சின்னப்ப தேவரின் குடும்பம் பெரியது. மொத்தம் ஐந்து சகோதரர்கள். அதில் மூத்தவர் சுப்பையா தேவர். அடுத்த சின்னப்ப தேவர், மூன்றாவது நடராஜர் தேவர், நான்காவது ஆறுமுக தேவர் கடைசியில் மாரியப்பன் தேவர். இவர்கள் அனைவருக்கும் இன்சியல் எம் ஏ என்றிருக்கும். சின்னப்ப தேவருக்கு மட்டும் ஒரு எம் அதிகமாக எம்எம்ஏ சின்னப்ப தேவர் என்று இருக்கும். முருக பக்தரான சின்னப்ப தேவர் தனது ஊர் அருகில் உள்ள மருதமலை முருகன் மருதாச்சலம் மூர்த்தி மீது கொண்ட பக்தியின் காரணமாக தனது இனிஷியலில் இன்னொரு எம் சேர்த்து எம் எம் ஏ சின்னப்ப தேவர் ஆனார்.
சின்னப்ப தேவர் கோவையில் இயங்கி வந்த ஜூபிடர் பிக்சர்ஸின் திரைப்படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தார். அவரது தம்பி திருமுகம் ஜுபிடர் பிக்சர்ஸில் எடிட்டராக இருந்த சுந்தரத்திடம் உதவியாளராக சேர்ந்து எடிட்டிங் தொழில்நுட்பத்தை கற்றுத் தேர்ந்தார். ஜூபிடர் பிக்சர்ஸ் சென்னைக்கு இடம்பெயர்ந்து நெப்டியூன் ஸ்டுடியோ என்ற பெயரில் இயங்கிய போது, திருமுகமும் சென்னைக்கு இடம் மாறினார். அவரைத் தொடர்ந்து சின்னப்ப தேவரும் சென்னை வந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தேவர் பிலிம்ஸ் என்ற பெயரில் தொடங்கினார். எடிட்டராக இருந்த தனது தம்பி எம் ஏ திருமுகத்தை இயக்குனராக்கி எம்ஜிஆர் பானுமதி நடிப்பில் தாய்க்கு பின் தாரம் திரைப்படத்தை தயாரித்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அதனைத் தொடர்ந்து தனது தம்பியின் இயக்கத்தில் நீலமலைத் திருடன் திரைப்படத்தை தயாரித்தார். அந்த படமும் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. சாண்டோ சின்னப்ப தேவர் கோபக்காரர். அனைத்து விஷயங்களிலும் தலையிடுகிறவர். தயாரிப்பாளராக தனது தம்பி திருமுகத்தின் இயக்குனர் வேலையில் அவர் தலையிட்டதால் இருவருக்கும் இடையில் உரசல் ஏற்பட்டது. இதனால் தனது மூன்றாவது திரைப்படத்தில் திருமுகத்தை தவிர்த்தார் தேவர்.
பி ஆர் ரெட்டி இயக்கத்தில் கன்னட நடிகர் உதயகுமார், சரோஜாதேவி நடிப்பில் செங்கோட்டை சிங்கம் என்ற படத்தை தயாரித்தார். இந்தப் பாடம் தமிழகத்தில் சுமாராகவே போனது. அதே நேரம் கன்னடத்தில் தமிழை விட ஓரளவு நல்ல வெற்றியை பெற்றது. இதற்கு காரணம் உதயகுமார், சரோஜாதேவி இருவருமே கன்னட நடிகர்கள். முதல் இரு திரைப்படங்களுடன் ஒப்பிடுகையில் சின்னப்ப தேவரின் மூன்றாவது திரைப்படம் செங்கோட்டை சிங்கம் மிகச் சுமாரான படம்.
