அதனால், கோவலன் தவிர்த்து பிற ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டாலும் மாதவியை குற்றம் சொல்வதற்கில்லை. எனினும், மாதவி கோவலனைத் தவிர எந்த ஆடவனையும் அண்டவிட்டதில்லை. ஆகவே, தாலி கட்டாதப் பிறகும் கோவலனுக்கு மட்டுமே மனைவியாக திகழ்ந்தாள் மாதவி, ஆகவே, அவள்தான் கற்பில் சிறந்தவள் என்பது மாதவிக்காக பேசும் பட்டிமன்றப் பேச்சாளர்களின் வாதம்.
சரி, நம் விஷயத்துக்கு வருவோம். கண்ணகி - கோவலன் கதை குடும்ப சென்டிமெண்டுக்கு மிகவும் ஏற்றது. ஜுபிடர் பிக்சர்ஸ் 1942 இல் கண்ணகி என்ற பெயரில் சிலப்பதிகாரத்தை படமாக்கியது. ஆர்.எஸ்.மணி படத்தை இயக்கினார். தயாரிப்பாளர் எம்.சோமசுந்தரமும் இயக்கத்தில் உதவி செய்தார். கோவலனாக பி.யூ.சின்னப்பாவும், கண்ணகியாக கண்ணாம்பாவும், மாதவியாக என்.எஸ்.சரோஜாவும் நடித்தனர். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, அந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த தமிழ்ப் படமானது.
ஐம்பதுகளின் இறுதியில், கண்ணகி படத்தை மறுபடி எடுக்க ஜுபிடர் பிக்சர்ஸ் தீர்மானித்து, படத்தை அண்ணாவுக்கு போட்டுக் காண்பித்தது. கண்ணகி கதையை இப்போது எடுத்தால் ஓடாது என்று அண்ணா கருத்துச் சொல்ல, அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. எனினும், கண்ணகி, - கோவலன் - மாதவி ஆகியோர் தயாரிப்பாளர் சோமுவின் மனதைவிட்டு அகலவில்லை. அதேநேரம் சிலப்பதிகார கதையை அப்படியே எடுக்கவும் துணியவில்லை. இறுதியில் தி எஜிப்தியன் ஆங்கிலப் படத்தின் பாதிப்பில் ஏ.எஸ்.ஏ.சாமி, அரு.ராமநாதன் இணைந்து ஒரு கதையை எழுதினர். அதுதான் 1959, ஜனவரி 10 வெளியான தங்கப் பதுமை.
உறையூரைச் சேர்ந்த வணிகர் முத்துவேலர் தங்கத்தில் கண்ணகிக்கு சிலை செய்து, அதன் கண்களில் விலைமதிப்பில்லாத ரத்தினங்கள் இரண்டை பதிப்பித்திருப்பார். அவரது மகள் செல்வி. அவளும் வைத்தியரான மணிவண்ணனும் காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள். பக்கத்து நாட்டு இளவரசி வதனாவுக்கு கண்ணகி சிலையில் இருக்கும் ரத்தினங்களை சொந்தமாக்கிக் கொள்ள ஆசை. படைத்தளபதியின் யோசனைப்படி மாய மோகினி என்ற நாட்டியக்காரியை அனுப்பி வைப்பாள். அவளது அழகில் மயங்கி மணிவண்ணன் அவளே கதியென்று கிடந்து, அனைத்து செல்வங்களையும் இழப்பான். அவனது தூய உள்ளத்தை அறிந்து கொள்ளும் மாய மோகினி தன்னை அனுப்பியவர்களின் சதித்திட்டத்துக்கு உடன்பட மறுப்பாள். இறுதியில் கணவனும், மனைவியும் ஒன்றிணைந்தார்களா என்பது கதை.
சிலப்பதிகாரத்தை பிரபதிபலிக்கும் இந்தக் கதையில் மாய மோகினியாக (மாதவி) நடிக்க அஞ்சலிதேவி, பானுமதி, உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளை அணுகினர். அவர்கள் யாரும் மாய மோகினியாக நடிக்க முன்வரவில்லை. செல்வியாக பத்மினி நடித்ததால் மாய மோகினியாக நடிக்க அவரது சகோதரி லலிதாவும் முன்வரவில்லை. இறுதியில் டி.ஆர்.ராஜகுமாரி அந்த வேடத்தில் நடித்து பெயரை தட்டிச் சென்றார்.
மணிவண்ணனாக சிவாஜியும், வில்லனாக நம்பியாரும், இளவரசி வதனாவாக எம்.என்.ராஜவும் நடித்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் உடுமலை நாராயண கவி, மருகதாசி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன் ஆகியோர் பாடல்கள் எழுதினர். இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா வசனம் இந்தப் படத்தில்தான் இடம்பெற்றது. படத்தை ஏஎஸ்ஏ சாமி இயக்கினார்.