பழம்பெரும் தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமானது ஏ வி மெய்யப்ப செட்டியாரின் ஏவிஎம் நிறுவனம். 40களில் படத் தயாரிப்பை ஆரம்பித்த இவர்கள் இன்றும் பல்வேறு துறைகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். ஏவிஎம் க்கு முன்னால் தொடங்கப்பட்ட பல நிறுவனங்கள் இன்று இல்லை. ஏவிஎம் க்கு பிறகு தொடங்கப்பட்ட பல நிறுவனங்களும் இன்று இல்லை. காலம் கடந்து ஏவிஎம் நிறுவனம் நிலைத்து நிற்பதற்கு அவர்களது நிர்வாக திறமை மட்டுமின்றி கதையை அவர்கள் தேர்ந்தெடுத்த விதமும், எந்தக் கதை ரசிகர்களுக்கு பிடிக்கும், அதை எப்படி அவர்களுக்கு தர வேண்டும் என்ற ரசனையறிவும் அவர்களுக்கு இருந்தது மிக முக்கிய காரணமாகும்.
சினிமாவில் வெற்றி பெறுவதற்கு எளிய வழி, வேறு மொழியில் வெற்றி பெற்ற திரைப்படத்தின் உரிமையை வாங்கி ரீமேக் செய்வதாகும். அந்த வழியைதான் பெரும்பாலான படங்களில் ஏவிஎம் பின்பற்றியது. அவர்களது ஆரம்பகால வெற்றிப் படங்களான குலதெய்வம், மாமியார் மெச்சிய மருமகள், அன்னை, ராமு, உயர்ந்த மனிதன், நானும் ஒரு பெண், மிஸ் மேரி, படிக்காத மேதை, படித்தால் மட்டும் போதுமா, புதிய பறவை, மங்கையர் திலகம், இதய கமலம், பூவும் பொட்டும், களத்தூர் கண்ணம்மா போன்ற திரைப்படங்கள் பிற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களின் கதையை தழுவி தமிழில் எடுக்கப்பட்டதாகும். இதில் மிஸ் மேரி மட்டும் ஹிந்தி படம். தமிழில் வெளியான விஜயா புரெடக்ஷன்சனின் மிஸ்ஸியம்மா படத்தின் உரிமையை வாங்கி ஏவிஎம் ஹிந்தியில் தயாரித்தது. ஏவி மெய்யப்ப செட்டியாரின் காலத்துக்குப் பிறகும் பிறமொழி படங்களை வாங்கி தமிழில் தயாரிப்பதை ஏவிஎம் தொடர்ந்தது.
இயக்குனர் விசு சினிமாவுக்கு வருவதற்கு முன் எழுதி இயக்கிய நாடகங்களில் ஒன்று உறவுக்கு கை கொடுப்போம். நாடகமாக வெற்றி பெற்ற இந்த கதையை ஒய் ஜி மகேந்திரன் திரைப்படமாக இயக்கினார். கே எஸ் கோபாலகிருஷ்ணன் தயாரித்தார். நாடகமாக மக்களை கவர்ந்த அக்கதை திரைப்படமாக யாரையும் கவரவில்லை. படம் தோல்வி அடைந்தது. 11 வருடங்களுக்கு பிறகு அந்தக் கதையை கேட்ட ஏவிஎம் சரவணன், இதற்கு நிச்சயம் மக்களிடம் வரவேற்பு கிடைக்கும் என்று நம்பி அதே கதையை விசுவை வைத்து இயக்கி வெளியிட்டார். அந்தப் படம் தான் சம்சாரம் அது மின்சாரம். தமிழகத்தில் வெள்ளி விழா கண்ட வெற்றிப் படமானதுடன் தேசிய விருதையும் வென்றது. அப்படி ஏற்கனவே வெளியாகி தோல்வியடைந்த படத்தை மறுபடி எடுத்து ஏவிஎம வெற்றியை ருசித்த நிகழ்வுகள் பல.
ஏற்கனவே எடுத்த தோல்வி படங்களை மறுபடியும் எடுத்து வெற்றிப் படமாக்கிய சரித்திரத்துடன் ஏற்கனவே வெற்றி பெற்ற படத்தை சில மாறுதல்களுடன் மீண்டும் எடுத்து வெற்றியை கொடுத்த சரித்திரமும் ஏவிஎம்முக்கு உண்டு. மராத்தி மொழியில் வெளியான கங்கட் கோடா நஹ்லே படத்தை மாமியார் மெச்சிய மருமகள் என்ற பெயரில் எடுத்தனர். படம் வெற்றி பெற்றது. நீண்ட நாள் கழித்து அதே படத்தை சிறிது மாற்றி பாட்டி சொல்லை தட்டாதே என்ற பெயரில் எடுத்தனர். அந்தப் படமும் 175 நாட்கள் ஓடி வெள்ளி விழா கண்டது. வெற்றி பெற்ற படங்களையும், தோல்வியடைந்த படங்களையும் மறுபடியும் எடுத்து வெற்றியை கொடுத்த சரித்திரம் ஏவிஎம்முக்கு உண்டு.
விட்டலாச்சாரியார் தயாரித்த நகைச்சுவை திரைப்படம் பெண்ணை நம்புங்கள் படத்தை முதலில் யாரும் வாங்கவில்லை. ஒரு ஏரியா கூட விலை போகாத நிலையில் அந்தப் படத்தை பார்த்த ஏவி மெய்யப்ப செட்டியாரும், அவரது மகன்களும் படம் ஓடும் என்று நம்பிக்கை வைத்து சில திருத்தங்களுடன் படத்தை வாங்கி வெளியிட முடிவு செய்தனர். ஏ வி எம் படத்தை வாங்கி இருக்கிறது என்பதை அறிந்ததும் பிற ஏரியாக்களும் உடனடியாக விற்றுத் தீர்ந்தன. சுபயோக சுப தினத்தில் வெளியான பெண்ணை நம்புங்கள் திரைப்படம் 10 வாரங்களுக்கு மேல் ஓடி போட்ட பணத்தைவிட அதிக லாபத்தை சம்பாதித்தது.
நேர்மை, ஒழுக்கம், நேரம் தவறாமை, சொன்ன சொல்லை காப்பாற்றுதல் போன்ற குணங்கள் மட்டும் ஒரு நிறுவனத்தை சிறந்த நிறுவனமாக ஆக்கி விடாது. எந்த கதை மக்களுக்கு பிடிக்கும், எப்படி சொன்னால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்வார்கள் என்ற ரசனை அறிவும் ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகத் தேவை. இது ஏவிஎம் நிறுவனத்திற்கு இருந்த காரணத்தினாலேயே காலங்கள் கடந்தும் அவர்களால் சினிமாத் துறையில் தாக்குப் பிடிக்க முடிந்தது. இன்றைய கார்ப்பரேட் யுகத்தில் தமிழ் சினிமா சூதாட்டக் களமாகிவிட்டது. இங்கு நேர்மை சொன்ன சொல் தவறாமை போன்றவற்றிற்கு எந்த மதிப்பும் இல்லை. ஏவிஎம் நிறுவனம் போன்ற ஒரு பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் படம் தயாரிக்கும் சூழலில் தமிழ் சினிமா இல்லை என்பது ஒரு அபாய எச்சரிக்கையாகவே நாம் கவனிக்க வேண்டும்.