1975 இல் கருணாநிதி முதல்வராக இருந்த போது சென்னையில் கருணாநிதிக்கு சிலை வைக்கப்பட்டது. 1987 டிசம்பர் 24 எம்ஜிஆர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அதிகமுவினர் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பொருள்கள் சூறையாடப்பட்டன. அந்த நேரத்தில் அதிமுக விசுவாசி ஒருவர் கடப்பாரையால் கருணாநிதி சிலையை உடைத்தெறிந்தார். அதற்கு பதில் சொல்லும்விதமாக, 'அந்தத் தம்பி என முதுகில் குத்தவில்லை, மார்பில்தான் குத்தினான்' என்று உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதி பதட்டத்தை தணித்தார் கருணாநிதி.
இந்த சம்பவத்துக்குப் பின் அவர் முதல்வரான போதெல்லாம் அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனை கடைசிவரை அவர் நிராகரித்தார். அவர் மறைந்த நிலையில் தற்போது அவரது மகன் தலைமையிலான ஆட்சி நடைபெறுகையில் அரசு சார்பில் ஓமாந்தூரார் வளாகத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அதாவது, 35 வருடங்களுக்குப் பின் சிலை உடைக்கப்பட்டதற்கு அருகிலேயே புதிய சிலையை திறந்திருக்கிறார்கள்.
ராம.நாராயணன் 1981 இல் சுமை திரைப்படத்தை இயக்கி சினிமாவில் அறிமுகமானார். அதே வருடம், சிவப்பு மல்லி என்ற படத்தை சந்திரசேகர், விஜயகாந்த் நடிப்பில் இயக்கினார். அப்போது நக்சல்பாரி இயக்கம் எழுச்சிப் பெற்றிருந்த காலம். ஆந்திராவில் கம்யூனிஸ சித்தாந்தத்தை தாங்கி படங்கள் வெளிவந்தன. அப்படியொரு படம்தான் எர்ரா மல்லேலு. இந்தப் படத்தை தழுவி சிவப்பு மல்லியை ராம.நாராயணன் எடுத்தார். ஏவிஎம் தயாரித்த இப்படம் வெற்றி பெற்றது.
இதனையடுத்து அதேபோன்ற கதையம்சத்துடன் சந்திரசேகரை வைத்து அவர் இயக்கிய படம்தான் பட்டம் பறக்கட்டும். பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலையில்லாமல் படும் கஷ்டங்களை மையப்படுத்தி இந்தப் படத்தை அவர் எடுத்தார். இதில் சந்திரசேகரும் சக பட்டதாரிகளும் ஆவேசமாக, 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே..' என்று பாடல் பாடியபடி சென்னை மாநகரில் நடந்து போகும் காட்சி இடம்பெற்றிருந்தது.
சுயேட்சை எம்எல்ஏவாக எஸ்.எஸ்.சந்திரன் நடித்தார். சுத்தமான இடத்தில் நாலு துண்டு பேப்பர்களைப் போட்டு தலைவர்களை வைத்து அதனை சுத்தப்படுத்தும் நிகழ்கால அரசியல் காமெடிகளை அந்தக் காலத்திலேயே ராம.நாராயணன் படத்தில் வைத்திருந்தார். சங்கர் கணேஷ் படத்துக்கு இசையமைத்திருந்தார். படம் வெற்றி பெறவில்லை என்றாலும், இந்தப் பாடல் காட்சியால் எப்போதும் நினைக்கப்படும் படமாக மாறியுள்ளது.