1959 இல் சி.வி.ஸ்ரீதரின் கல்யாணப் பரிசு வெளியானது. குடும்பத்திற்கு அக்கா செய்யும் தியாகத்துக்குப் பதிலாக அக்காவிற்கு தனது காதலனை விட்டுத் தரும் தங்கையின் கதை கல்யாணப் பரிசு. பத்து வருடங்கள் கழித்து 1969 இல் அதே போல் ஒரு படம் வெளியானது. படத்தின் பெயரே அக்கா தங்கைதான். சாண்டோ சின்னப்ப தேவரின் தண்டாயுதபாணி பிக்சர்ஸ் படத்தை தயாரிக்க, அவரது தம்பி எம்.ஏ.திருமுகம் படத்தை இயக்கினார்.
தேவர் - எம்ஜிஆர் பந்தம் நாடறிந்தது. எம்ஜிஆரை தவிர வேற யாரையும் வைத்து படம் தயாரிக்காமல் இருந்தார் தேவர். 1967 இல் எம்ஜிஆர் இல்லாமல் மகராசி, தெய்வச்செயல் என இரு படங்கள் எடுத்தார். அடுத்து எம்ஜிஆரை வைத்து விவசாயி, தேர்த் திருவிழா, காதல் வாகனம் படங்களை தயாரித்தார். இதில் விவசாயி தவிர மற்ற இரண்டும் தோல்விப் படங்களாயின. அதன் பிறகு ஏவிஎம் ராஜா, ஜெய்சங்கர், சிவகுமார் என பிற நடிகர்களை வைத்து தேவர் படங்கள் தயாரித்தார். இதில் அதிகப் படங்களில் நடித்தவர் ஜெய்சங்கர்.
கே.ஆர்.விஜயா படிக்கும் போதே ஜெய்சங்கரை காதலிப்பார். இந்நிலையில் நீதிபதி மேஜர் சுந்தர்ராஜனுக்கு சௌகார் ஜானகியை பேசி முடிப்பார்கள். மேஜர் சுந்தர்ராஜன் ஜெய்சங்கரின் அண்ணன். கோவைக்கு தனது தோழி பானுமதியின் திருமணத்துக்கு வரும் கே.ஆர்.விஜயா மேஜர் சுந்தர்ராஜன் ஷோபா என்ற பெண்ணை கொலை செய்வதைப் பார்ப்பார். அவரால் எதுவும் செய்ய முடியாமல் போகும்.
நாள்கள் கடந்து செல்ல, ஷோபாவை கொலை செய்தவன் என்று பானுமதியின் கணவனை கைது செய்வார்கள். தனது தோழியின் கணவனுக்காக கே.ஆர்.விஜயா ஆஜராகி வாதாடுவார். மேஜர் சுந்தர்ராஜன்தான் கொலை செய்தவர் என்ற அவரது வாதம் எடுபடும். அதற்கேற்ப அவர் ஷோபாவுடன் இருக்கும் புகைப்படம் ஆதாரமாக கிடைக்கும். ஷோபாவை அவர் கொலை செய்வதை சௌகார் ஜானகி, கே.ஆர்.விஜயா, ஜெய்சங்கர் மூவருமே பார்ப்பார்கள்.
அக்கா - தங்கை பாசம், காதல், த்ரில் என அனைத்தும் கலந்த அக்கா தங்கைப் படத்தில் கே.ஆர்.விஜயாவுக்குதான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. மேஜர் சுந்தர்ராஜன் நீதிபதி சுந்தரமாகவும், நெருப்பு கன்னையனாகவும் இரு வேடங்களில் நடித்திருந்தார். சாண்டோ சின்னப்ப தேவர் இன்ஸ்பெக்டராக ஒரு காட்சியில் வந்து போவார். பானுமதியின் அண்ணனாக நாகேஷ் நடித்திருந்தார்.
சங்கர் கணேஷ் இசையில் கண்ணதாசனும், மருகதாசியும் பாடல்கள் எழுதியிருந்தனர். எம்ஜிஆர்தான் தேவரின் வெற்றிக்கு காரணம் என்பதை அனைவரும் அறிவர். எம்ஜிஆர் இல்லாமல் நம்மால் சாதிக்க முடியும் என்ற எண்ணம் தேவருக்கு இருந்தது. அதனை உலகத்துக்கு நிரூபிக்க அவர் நினைத்தார். அக்கா தங்கை திரைப்படம் அதற்கேற்ப 100 நாள்கள் ஓடி தேவரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தது.