அஜித்தின் திரை மேனரிசத்தை உருவாக்கிய படங்களில் பில்லாவுக்கு முக்கிய இடம் உண்டு. பில்லாவின் நதிமூலம் சுவாரஸியமானது. திரைக்கதையாசிரியர்கள் சலீம் - ஜாவேத் இணைந்து சினம் கொண்ட இளைஞன் என்ற புதிய நாயக பிம்பப் பின்னணியில் பல கதைகளை எழுதினர். அதில் அமிதாப்பச்சன் நடித்தார். அவரை அந்தப் படங்கள் இந்தியின் சூப்பர் ஸ்டாராக ஆக்கியது.
1979 இல் ரஜினி வளர்ந்து வரும் நடிகர். ப்ரியா போன்ற ப்ளாக் பஸ்டர் ஹிட்கள் கொடுத்திருந்தாலும், முன்னணி நடிகராக நிலைபெறவில்லை. இந்த நேரத்தில் இந்திப் படங்களின் தமிழ் ரீமேக்குகளில் அவர் நடிக்க ஆரம்பித்தார். வினோத் கன்னா நடித்த டு யார் திரைப்படத்தை தமிழில் ரஜினியை வைத்து குப்பத்து ராஜா என்ற பெயரில் எடுத்தனர். படம் ஓடவில்லை.
இந்த நேரத்தில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜி 1978 இல் சலீம் - ஜாவேத் எழுத்தில் அமிதாப்பச்சன் நடித்த டான் படத்தின் உரிமையை வாங்கி தமிழில் ரஜினியை வைத்து பில்லா என்ற பெயரில் ரீமேக் செய்தார். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, ரஜினியை பாக்ஸ் ஆபிஸ் டானாக்கியது. அதன் பிறகு சலீம் - ஜாவேத் எழுத்தில் அமிதாப் நடித்த இந்திப் படங்களின் தமிழ் தழுவலில் ரஜினி தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அதற்கு வித்திட்டது பில்லா திரைப்படம்.
இப்படி ரஜினிக்கே திருப்புமுனையாக அமைந்த பில்லா படத்தை 2007 இல் விஷ்ணுவர்தன் அஜித்தை வைத்து ரீமேக் செய்தார். கதை நடக்கும் களத்தை தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்கு மாற்றினார். அஜித்தின் ஸ்டைலிஷான லுக்கும், நடையும், யுவனின் இளையராஜா ரீமிக்ஸும் ரசிகர்களுக்கு பிடித்துப்போய் படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.
15 கோடியில் தயாரான படத்தை ஐங்கரன் நிறுவனம் 25 கோடிகளுக்கு வாங்கியது. சென்னையில் மட்டும் பில்லா 5.2 கோடிகளை வசூலித்தது. அதேபோல் சிங்கப்பூர், மலேசியா, யுஎஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் படம் கலெக்ஷன் பொழிந்தது. குறிப்பாக 2007 இல் சிங்கப்பூரில் அதிகம் வசூலித்த முதல் 100 படங்களில் 3 படங்கள் மட்டுமே இந்தியப் படங்கள். சிவாஜி, பில்லா மற்றும் ஷாருக்கானின் இந்திப் படம் ஓம் சாந்தி ஓம்.