நடிகை ரோஜா இப்போது ஆந்திராவின் சுற்றுலா மற்றும் கலாச்சார, இளைஞர் நலன் துறையின் அமைச்சர். அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 30 வருடங்கள் நிவைடைந்திருக்கும் நேரத்தில் அமைச்சராக புதிய உயரத்திற்கு சென்றுள்ளார். அரசியல், சினிமா இரண்டிலும் அவர் பெற்ற வெற்றிகளுக்கு தொடக்கமாக இருந்தது செம்பருத்தி திரைப்படம்.
ரோஜாவின் பூர்வீகம் ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி. அங்கு தான் ரோஜா பிறந்தார். அப்பா நாகராஜ ரெட்டி, அம்மா லலிதா. இரண்டு சகோதரர்கள். ரோஜாவின் இயற்பெயர் ஸ்ரீ லதா. திருப்பதியில் வசித்த போது ரோஜா குச்சிப்புடி நடனம் கற்றார். பிறகு அவர்கள் குடும்பம் ஹைதராபாத்தில் குடியேறியது. அங்கு பொலிடிகல் சயின்ஸில் படம் பெற்றார். பிரேம தபசு படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் 1991-ல் அறிமுகமானார்.
அங்கு சில படங்கள் நடித்த போது ஆர்.கே.செல்வமணியின் கண்ணில் பட்டார். அப்போது ஆர்.கே.செல்வமணி இரண்டு வெற்றிகள் கொடுத்திருந்தார். 1990-ல் புலன்விசாரணை, 1991-ல் கேப்டன் பிரபாகரன். இரண்டுமே தமிழ் சினிமாவின் பென்ச் மார்க் திரைப்படங்கள். ஆக்ஷன் அடிதடியுடன் கூடிய அரசியல் படங்கள். அதற்கு முற்றிலும் மாறாக காதல் படம் ஒன்றை பிரமாண்டமாக எடுக்க நினைக்கிறார். பிரசாந்த் ஹீரோ. மாநிறமாக இருக்கும் ஸ்ரீ லதாவை ரோஜா என்ற பெயரில் அறிமுகப்படுத்துகிறார். ரோஜாவுக்கு தமிழில் முதல் படம் அது.
செம்பருத்தியில், மீனவர் பெண்ணான ரோஜாவை, 'அவ குப்பத்துல வளர வேண்டியவ இல்லை' என்று, பானுமதி தனது வீட்டில் தங்க வைத்து, சொந்த பேத்தியைப் போலவே நடத்துவார். பள்ளிக்குச் சென்று கொண்டிருப்பார் ரோஜா. அப்போது தான் பானுமதியின் உண்மையான பேரன் பிரசாந்த் அவரை தேடி வருவார். வின்னர் படத்தில் விட்டுப்போன சொந்தத்தை புதுப்பிக்க பிரசாந்த், தாத்தா நம்பியாரையும் குடும்பத்தையும் தேடி வருவார் அல்லவா? அதேதான். செம்பருத்தியிலிருந்து உருவியதே வின்னர் படத்தின் பிராந்தின் ஆரம்பக் காட்சிகள்.
வந்த இடத்தில் பிரசாந்துக்கும், ரோஜாவுக்கும் காதல் பற்றிக் கொள்ளும். இது தெரியாமல் ராதாரவி மன்சூர் அலிகானுக்கு ரோஜாவை நிச்சயம் செய்வார். இங்கே, நாசர் தனது மகளும், பிரசாந்தும் காதலிப்பதாக கூறி, திருமணத்துக்கான ஏற்பாடுகள் செய்வார். இந்த குழப்பங்கள் எப்படி நீங்கி ரோஜாவும், பிரசாந்தும் ஒன்று சேர்ந்தார்கள் என்பது கதை.
முப்பது வருடங்களுக்கு முன், மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து வந்த காலகட்டத்தில் செம்பருத்தி வெளியானது. அதற்கு இரண்டு வருடம் முன்புதான் (1990) வைகாசி பொறந்தாச்சி என்ற வெள்ளிவிழா படத்தில் பிரசாந்த் அறிமுகமாகியிருந்தார். அடுத்தப் படம் மலையளாத்தில் தேசிய விருது வாங்கிய பெருந்தச்சன் (1991). 1992 ஜனவரியில் பாலுமகேந்திராவின் வண்ண வண்ணப் பூக்கள். ஏப்ரலில் செம்பருத்தி. எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்று கூறத் தேவையில்லை.
முதல்நாளே படத்துக்கு திருவிழா கூட்டம். இளைஞர்களின் நாடியை சரியாக கணித்திருந்தார் செல்வமணி. பாடல் காட்சிகளில் ரோஜா, ஆதின் கானின் கவர்ச்சி இளைஞர்களை மீண்டும் மீண்டும் திரையரங்குகளுக்கு அழைத்து வந்தது. அதிலும், பட்டுப்பூவே பாடலில் பிகினியில் ஆதின் கான் ஓடிவரும் காட்சியில் திரையரங்கில் தீ பறந்தது எனலாம்.