கன்னிராசியின் கதை, வசனம் பாண்டியராஜனுடையது. அவரது கதைக்கு திரைக்கதை எழுதியவர்கள் பாண்டியராஜனுடன் பாக்யராஜிடம் உதவி இயக்குனர்களாக இருந்த ஜி.எம்.குமார், லிவிங்ஸ்டன். இருவரும் பாண்டியராஜனைவிட சீனியர்கள். ஆனால், முதல் வாய்ப்பு கிடைத்தது பாண்டியராஜனுக்கு. கன்னிராசி வெளியான மறுவருடம் அறுவடை நாள் படம் மூலம் ஜி.எம்.குமார் இயக்குநரானார்.
குரு பாக்யராஜின் அரிச்சுவட்டில் கன்னிராசி படத்தின் கதையை பாண்டியராஜன் எழுதியிருந்தார். வேலைவெட்டிக்குப் போகாமல் பெண்களை சைட் அடித்து, ஊரில் வம்பு செய்யும் கதாபாத்திரம் பிரபுக்கு. அவரது தந்தையாக கல்லாபெட்டி சிங்காரமும், தாயாக எஸ்.என்.லட்சுமியும் நடித்தனர். ஊரில் பிரபுவின் நண்பர்கள் என்று செந்தில், தவக்களை உள்பட பெரிய கேங் உண்டு. அக்கா சுமித்ராவின் வீட்டிற்கு பிரபு சென்றதும் களம் மாறும். அக்கா புருஷனாக வரும் கவுண்டமணி அதன் பிறகு நகைச்சுவைக்கான உத்தரவாதத்தை ஏற்றுக் கொள்வார். அக்கா மகளாக ரேவதி.
பிரபுக்கு, ரேவதி என்பது சின்ன வயதிலேயே முடிவான ஒன்று. வில்லனாக வருவது ஜோதிட நம்பிக்கை. செவ்வாய் தோஷமுள்ள ரேவதியை அதே தோஷம் உள்ள ஆண் திருமணம் செய்தால் மட்டுமே அவரது தாலி நிலைக்கும் என்ற நிலையில், தம்பியின் உயிரைக் காக்க அக்கா அந்தத் திருமணத்துக்கு எதிராக இருப்பார். சோதிட நம்பிக்கை அறிந்து ரேவதியும் பிரபுவை விலக்குவார். அக்கா வீட்டிலிருந்து வெளியேறும் பிரபு, பாட்டு வாத்தியார் ஜனகராஜின் வீட்டில் தங்கிக் கொள்வார். நாம் ஒருதலையாக காதலிக்கும் ரேவதியின் முறைப்பையன்தான் பிரபு என்ற உண்மையை ஜனகராஜ் அறிந்து கொள்ளும் கட்டம் சுவாரஸியமானது.
படத்தின் முதல்காட்சியில் பாண்டியராஜனும் நடித்திருந்தார். குளித்து முடித்து, கோவிலில் சாமி காலடியில் ஒரு கவரை வைத்து, ஆசிர்வதித்து தரச் சொல்வார் பிரபு. பாண்டியராஜனின் தந்தை இதனை சுட்டிக் காட்டி, காலையில் குளிச்சு, இன்டர்வியூ கார்டை சாமிகிட்ட வச்சு, இன்டர்வியூ அட்டன்ட் பண்ணப் போறான். நீயும் இருக்கியே என்பார். இப்போதைய அதே திருட்டு முழியுடன் பாண்டியராஜன் பிரபுவிடம் இன்டர்வியூ குறித்து கேட்க, நாலாவது தெரு உஷாவுக்கு தரப்போற லவ் லட்டர் என்று உண்மையைச் சொல்வார் பிரபு.
இப்படி கலகலப்பாக தொடங்குகிற படம் இறுதிவரை அதே டெம்போவுடன் பயணித்து, இறுதிக்காட்சியில் ரேவதியின் உயிரை வாங்கி முடிவடையும். அந்த கிளைமாக்ஸை ஏன் அவர் வைத்தார் என்பது புரியாத புதிர். அதுவே படத்தின் மைனசாகவும் அமைந்தது. கன்னிராசிக்கு இளையராஜா இசையில் வாலி, வைரமுத்து, கங்கை அமரன், குருவிக்கரம்பை சண்முகம் ஆகியோர் பாடல்கள் எழுதினர். அசோக்குமாரின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்த்தது. கிளைமாக்ஸை மட்டும் நேர்மறையாக, இருவரும் ஒன்றிணைவதாக காட்டியிருந்தால் கூடுதலாக சில வாரங்கள் படம் ஓடியிருக்கும்.