அந்த நேரம், அமெரிக்காவில் படிப்பதற்கு சிவாஜிக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கும். எளிதில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு என்பதால் சிவாஜியின் தந்தை - இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் நாகையா - சிவாஜி அமெரிக்கா சென்று இரண்டு வருட படிப்பை முடித்த பின் பத்மினியை மணக்கலாம் என்பார். சிவாஜியும் இந்த விஷயத்தை பத்மினி மற்றும் அவரது தந்தையிடம் சொல்லி அனுமதி வாங்கி, அமெரிக்கா செல்வார். இப்போதுதான் முதல் எதிர்பாராதது நடக்கும்.
சிவாஜி சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி அனைவரும் மரணமடைந்ததாக செய்திவரும். அனைவரும் உடைந்து போவார்கள். சிவாஜியின் தந்தை அனைத்து சொத்துக்களையும் விற்று திருச்சிக்கு இடம் மாறுவார். அவரது நண்பர் அவரை வற்புறுத்தி, இன்னொரு திருமணம் செய்து கொள்ளச் சொல்வார். கடைசி காலத்தில் அவரைப் பார்த்துக் கொள்ளவும் யாராவது வேண்டுமே. முதலில் மறுப்பவர் பிறகு சம்மதிப்பார்.
இந்தக் கதைக்கு இணையாக பத்மினியின் அண்ணனின் கதை சொல்லப்படும். பெங்களூருவில் டாக்டராக இருக்கும் பத்மினியின் அண்ணன் சூதாட்டத்தால் சொத்துக்களை இழந்து தலைமறைவாகியிருப்பார். அவரது மனைவி திருச்சியில் உள்ள பத்மினியின் வீட்டில் தஞ்சமடைவார். கடன் தொல்லையின் காரணமாக பத்மினி திருமணம் செய்ய சம்மதிப்பார். இதுதான் ரசிகர்கள் எதிர்பார்க்காத இரண்டாவது எதிர்பாராதது. பத்மினி மணக்க சம்மதிப்பது நாகையாவை. தனது மகனின் காதலி பத்மினி என்பதோ, தனது காதலனின் தந்தை நாகையா என்பதோ இருவருக்கும் தெரியாது.
திருமணம் நடக்கும் நாளில், இந்தத் திருமணத்தில் உடன்பாடு இல்லாத பத்மினியின் தந்தை இறந்து போவார். தான் செய்த தவறை உணர்ந்து நாகையா மொத்த சொத்தையும் பத்மினி பெயருக்கு எழுதி வைத்துவிட்டு காசி, ராமேஸ்வரம் என ஆன்மிகச் சுற்றுலாச் செல்வார். கணவன் சொல்லிக் கொள்ளாமல் சென்றாலும், எங்கோ இருக்கும் அவர் நினைவாக வாழ்ந்து வருவார் பத்மினி. இந்த இடத்தில் மூன்றாவது எதிர்பாராதது வரும்.
ஆன்மிகச் சுற்றுலா சென்ற இடத்தில் கண் தெரியாமல் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் தனது மகன் சிவாஜியை நாகையா சந்திப்பார். விமான விபத்தில் சிவாஜி இறந்திருக்க மாட்டார். பார்வை மட்டும் போயிருக்கும். சிவாஜி தன்னை பத்மினியின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல சொல்வார். அதன் பிறகுதான் சிவாஜியின் காதலியை தான் மணந்தது நாகையாவுக்கு தெரிய வரும். சிவாஜி இந்த விஷயங்கள் எதுவும் தெரியாமல் பத்மினியை திருமணம் செய்ய வற்புறுத்துவார். பத்தினியான பத்மினி கணவனே கண் கண்ட தெய்வம் என்றிருப்பார்.
இதையறியும் நாகையா, தான் இறந்துவிட்டதாக ஒரு கடிதம் எழுதி அனைவரையும் நம்ப வைப்பார். புருஷன்தான் போய்விட்டானே என்று மீண்டும் சிவாஜி பத்மினியிடம் ப்ரப்போஸ் செய்வார். சந்தர்ப்பத்தை பயன்படுத்தறியா என்று பத்மினி சிவாஜியை விளாசிவிடுவார். இந்த நேரத்தில் ஓடிப்போன பத்மினியின் அண்ணன் திரும்பி வந்து, அறுவை சிகிச்சை மூலம் சிவாஜிக்கு பார்வை கிடைக்கச் செய்வார். பத்மினியைப் பார்க்க அவரது வீட்டிற்கு வருகையில், பத்மினியை திருமணம் செய்தது வேறு யாருமில்லை, தனது தந்தைதான், பத்மினி இப்போது தனது ஸ்டெப் மதர் என்பதை உணர்வார் சிவாஜி.
தந்தையின் மரண போர்ஜரியை அறிந்து அவரை மீண்டும் அழைத்துவர சிவாஜி சென்றால், நான்காவது எதிர்பாராதது. நாகையா ஏற்கனவே இறந்திருப்பார். பத்மினி இப்போது விடோ. கட்டிவன் இறந்தாலும் கடைசிவரை அவனே மணாளன் என பத்மினி அறதியிட்டுக்கூற, சிவாஜியும் அதனை உணர்ந்து, ஸ்டெப் மதரின் ஆசியுடன் அமெரிக்காவுக்கு மீண்டும் மேல் படிப்புக்காகச் செல்வார்.
படம் நெடுக எதிர்பாராத ட்விஸ்ட்களைக் கொண்ட இந்தப் படத்தின் கதை, வசனத்தை ஸ்ரீதர் எழுத, நாராயணமூர்த்தி படத்தை இயக்கியிருந்தார். இசை சி.என்.பாண்டுரங்கன். 68 ஆண்டுகளுக்கு முன் 1954 டிசம்பர் 9 இதே நாளில் வெளியான எதிர்பாராதது திரைப்படம் 100 நாள்கள் ஓடி வெற்றிப் படமானது. பிறகு இந்தப் படம் மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.