதான நாயகன். வெற்றி விழாவில் அந்த ஆட்டை ஊர் ஊராக கொண்டு சென்று ரசிகர்களை கள்வெறி கொள்ளச் செய்தார்.
தமிழில் தொடர்ச்சியாக வெற்றிப் படங்கள் கொடுத்து வந்த தேவர் 1971 இல் ஹாத்தி மேரே சாத்தி என்ற இந்திப் படத்தை தயாரித்தார். இவர் 1967 இல் தமிழில் எடுத்த தெய்வச் செயல் படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். தேவரின் இளைய தம்பி எம்.ஏ.திருமுகம் படத்தை இயக்க, ராஜேஷ் கன்னா, தனுஜா நடித்தனர். படம் பம்பர்ஹிட்டானதுடன், அந்த வருடம் இந்தியில் வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. இதனால் குஷியாக தேவர் இந்திப் படத்தை தமிழில் எம்ஜிஆரை வைத்து நல்ல நேரம் என்ற பெயரில் எடுத்தார். ஏற்கனவே தமிழில் இதே கதையில் படம் வெளியாகியிருந்தும் நல்ல நேரம் வெற்றி பெற்றது.
இந்தப் படங்களைத் தொடர்ந்து தேவர் பசுவை வைத்து படம் எடுக்க திட்டமிட்டார். பசு இந்துக்கள் புனிதமாக கருதும் விலங்கு. அதனால், பசுவை மையப்படுத்தி கதை எழுதச் சொன்னார். இதுபோன்ற விலங்குப் படங்களுக்கென்று ஒரு பேட்டர்ன் உண்டு. விலங்குகளை நாயகன் செல்லமாக வளர்ப்பார், அது நாயகிக்கு பிடிக்காது. இல்லை நாயகிக்கு விலங்குகள் பிடிக்கும், நாயகன் அவற்றை வெறுப்பார். விலங்குகளை மையப்படுத்திய படங்களின் இந்த அரசியலை இன்னும் அழுத்தமாக தனது புதிய படத்தில் வைத்தார் தேவர். அந்தப் படம்தான் கோமாதா என் குலமாதா.
இதில் வரும் பசுவை நாயகி பிரமிளாவுக்கு பிடிக்கும், நாயகன் ஸ்ரீகாந்த் அதனை வெறுப்பார். இந்தப் படத்தில் நடிக்கையில் பாலசந்தரின் அரங்கேற்றம் படத்தில் நடிக்க பிரமிளாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. 1973 பிப்ரவரியில் வெளியான அரங்கேற்றம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால், கோமாதா என் குலமாதா படப்பிடிப்புக்கு சரியாக கால்ஷீட் தராமல் சொதப்பினார் பிரமிளா. தேவர் அவரை கடிந்து கொண்டார். பிறகு ஒருவழியாக படம் முடிந்தது. அரங்கேற்றம் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட பிரமிளா, விழாவின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான தேவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டார்.
கோமாதா என் குலமாதாவில் நடித்த பசுவை திறமையாக வேலை வாங்கியிருந்தார்கள். தண்டவாளம் துண்டாக்கப்பட்டதைப் பார்த்து, சிவப்பு விளக்குடன் சென்று பசு ரயிலை நிறுத்தும். கெட்டவரான ஸ்ரீகாந்தை நாயகி பிரமிளா திருமணம் செய்ய முடிவெடுக்கையில் அவர் புடவையை இழுத்து எச்சரிக்கும். முதலிரவில் கணவனின் சுயரூபம் தெரிந்து பிரமிளா அழுகையில் அவரை தேற்றும்.
படத்தின் இறுதிக்காட்சியை பிரமாண்டமாக எடுக்க நினைத்த தேவர் மைசூரில் உள்ள அரசு பால் பண்ணையில் அனுமதி பெற்று அங்குள்ள நூற்றுக்கணக்கான மாடுகளை நடிக்க வைத்தார். ஸ்ரீகாந்தும், அவரது காதலியான பானுமதியும் ஜீப்பில் செல்கையில் பிரமிளாவின் பசு மற்ற பசுக்களை அழைத்து வந்து அவர்களை துரத்தும். கௌபாய் படங்களைப் போல நூற்றுக்கணக்கில் மாடுகள் புற்றீசல் போல் கிளம்பி வந்தது அன்றைய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இறுதியில் காதலியும், அவள் அண்ணனும் ஸ்ரீகாந்தை அம்போவென விட்டுப்போக, பிரமிளா அவரை காப்பாற்ற, அவரது பசு மற்ற பசுக்களை பார்த்து தலையாட்டி, போதும்பா உங்க சர்வீஸ், அவங்க ஒண்ணாயிட்டாங்க என்று சமாதானம் செய்து அனுப்பி வைக்கும்.