ஓ. பன்னீர்செல்வம் தனதுபதிவில், தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரும், பலகுரல் கலைஞரும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர ரசிகரும், அவரது புகழை அனைத்து மேடைகளிலும் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தவருமான அன்புச் சகோதரர் மயில்சாமி திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த அவரின் இழப்பு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல். முருகன் தனது ட்விட்டர் பதிவில், நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. தன்னை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, சமூக எண்ணத்தினால் பல சேவைகளை செய்து, தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்களிடத்தில் நீங்கா இடம் பிடித்த அவரின் மறைவு திரையுலகுக்கு பேரிழப்பாகும் என்று பதிவிட்டுள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அண்ணன் மயில்சாமியின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. சிறந்த குணச்சித்திர நடிகர், எளிய மனிதர்கள் மீது பேரன்பு கொண்டவர். ரசிகர்களின் அன்பைப் பெற்ற அண்ணன் என்றென்றும் நினைவு கூறப்படுவார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.