மணிரத்னம் காட்சியை படமாக்கியவிதமும், லைட்டிங்கும் தான் அந்தப் பாடலை மறக்க முடியாத பாடலாக்கியது என்றவர், முகத்தை சுழித்தபடி, யமுனை ஆற்றிலே பாடலைப் பார்த்தீங்கன்னா அதுவொரு சிம்பிள் சாங் என்று போகிற போக்கில் பேச, பொங்கி விட்டார்கள் இளையராஜா ரசிகர்கள். அது சிம்பிள் சாங்கா? இப்போ அந்த இசை இல்லாத காட்சியை மட்டும் பாருங்க என்று மியூட் செய்யப்பட்ட பாடலை பகிர்ந்து ஷோபனாவை எண்ணைய் இல்லாமலே வறுத்தார்கள்.
தளபதி படத்தின் பல காட்சிகளை அதிகாலையில் எடுத்தார் மணிரத்னம். பாடல் காட்சி ஒன்றிற்காக அதிகாலை நான்கு மணிக்கே ஸ்பாட்டுக்கு வரவேண்டும் என மணிரத்னம் சொல்லியிருக்கிறார். மற்ற 300 பேரும் வருவார்கள், ரஜினி அதிகாலை 4 மணிக்கே வருவாரா என்று அனைவருக்கும் ஐயம். 300 பேர் வரும்போது, 301-வது ஆளும் வரத்தானே செய்யணும் என்றிருக்கிறார் மணிரத்னம். ஆனால், யாருக்கும் ரஜினி அத்தனை அதிகாலையிலேயே ஸ்பாட்டுக்கு வருவாரா என்ற சந்தேகம் மட்டும் போகவில்லை.
மறுநாள் யூனிட் வண்டியில் அதிகாலை 4 மணிக்கு சென்றிருக்கிறார்கள். அது மலைப்பகுதி. அவர்கள் சென்ற போது தூரத்தில் ஒரு சிகரெட் வெளிச்சம் தெரிந்திருக்கிறது. அவர்களுக்கு முன்பே யாரோ அங்கு வந்திருக்கிறார்கள். போய் பார்த்தால் அது ரஜினி. எல்லோருக்கும் முன்பாகவே ரஜினி அங்கு வந்திருக்கிறார். தளபதியை மகாபாரத கதையை மனதில் வைத்து மணிரத்னம் உருவாக்கியிருந்தார். ரஜினி கர்ணன், மம்முட்டி துரியோதனன், ஷோபனா திரௌபதி, அரவிந்த்சாமி அர்ஜுனன், ஸ்ரீவித்யா குந்தி, ஓம் பூரி கண்ணன் என மகாபாரதத்தை நவீன சூழலுக்கேற்ப மாற்றியிருந்தார்.