நடிப்புக்கான தேசிய விருதை கமல் மூன்றுமுறை வாங்கியிருக்கிறார். இன்னொருவர் நடிகர் மம்முட்டி. நான்காவது விருதை வாங்கி யார் முந்தப் போகிறார்கள் என்ற போட்டி சிலகாலம் முன்புவரை அவர்களுக்குள் இருந்தது. நடிகைகளில் 3 முறை நடிப்புக்கான தேசிய விருது வாங்கியவர் சாரதா. நடிகைகளுக்கான தேசிய விருதிற்கு ஊர்வசி என பெயர் என்பதால் இவர் 'ஊர்வசி' சாரதா என்ற பெயரில்தான் பிரபலம்.
1945 இல் வெங்கடேசலு ராவ், சத்தியவதி தம்பதியரின் மகளாக ஆந்திரா மாநிலம் குண்டூரில் உள்ள தெனாலியில் சாரதா பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் சரஸ்வதிதேவி. ஆறு வயதிலேயே பரதநாட்டியம் கற்றவர், தனது 10 வது வயதில் என்டி ராமராவ் நடிப்பில், பி.புல்லையா இயக்கிய கன்னியாசுல்கம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 13 வது வயது முதல் நாடகங்களில் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.
அப்போது தென்னிந்திய சினிமாவின் மையமாக அன்றைய மெட்ராஸ் இருந்தது. அதனால், சினிமாவில் நடிப்பதற்காக சாரதாவின் குடும்பம் சென்னையில் குடியேறியது. சாரதாவைவிட அவரது தாயாரே மகள் நடிகையாக வேண்டும் என்பதில் பெரு விருப்பம் கொண்டிருந்தார். 1961 இல் இத்தரு பித்ருலு தெலுங்குப் படத்தில் நாகேஸ்வரராவின் தங்கையாக படம் முழுவதும் வரக்கூடிய வேடம் கிடைத்தது. அது சாரதாவின் முதல் திருப்புமுனையாக அமைந்தது.
தெலுங்கில் நடித்த அளவுக்கு மலையாளத்திலும் சாரதா நடித்தார். ஆந்திராவில் பிறந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி, சென்னையில் வசித்து, மலையாளத்தில் வெற்றிக் கொடி நாட்டியவர் என்று சாரதாவை சொல்லலாம். எம்டி வாசுதேவன் நாயர் திரைக்கதையாசிரியராக அறிமுகமான முறப்பொண்ணு படத்தில் சாரதா முறைப்பெண்ணாக நடித்தார். ஏ.வின்சென்ட் இயக்கிய அந்தப் படம் சாரதாவுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதன் பிறகு ஓய்வில்லாமல் மலையாளத்தில் நடித்தார். 1968 இல் ஏ.வின்சென்ட் இயக்கிய துலாபாரம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான முதல் தேசிய விருதை சாரதா பெற்றார். துலாபாரம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாரிக்கப்பட்ட போது அனைத்து மொழிகளிலும் சாரதாவே நடித்தார்.
சாரதாவை தமிழுக்கு அழைத்து வந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். 1963 இல் வெளியான தனது குங்குமம் படத்தில் சாரதாவை அவர் நடிக்க வைத்தார். தொடர்ந்து துளசி மாடம், வாழ்க்கை வாழ்வதற்கே, ஞான ஒளி போன்ற படங்களில் சிவாஜியுடன் நடித்தார். நினைத்ததை முடிப்பவன் திரைப்படத்தில் தனது தங்கையாக சாரதாதான் நடிக்க வேண்டும் என்று சாரதாவின் கால்ஷீட்டுக்காக காத்திருந்து அவரை நடிக்க வைத்தார் எம்ஜிஆர். எனினும் 15 திரைப்படங்களே அவர் தமிழில் நடித்தார்.
சாரதாவின் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமையவில்லை. 1972 இல் அவர் சலம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடுகளால் 1984 இல் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். சாரதாவுக்கு குழந்தைகள் இல்லை. ஆனால், அதை அவர் ஒரு குறையாக கருதியதில்லை. விவாகரத்துக்குப் பிறகு தெலுங்கிலும், மலையாளத்திலும் தொடர்ந்து நடித்தார். சந்திரபாபுவின் கட்சியில் இணைந்து எம்பியுமானார்.