1938 ஆம் ஆண்டு, ஜனவரி 7 ஆம் தேதி கர்நாடகாவில் பிறந்த சரோஜாதேவிக்கு இன்று 85 வது பிறந்தநாள். குஷ்பு பீக்கில் இருந்த போது குஷ்பு சேலை, குஷ்பு இட்லி என்று தமிழகம் குஷ்பு மயமாக இருந்தது. அவருக்கு முன்னால் அப்படியொரு க்ரேஸ் ரசிகர்கள் மத்தியில் நதியாவுக்கு இருந்தது. இவர்கள் இருவருக்கும் முன்னோடி சரோஜாதேவி. அறுபதுகளில் தமிழ், தெலுங்கு, கன்னட பெண்களின் தலையலங்காரத்தையும், உடையலங்காரத்தையும் தீர்மானிப்பவராக சரோஜாதேவி இருந்தார்.
சரோஜாதேவியின் தந்தை பைரப்பா போலீஸ் அதிகாரி. மகளுக்கு சின்ன வயதிலேயே நடனம் கற்க ஏற்பாடு செய்தார். அப்போதே மகளை நடிகையாக்க வேண்டும் என்ற திட்டம் அவருக்கு இருந்தது. 1955 இல் ஹெnன்னப்ப பாகவதர் தயாரித்து, நடித்த மகாகவி காளிதாஸ் கன்னடப் படத்தில் சரோஜாதேவி அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் சின்ன வேடங்களில் தலைகாட்டினார். 1956 இல் ஜெமினி கணேசன், சாவித்ரி நடித்த திருமணம் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். 1957 இல் பாண்டுரங்கா மகாத்மியம் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
1958 இல் வெளியான எம்ஜி ராமச்சந்திரனின் நாடோடி மன்னன் படத்தில் முதல்முறையாக நாயகியானார் சரோஜாதேவி. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைந்து அவருக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. அந்த வருடம் சிவாஜி கணேசனுடன் சபாஷ் மீனா, சிவாஜி, ஜெமினியுடன் கன்னடப் படம் ஸ்கூல் மாஸ்டர், சாண்டோ சின்னப்ப தேவரின் தயாரிப்பில் செங்கோட்டை சிங்கம் ஆகிய படங்களில் நடித்தார். இவை அனைத்துமே சரோஜாதேவியின் வாழ்க்கையில் திருப்புமுனை நிகழ்வுகளாக அமைந்தன.
நாடோடி மன்னனில் எம்ஜி ராமச்சந்திரனுடன் நடித்த சரோஜாதேவி 1967 அரசகட்டளைவரை 26 படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தாய் சொல்லை தட்டாதே, தர்மம் தலைகாக்கும், பெரிய இடத்துப்பெண், படகோட்டி, தாயைக் காத்த தனயன், எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா, பெற்றால்தான் பிள்ளையா போன்ற முக்கியமான படங்கள் இதில் அடங்கும்.
சிவாஜியின் சபாஷ் மீனாவில் சந்திரபாபு ஜோடியாக நடித்த சரோஜாதேவி அதன் பிறகு சிவாஜியின் ஜோடியாக பாலும் பழமும், விடிவெள்ளி, ஆலயமணி, புதிய பறவை, குலமகள் ராதை, பார்த்தால் பசி தீரும் உள்பட 20 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தேவரின் செங்கோட்டை சிங்கத்தைத் தொடர்ந்து அவரது ஆறு படங்களில் தொடர்ச்சியாக நாயகியானார். ஜெமினியின் திருமணம் படத்தில் சின்ன வேடத்தில் தோன்றியவர் 1959 இல் சி.வி.ஸ்ரீதரின் கல்யாணப் பரிசு படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் மாபெரும் வெற்றிக்குப் பின் பணமா பாசமா, கைராசி, வாழ்க்கை வாழ்வதற்கே, தாமரை நெஞ்சம் உள்பட 15 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
நாடோடி மன்னனில் நாயகியாகி அடுத்தடுத்து நாயகியாக நடித்துக் கொண்டிருக்கையில், அவர் துணை கதாபாத்திரத்தில் நடித்த பார்த்திபன் கனவு வெளியானது. அந்தப் படத்தை தொடங்கும் போது அவர் துணை நடிகை. அஞ்சலிதேவியின் தோழியாக நடித்தார். படம் பல வருடங்கள் தயாரிப்பில் இருந்து 1960 இல் வெளியான போது அவர் முன்னணி நாயகி. சரோஜாதேவியின் தாயார் கேட்டுக் கொண்டதால் பார்த்திபன் கனவில் கௌரவ வேடம் என்று சரோஜாதேவியின் பெயரை போட்டனர்.
நாடோடி மன்னனில் அடைந்த புகழை 1967 இல் திருமணம் செய்து கொண்டதுவரை சரோஜாதேவி இழக்கவில்லை. திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்தார். எழுபதுகளின் முற்பகுதிவரை சினிமாவில் தீவிரமாக இயங்கியவர் பிறகு கன்னடம், தெலுங்கில் மட்டும் தேர்வு செய்து சில படங்களில் நடித்தார். தமிழில் ஒன்ஸ்மோர் படத்தில் சிவாஜியுடன் தோன்றினார். இன்னொரு படம் சூர்யாவின் ஆதவன்.
சரோஜாதேவி பீக்கில் இருந்த அறுபதுகளில் மூன்று மொழி ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். நீச்சல் உடை உள்பட எந்த கவர்ச்சியான உடையும் அணியக் கூடாது, சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடிக்கக் கூடாது என்பதில் சரோஜாதேவியின் அம்மா உறுதியாக இருந்தார். அதனை அவரும் கடைசிவரை கடைபிடித்தார். சம்பள விஷயத்தில் அவரது அம்மா கறாராக இருந்ததால் சின்னப்பதேவர், ஸ்ரீதர் போன்ற ஒருசிலருடன் மனஸ்தாபம் ஏற்பட்டு அவர்கள் படங்களில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு பறிபோனாலும் முன்னணி வரிசையை சரோஜாதேவி இறுதிவரை தவறவிடவில்லை. 1967 இல் முன்னணி நட்சத்திரமாக இருக்கையில் அவர் திருமணம் செய்து கொண்டது எம்ஜி ராமச்சந்திரனுக்குப் பிடிக்கவில்லை. அதன் பிறகு சரோஜாதேவியை அவர் தனது படங்களில் பயன்படுத்தவில்லை. அதேபோல் ஸ்ரீதர் சரோஜாதேவியுடனான மனஸ்தாபத்துக்குப் பிறகு அவரை தவிர்த்து வைஜெயந்திமாலாவுக்கு வாய்ப்பளித்தார். திலீப் குமார், ஷம்மி கபூர் உள்பட அன்றைய பிரபல இந்திப்பட நட்சத்திரங்களுடன் சரோஜாதேவி நடித்து அங்கேயும் தனது அழகு மற்றும் நடிப்பால் பெயர் வாங்கினார்.