

பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்ய உள்ளதாக நடிகை வனிதா விஜயகுமார் உறுதிப்படுத்தி உள்ளார்.


நடிகர் விஜய் உடன் சந்திரலேகா என்ற படத்தில் நடிகை வனிதா அறிமுகமானார். 1995-ம் ஆண்டு இந்த படம் வெளியானது. அதன்பின் வாய்ப்புகள் குறைவாக இருந்ததால் திரையுலகிலிருந்து விலகினார்.


கடந்த 2000-ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதா கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவகாரத்து செய்தார். பின் 2007-ம் ஆண்டு 2வது திருமணம் செய்து கொண்டார். அதுவும் 2010-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.


நடிகை வனிதாவிற்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகன் விஜய் ஸ்ரீஹரி அவரது அப்பா உடன் உள்ளார். தற்போது நடிகை வனிதா தனது 2 மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.


இதனிடையே நடிகை வனிதா பிக்பாஸ் 3-வது சீசனில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் நடிகை வனிதா வெளியேற்றப்பட்ட பின் நிகழ்ச்சி சூடு பிடிக்காததால் மீண்டும் வைல்டு கார்டு மூலம் ரீ-என்ட்ரி ஆனார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியை கலக்கிய பின் குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இந்நிலையில் நடிகை வனிதாவிற்கு திருமணம் என்று பத்திரிகை ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.


அதனை உறுதிப்படுத்தி உள்ள நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார். பீட்டர் ஒரு தொழில்முறை இயக்குனர். என் இதயத்தை திருடி காதலில் விழ வைத்த அன்பான, அருமையான ஒரு மனிதர். மிக விரைவில் அவரது படைப்புகளை திரையில் நீங்கள் காண்பீர்கள் என்றுள்ளார்.


ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு ஏற்ற சரியான ஆணை தேர்ந்தெடுப்பது குறித்து ஒரு கனவு இருக்கும். என்னுடைய கனவு நனவாகியிருக்கிறது என்றுள்ள வனிதா தன்னுடைய குழந்தைகளிடம் கூறி சம்மதம் வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.