பிரபல பெங்காலி மாடல் நடிகை பிதிசா டி மஜூம்தார் நேற்று தற்கொலை செய்து கொண்டார். பிதிசாவின் தற்கொலை அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. பெங்காலி மொழியில் பிரபல மாடலாகவும் நடிகையாகவும் இருப்பவர் பிதிசா டி மஜூம்தார். இவர் கொல்கத்தாவின் டம் டம் நகரில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டில் உள்ள சீலிங் பேனில் பிதிசா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், அவரது வீட்டிற்கு விரைந்து சென்றனர். உள்பக்கமாக பூட்டு போடப்பட்டு இருந்ததால் கதவை உடைத்து போலீசார் பிதிசாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பிதிசாவின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்கொலை செய்வதற்கு முன்பாக பிதிசா கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட வாய்ப்புகள் இல்லாத விரக்தியால் பிதிசா தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.