மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்றார் மலையாள நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி. கடந்த வருட இறுதியில் வெளியான கட்டா குஸ்தி படமும் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது. தமிழில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த மகிழ்ச்சியில் ஐஸ்வர்யா இருக்கிறார்.
கடந்த ஆண்டு சாய் பல்லவி நடிப்பில் வெளியாகி நேர்மறை விமர்சனங்களை அள்ளிய கார்கி படத்தின் தயாரிப்பாளர்களில் ஐஸ்வர்யா லெக்ஷ்மியும் ஒருவர். புத்தம் புது காலை விடியாதா, கேப்டன் போன்ற படங்களும் தமிழில் இவர் நடிப்பில் வெளியாகின. இந்த ஆண்டு இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றன.
நடிகர் அர்ஜுன் தாஸுடன் எடுத்துக்கொண்ட படத்தை பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா ஹார்ட் ஸ்மைலியை பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இருவரும் காதலிப்பதை மறைமுகமாக அறிவித்துள்ளாரா அல்லது இருவரும் இணைந்து நடிக்கும் படம் குறித்த அறிவிப்பா என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. ஐஸ்வர்யாவின் இந்த போஸ்ட் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் விளக்கமளித்திருக்கிறார். அதில் நண்பர்களே, நானும் அர்ஜுன் தாஸும் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது ஃபோட்டோ எடுத்து பதிவிட்டேன். எங்களுக்குள் வேறு ஒன்றும் இல்லை. நாங்கள் நண்பர்கள். எனக்கு நேற்று மாலையில் இருந்து மெசேஜ் செய்யும் ரசிகர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன், பதறாதீர்கள். அவர் உங்களுக்குத் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
அர்ஜுன் தாஸும் கைதி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமானார். நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வசந்த பாலன் இயக்கத்தில் அநீதி, அங்கமாலி டைரீஸ் ஹிந்தி ரீமேக், தெலுங்கில் புட்டபொம்மா போன்ற படங்களில் நடித்துவருகிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் அர்ஜுன் தாஸ் நடித்துவருகிறார்.