இந்தியாவில் சினிமா அறிமுகமான போது அதிகளவில் புராணப் படங்களே எடுக்கப்பட்டன. அதற்கு முன் புராண நாடகங்கள் இந்தியாவில் புகழ்பெற்றிருந்தன. தமிழ்நாட்டில் அரிச்சந்திரன், அர்ஜுனன் தபசு, வள்ளித் திருமணம் போன்ற புராணக் கதைகளே கூத்துக்கலையிலும் செல்வாக்குப் பெற்றிருந்தன. நாடகத்தின் அடுத்தப் பரிமாணமாக சினிமா வந்தபோது, நாடகத்தில் பயன்படுத்தப்பட்ட புராண கதைகள் சினிமாவாகின.
ஐம்பதுகளின் ஆரம்பத்தில் புராணப் படங்கள் மவுசு குறைய ஆரம்பித்தன. அதற்கு முன்பே கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.ராதா போன்றவர்களின் படங்கள் புராணத்திலிருந்து விலகி சமூகக் கருத்துக்களை பிரதிபலிக்கத் தொடங்கியிருந்தன. 1949 இல் ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த அண்ணாவின் வேலைக்காரி திரைப்படம் தமிழ்நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வேலைக்காரிக்கு முன்பு ஜுபிடர் பிக்சர்ஸ் தொடங்கிய திரைப்படம் கிருஷ்ண விஜயம்.
பால கிருஷ்ணனின் குறும்புகளும், கோபிகைககளுடன் அவன் நடத்திய காதல் விளையாட்டுக்களையும், கம்ச வதத்தையும் பிரதானப்படுத்தி கிருஷ்ண விஜயம் எடுக்கப்பட்டது. இதில் பால கிருஷ்ணனாக - அதாவது சிறுவன் கிருஷ்ணனாக நடித்தவர் ஐம்பது மற்றும் அறுபதுகளில் முக்கியமான திரைப்பாடல்களை பாடிய பின்னணிப் பாடகர் ஏ.எல்.ராகவன். நாற்பதுகளின் பிற்பகுதியில் ஏ.எல்.ராகவன் பால கான வினோத சபாவில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். வயது 13. அபாரமான குரல்வளம் கொண்டவர். அவரது நடிப்புத் திறமையையும், குரல்வளத்தையும் கண்ட ஜுபிடர் பிக்சர்ஸ் சோமு என்கிற சோமசுந்தரம் செட்டியார் அவரை கிருஷ்ண விஜயம் படத்தில் பால கிருஷ்ணனாக நடிக்க வைத்தார்.
நாடக சபாவில் ஒப்பந்த அடிப்படையில் ஏ.எல்.ராகவன் பணிபுரிந்து வந்ததால் அந்த ஒப்பந்தத்தை முறிக்க அந்தக் காலத்திலேயே நாடகக் கம்பெனிக்கு ஐயாயிரம் ரூபாய் சோமு அளித்தார். அப்படி ஐயாயிரம் கொடுத்து சபாவிலிருந்து ஏ.எல்.ராகவனை வெளியே கொண்டு வந்து, தனது கிருஷ்ண விஜயம் படத்தில் சிறுவயது கிருஷ்ணனாக நடிக்க வைத்தார்.
கிருஷ்ண விஜயத்தில் வளர்ந்த கிருஷ்ணராக பி.வி.நரசிம்ம பாரதியும், நாரதராக என்.சி.வசந்தகோகிலமும் நடித்தனர். முன்பு நாடகத்தில் பெண்கள் வேடத்தையும் ஆண்களே போட்டனர். சிவாஜி கணேசன்கூட ஸ்த்ரீ பார்ட்டில் நடித்துள்ளார். அதேபோல் சினிமாவில் ஆண் வேடத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்துள்ளார். கிருஷ்ண விஜயத்தில் வசந்தகோகிலத்தையும் நாரதராக ஆண் வேடத்தில் நடிக்க வைத்தனர்.
கிருஷ்ண விஜயத்தில் ஏ.எல்.ராகவன் அறிமுகமானது போலவே இன்னொரு பாடகரும் அறிமுகமானார். தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்றோரால் கவரப்பட்டு சினிமாவுக்கு வந்தவர். அவர்களைப் போல் சூப்பர் ஸ்டாராக வேண்டும் என்று விரும்பியவர். படத்தின் நாயகன் பி.வி.நரசிம்ம பாரதியின் நண்பரான அவர் படத்தின் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் அறிமுகப்படுத்தப்பட்டார். பாடகரின் குரல்வளம் பாகவரை ஒத்திருந்ததை கண்டவர் படத்தில் அவருக்கு பாட வாய்ப்பளித்தார். ராதே என்னைவிட்டுப் போகாதடி என்ற அந்தப் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்தப் பாடகர் வேறு யாருமில்லை, டி.எம்.சௌந்தர்ராஜன்.
73 வருடங்களுக்கு முன் 1950 ஜனவரி 14 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு கிருஷ்ண விஜயம் வெளியானது. படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஐம்பதுகளின் இறுதியில் புராணப் படங்களைவிட சமூகப் படங்கள் மக்கள் மனதில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருந்தன. குறிப்பாக 1949 இல் இதே ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த வேலைக்காரி திரைப்படம் தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
கிருஷ்ண விஜயத்தின் பின்னடைவுக்கு அண்ணாவின் வேலைக்காரி முக்கிய காரணம் என அப்போதைய விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். தமிழ் சினிமாவை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்த புராணக் கதைகள் மெல்ல புறந்தள்ளப்பட்டு சமூகக் கருத்துள்ள சமகால படங்கள் தமிழ் சினிமாவை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. அதற்கான தொடக்கமாக கிருஷ்ண விஜயத்தின் பின்னடைவு அமைந்தது.