இந்தப் படம் கண்ணதாசன் இதழில் தான் எழுதிய கதையை தழுவி எடுக்கப்பட்டது என எழுத்தாளர் என்.ஆர்.தாசன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தாசனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்து அவர் ஆயிரம் ரூபாய் நஷ்டஈடாக பெற்றார். ஆனால், பாலசந்தரோ, இந்தக் கதையை விக்கிரமாதித்யன், வேதாளம் கதையிலிருந்து எடுத்துக் கொண்டதாக கூறினார்.
வேதாளம் விக்கிரமாதித்தனிடம் விடுகதைகள் சொல்லி பதில் கேட்கும். சரியான பதில் சொல்லவில்லையென்றால் விக்கிரமாதித்யனின் தலை வெடித்து சிதறிவிடும். அதில் ஒரு கதையில் அப்பா, மகன் இருவரும் நடந்து செல்லும் பாதையில் இரு பெண்களின் காலடித் தடத்தைப் பார்ப்பார்கள். அந்த காலடித் தடத்தை பின் தொடர்ந்து செல்வது என்றும், பெரிய காலடித் தடத்திற்கு உரியவளை தந்தை மணம் முடிப்பது என்றும், சிறிய காலடித் தடத்துக்கு உரியவளை மகன் மணம் முடிப்பது எனவும் முடிவு செய்வார்கள். அந்தப் பெண்களை கடைசியில் கண்டு பிடிப்பார்கள்.
அதில் எதிர்பாராத திருப்பம் என்னவென்றால், பெரிய பாதங்களுக்குரியவள் மகளாகவும், சிறிய பாதங்களுக்குரியவள் தாயாகவும் இருப்பார்கள். அப்பாவும், மகனும் ஏற்கனவே தீர்மானித்தபடி அப்பா மகளையும், மகன் தாயையும் மணந்து கொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உறவுமுறை என்ன என்று வேதாளம் கேட்கும். இந்தக் கதையின் தாக்கத்தால் எடுத்ததே அபூர்வ ராகங்கள் என்றார் பாலசந்தர்.
அபூர்வ ராகங்கள் வெளியான போது, அப்படம் 1973 இல் வெளியான 40 கேரட்ஸ் ஆங்கிலப் படத்தின் தழுவல் என்ற விமர்சனமும் எழுந்தது. அந்தப் படமும் கிட்டத்தட்ட இதே கதைதான். ஆனால், பாலசந்தர் சொன்னதே உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது. இதேபோன்றதொரு வழக்கை மறைந்த இயக்குநர், கதாசிரியர் லோகிததாஸும் எதிர்கொண்டார். அவரது படத்தின் கதை வேறொரு எழுத்தாளருடையது என்பது குற்றச்சாட்டு.
நீதிமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த போது, ஆமாம், காப்பிதான் அடித்தேன். இந்தக் கதை மட்டுமில்லை, என்னுடைய எல்லா கதையும் காப்பிதான். வியாசனிடமிருந்துதான் அனைத்தையும் காப்பி அடித்தேன் என மகாபாரதத்தில் உள்ள கதையை எப்படி இந்த காலத்துக்கு ஏற்றபடி மாற்றி எழுதினேன் என்பதை லோகிததாஸ் விவரித்தார். நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.