தயாரிப்பாளர், இயக்குனர் இராம நாராயணன் கருணாநிதியின் விசுவாசி. திமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்கையில், இராம நாராயணன் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக பல நன்மைகளை சங்கத்துக்கு செய்துள்ளார். கடைசிவரை கருணாநிதி விசுவாசியாக வாழ்ந்து மறைந்தவர். கருணாநிதியின் கதை, வசனத்தில் மூன்று திரைப்படங்களை அவர் இயக்கியுள்ளார். அதில் ஒரு படத்தில் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடித்திருந்தார்.
கருணாநிதியின் கதை, வசனத்தில் 1987 இல் வெளியான படம் வீரன் வேலுத்தம்பி. விஜயகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். படத்தின் டைட்டில் கதாபாத்திரம் வேலுத்தம்பியாக நடித்தவர் ராதாரவி. கார்த்திக் இதில் சிறப்புத் தோற்றத்தில் வருவார். எஸ்.எஸ்.சந்திரன், தியாகு போன்ற (அன்றைய) திமுக சார்ப்பு நட்சத்திரங்களும் படத்தில் இடம்பெற்றிருந்தனர். ஆக்ஷன் அதிரடிக் காட்சிகளுடன் தாராளமாக செலவு செய்து படத்தை எடுத்திருந்தனர். வசனங்கள் அந்தக்காலத்தில் குறிப்பிட்டு பேசப்பட்டன.
வீரன் வேலுத்தம்பி வெளியானதற்கு அடுத்த வருடம் 1988 இல் மக்கள் ஆணையிட்டால் படம் வெளியானது. நான் ஆணையிட்டால் என்பது சர்வாதிகாரத்தை காட்டுகிறது. ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள், அவர்களே ஆணையிட வேண்டும் என்ற கருத்தில் மக்கள் ஆணையிட்டால் என்ற பெயர்தாங்கி கலைஞரின் வசனத்தில் இராம நாராயணன் இயக்கத்தில் இந்தப் படம் வெளியானது. இதிலும் விஜயகாந்தே நாயகன். வாகை சந்திரசேகர் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். அப்போது திமுக இளைஞரணி தலைவராக இருந்த மு.க.ஸ்டலின் ஆற அமர யோசிச்சுப் பாரு.. என்ற பாடலில் மு.க.ஸ்டாலினாகவே நடித்திருப்பார்.
இந்தப் படத்திற்குப் பிறகு நீண்டகாலம் இராம நாராயணன், கருணாநிதி இணையவில்லை. 2005 இல் சிபிராஜின் மண்ணின் மைந்தன் திரைப்படத்துக்கு கருணாநிதி திரைக்கதை எழுதினார். இராம நாராயணன் படத்தை இயக்கினார். சிபிராஜுக்கு கேரியர் பூஸ்டர் கொடுப்பதற்காக எடுக்கப்பட்ட படம் என்பதால் சத்யராஜும் கௌரவ வேடத்தில் நடித்தார். மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன், பொன்னம்பலம், வடிவேலு உள்ளிட்டவர்களும் நடித்திருந்தனர்.
கருணாநிதி கதை, வசனத்தில் வீரன் வேலுத்தம்பி வெளியான அதே வருடம்தான் மு.க.ஸ்டாலின் நடித்த ஒரே ரத்தம் திரைப்படமும் வெளியானது. கடைகோடி மக்கள்வரை வென்றடைய எளிய வழி திரைப்படங்களில் நடிப்பது என்பதால் ஸ்டாலினும் அதனை முயன்றுப் பார்த்தார். ஒரே ரத்தம் கருணாநிதியின் கதை, வசனத்தில், சொர்ணம் இயக்கத்தில் வெளியானது. கார்த்திக், ராதாரவி பிரதான வேடங்களில் நடித்த இந்தப் படத்தில் சமூகநீதியை பேசும் கதாபாத்திரத்தில் மு.க.ஸ்டாலின் நடித்தார். குங்குமத்தில் வெளிவந்த கருணாநிதியின் ஒரே ரத்தம் நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது.
திரைப்படங்களுக்கும், தமிழக அரசியலுக்கும் உள்ள தொடர்பு அனைவரும் அறிந்தது. திரைத்துறையில் தொடர்புடையவர்களே கடந்த 1967 லிருந்து தமிழ்நாட்டை ஆண்டு வருகிறார்கள். இவர்களில் திரைப்படங்களால் கிடைத்த புகழை வைத்து அரசியலில் சாதித்தவர்களும் இருக்கிறார்கள். அரசியலில் சாதிப்பதற்கு திரைப்படங்களை ஒரு கருவியாக பயன்படுத்தியவர்களும் இருக்கிறார்கள். நம்முடைய திரைப்பட ரசனை இன்னும் எத்தனைதூரம் மேம்பட வேண்டியுள்ளது என்பதற்கு இந்த புள்ளிவிவரங்களே சான்றாகும்.