இந்த நேரத்தில் தேவரின் மூத்த சகோதரரும் அவரது இளைய சகோதரரும் சென்னை வந்து, சின்னப்ப தேவர் திருமுகம் இருவருக்கும் இடையிலான ஈகோதன சண்டையை பேசி தீர்த்து வைத்தனர். தொடர்ந்து இருவரும் சேர்ந்து பணியாற்றுவது என முடிவானது. இந்த நேரத்தில் நடிகரும் தேவரின் நண்பருமான ராஜு என்பவரின் மூலம் தேவரிடம் ஆரூர் தாஸ் அறிமுகமானார். அப்போது அவர் டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார். ஆரூர் தாசின் பேச்சும் அதில் வெளிப்பட்ட நுட்பமும் வெளிப்படத் தன்மையும் தேவருக்கு பிடித்து போய் தனது அடுத்தப் படத்தின் கதை வசனத்தை எழுதும் பொறுப்பை ஆரூர் தாசிடம் ஒப்படைத்தார். அந்தப் படம் தான் வாழ வைத்த தெய்வம். ஆரூர் தாஸ் எழுதிய முதல் நேரடி தமிழ் திரைப்படம் இதுவாகும். இதன் பிறகு தான் அவர் ஆயிரம் தமிழ் படங்களுக்கு மேல் வசனம் எழுதினார். அதற்கு மூலைக்கல்லாக அமைந்தது வாழ வைத்த தெய்வம்.
அதே போல் செங்கோட்டை சிங்கம் படத்தின் மூலம் பின்னடைவை சந்தித்திருந்த தேவருக்கும் வாழ வைத்த தெய்வம் திருப்புமுனையாக அமைந்தது. தேவரிடம் பிரிந்து போய் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், பிள்ளைக் கனியமுது போன்ற படங்களை இயக்கிய எம் ஏ திருமுகத்திற்கும் வாழ வைத்த தெய்வம் திரைப்படம் பேரும் புகழும் பெற்று தந்தது. வாழவைத்த தெய்வம் திரைப்படத்தில் எஸ் எஸ் ராஜேந்திரன் நடிப்பதாக இருந்தது. பிறகு அவர் நடிக்க முடியாமல் போக ஆரூர் தாசின் பரிந்துரையின் பேரில் ஜெமினி கணேசனை ஒப்பந்தம் செய்தார் தேவர். அவரது செங்கோட்டை சிங்கம் திரைப்படத்தின் நடித்த சரோஜாதேவி இதிலும் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். தேவர் பிலிம்ஸின் ஆஸ்தான இசையமைப்பாளர் கே வி மகாதேவன் படத்திற்கு இசையமைத்தார்.
சின்னப்ப தேவரின் முதல் படம் தாய்க்குப் பின் தாரம் திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங் விஷயத்தில் தேவருக்கும் எம்ஜிஆர்ருக்கும் முட்டிக்கொண்டது. எம்ஜிஆர் தேவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அந்த நேரம் நாகிரெட்டியின் துணையுடன் எம்ஜிஆரின் வக்கீல் நோட்டீசை எதிர்கொண்டு அதில் வெற்றி பெற்றார் தேவர். அதிலிருந்து நண்பர்களாக இருந்த தேவரும் எம்ஜிஆர் பகைவர்களாகி பேசுவதையும் சந்திப்பதையும் தவிர்த்தனர். எம்ஜிஆர் இல்லாமல் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியும் தேவருக்கு இருந்தது. ஆரூர் தாசின் கதை வசனத்தில் உருவான வாழவைத்த தெய்வம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப் படமானது. அந்த வகையில் தேவர் பிலிம்ஸுக்கு வாழ வைத்த தெய்வம் திரைப்படத்தின் வெற்றி முக்கிய காரணமாக அமைந்தது.
இதன்பின் தொடர்ச்சியாக படங்கள் எடுத்த தேவர் பல தோல்விகளை சந்தித்து இறுதியில் 1961 எம் ஜி ஆர் உடன் இணைந்து தாய் சொல்லை தட்டாதே திரைப்படத்தை தயாரித்தார். அதன் பிறகு பல வருடங்கள் அவர்கள் பிரியாமல் இணைந்து படங்களை உருவாக்கினார்கள். இவை அனைத்திற்கும் ஏதோ ஒரு வகையில் முக்கிய புள்ளியாக வாழவைத்த தெய்வம் திரைப்படமும் அதன் வெற்றியும் அமைந்தன.