கன்னட படங்களில் நடிப்பதற்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன. இதுபற்றி ராஷ்மிகாவே விளக்கம் அளித்துள்ளார். அவரது பேட்டி ஒன்று வைரலாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ராஷ்மிகா மந்தனா இருந்து வருகிறார். அவர் கிர்க் பார்ட்டி என்ற படத்தில்தான் அறிமுகம் ஆனார். இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கியிருந்தார். தான் அறிமுகமான படத்தின் தயாரிப்பு நிறுவனத்தை ராஷ்மிகா சொல்லாமல் அவமதித்ததாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் அவரது படங்களுக்கு கன்னட சினிமாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதேபோன்று, சமீபத்தில் சூப்பர் ஹிட்டாகியுள்ள காந்தாரா படத்தை பார்க்கவில்லை என்று ராஷ்மிகா ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதனால் கன்னட ரசிகர்கள் சூடாகிப் போன நிலையில், இந்த விவகாரங்கள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது – காந்தாரா வெளியாகி 2-3 நாட்களில் என்னிடம் படம் பார்த்தீர்களா என்று கேட்டார்கள். நான் இன்னும் பார்க்கவில்லை என்றேன். அதன் பின்னர் படத்தை பார்த்து விட்டு படக்குழுவை பாராட்டி மெசேஜ் அனுப்பினேன். தனிப்பட்ட முறையில் நடக்கும் இதுபோன்றவற்றை எல்லாம், கேமரா முன்பு காண்பித்து கொண்டிருக்க முடியாது. கன்னட சினிமாவில் நடிப்பதற்கு எனக்கு எந்த தயாரிப்பாளரும் தடை விதிக்கவில்லை என்று கூறியுள்ளார். ராஷ்மிகா மந்தனா