2013-ல் த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா, நதியா, பிரம்மானந்தம் நடிப்பில் வெளியான படம் அத்தரின்டிகி தாரேதி. இதில் வெளிநாட்டில் இருக்கும் பவன் கல்யாண் குடும்பமும், இந்தியாவில் இருக்கும் பவன் கல்யாணின் அத்தை நதியா குடும்பமும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கும். இந்தியா வரும் பவன் கல்யாண், தான் யார் என்ற அடையாளத்தை மறைத்து, அத்தை நதியாவின் வீட்டில் தங்கி, அவரது மகள் சமந்தாவை காதலிப்பார். இரு வீட்டாரையும் ஒன்று சேர்ப்பது பவன் கல்யாணின் திட்டம். இதற்கு இடைஞ்சலாக பிரம்மானந்தம் இருப்பார்.
பிரம்மானந்தம் பீலா பேர்வழி. தனக்கு கலை என்றால் உயிர் என, அகலிகை நாடகத்தை பவன் கல்யாண், சமந்தா ஆகியோரை வைத்து நடத்துவார். அதிகாலையில் சேவல் கூவியதும், கௌதம முனியான பவன் கல்யாண், மனைவி அகலிகையை (சமந்தா) தனியாகவிட்டு குளிக்கச் செல்வார். இந்த நேரம், கௌதம முனிவர் வேடத்தில் வரும் இந்திரனாகி பிரம்மானந்தம் அகலிகையாகிய சமந்தாவுடன் காதல் செய்வார். இதுதான் நாடகம். இதைத்தான் நடிக்க வேண்டும்.
இது சரி வராது என்று கேரக்டரை மாற்றுவார். இப்போது பிரம்மானந்தம் கௌதம முனிவர். அவர் குளித்து திரும்புகையில் பவன் கல்யாணும், சமந்தாவும் காதல் செய்து கொண்டிருப்பார்கள். என்னடா இது என்று அவர் கோபப்பட, 'காலையில நீ பாட்டுக்கு பொண்டாட்டியை தனியா விட்டுட்டுப் போனா, அவ பாதுகாப்பு என்னாகிறது' என்று பிரம்மானந்தத்தை வெளுப்பார் பவன் கல்யாண். ஆகா, இதுவும் சரிவராது என்று பிரம்மானந்தம் அகலிகையின் வேடத்தை எடுப்பார்.
பவன் கல்யாண் வருகையில் அகலிகை இன்னொருவனுடன் பேசிக் கொண்டிருப்பாள். யாரு இது என கேட்க, வேஷம் மாறி வந்தவன் என அகலிகையான பிரம்மானந்தம் கூற, "25 வருஷமா என்கூட குடும்பம் நடத்துற, புருஷன் யாரு வெளியாள் யாருன்னு இன்னுமா உனக்குத் தெரியலை" என்று அகலிகையான பிரம்மானந்தத்தை வெளுப்பார். அத்தரின்டிகி தாரேதியின் வெற்றிக்கு பிரம்மானந்தத்தின் காமெடிக்கு பெரும் பங்குண்டு.
2014-ல் வெளிவந்த வீரம் படத்தில் பவன் கல்யாண் படத்தின் காமெடியை சற்று மாற்றி பயன்படுத்தியிருந்தனர். இதில் பிரம்மானந்தத்துக்கு பதில் தம்பி ராமையா. ஹீரோ, ஹீரோயின், வில்லன் என மூன்றே பேரை வைத்து படம் எடுக்கப்போறோம் என்பார்கள் சந்தானமும், அஜித்தின் தம்பிகளும். நான் தான் ஹீரோ என்று வாலன்ட்ரியாக வண்டியில் ஏறுவார் தம்பி ராமையா. வில்லன்கள் சேர்ந்து ஹீரோவை மொத்தியெடுப்பார்கள்.
தம்பி ராமையா அடி தாங்காமல் போய் ஒளிந்து கொள்வார். இந்தமுறை சாப்ட் கேரக்டரா பண்ணுவோம் என்று, நான் ஹீரோயின் என்று நைட்டியோடு வருவார். அவரும் ஹீரோவும் டூயட் பாட, "நான் பொண்ணோட அப்பா, என் முன்னாடியே இன்னொருத்தன் கூட காதல் பண்றியா" என்று சந்தானம் ஹீரோயினாக நடிக்கும் தம்பி ராமையாவை அடிப்பார். அடி முடியும் முன்பு இன்னொருவனும் வந்து சேர்ந்து கொள்வான்.
அத்தரின்டிகி தாரேதி போல வீரமும் வெற்றி பெற்றது. இந்த காப்பி விவகாரம் தெரியாமல் வீரம் படத்தை தெலுங்கில் கட்டமராயுடு என்ற பெயரில் 2017-ல் தெலுங்கில் ரீமேக் செய்தனர். ஹீரோ பவன் கல்யாண். அப்போதுதான், தம்பி ராமையா கதாபாத்திரத்தை எப்படி வைப்பது என்ற சிக்கல் எழுந்தது. வீரத்தில் இருப்பதைப் போல் காட்டினால், என்னடா இது பவன் கல்யாண் நடித்த அத்தரின்டிகி தாரேதி படத்தை உல்டா செய்து அவரோட படத்திலேயே வச்சிருக்காங்க என்று கேட்பார்கள். அதனால், வேறு வழியின்றி தம்பி ராமையா கதாபாத்திரத்தை கட்டமராயுடுவில் டம்மியாக்கினார்கள். வீரத்தில் தம்பி ராமையா வேஷம் மாறி அடிவாங்கும் காமெடிக் காட்சியும் கட்டமராயுடு படத்தில் இடம்பெறவில்லை. படமும் தோல்வியடைந்தது.