

தீபாவளிக்கு பிகிலுடன் மோதும் கைதி, இந்திப் படத்தில் நடிக்கும் யோகிபாபு உள்ளிட்ட சினிமா செய்திகளின் தொகுப்பு


சுந்தர் சி இயக்கத்தில் விஷால் - தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. படத்தின் தலைப்பிற்கு ஏற்றார்போல படம் உருவாகி உள்ளதை இந்த முன்னோட்டம் உறுதி செய்கிறது.


அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவாக்கியுள்ள சூப்பர் டூப்பர் திரைப்படத்திலிருந்து ஒரு குத்து பாடல் வெளியிடப்பட்டுள்ளது. விஜய்யின் பிகில் திரைப்படத்தில் நடித்துள்ள இந்துஜா இந்தப்பாடலுக்கு சூப்பராக குத்தாட்டம் போட்டுள்ளார்


சிம்பு நடிப்பில் உருவாக இருந்த மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி புதிய திரைப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இணையதளத்தில் ப்ளூ சட்டை என்ற பெயரில் பிரபலமான விமர்சகர் மாறன் இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார்.


ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 100 சதவீத காதல் திரைப்படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தெலுங்கில் வெளியான 100% லவ் என்ற திரைப்படத்தின் ரிமேக்காக உருவாகியுள்ள இந்த படம் அக்டோபர் 4ம் தேதி திரைக்கு வரவுள்ளது.


முத்துக்குமார் இயக்கத்தில் விமல் - வரலட்சுமி நடிப்பில் வெளியாகவிருந்த கன்னி ராசி திரைப்படம் வர்த்தக குளறுபடிகளால் நேற்று வெளியாகவில்லை. இம் மாதத்திற்குள் மற்றொரு தேதியில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


புதுச்சேரியில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது கடந்த ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ்-க்கு இதற்கான ஒரு லட்ச ரூபாய் காசோலை வழங்கப்பட்டது.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி திரைப்படம் எதிர்வரும் தீபாவளி தினத்தில் வெளியாவது உறுதியாக உள்ளது. விஜய்யின் பிகில் திரைப்படம் இந்த தேதியில் ரிலீஸாவதால், விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் திரைப்படம் முன்கூட்டியே வெளியாகிறது. இந்நிலையில் பிகில் படத்துடன் கைதி திரைப்படம் மோதுவது உறுதியாக உள்ளது.


அமீர்கான் நடிப்பில் உருவாக உள்ள பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க யோகி பாபு ஒப்பந்தம் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. Forest Gump என்ற ஹாலிவுட் திரைப்படத்தை ஹிந்தியில் அமீர்கான் ரீமேக் செய்கிறார். இதில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் யோகி பாபு இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.