எண்பதுகளின் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத நடிகை மாதவி, அகலவிழி அழகி என்றால் அப்போது அது மாதவியைத்தான் குறிக்கும். ஸ்ரீதேவியும், ஜெயப்ரதாவும் இந்திக்குச் சென்ற பின் அம்பிகா, ராதா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளாக வலம் வந்தனர். அவர்களுக்கு இணையாக தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் 300 க்கும் அதிகமான படங்களில் நடித்தார் மாதவி.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் மாதவியின் சொந்த ஊர். அப்பா கோவிந்த ஸ்வாமி, அம்மா சசிரேகா. ஒரு சகோதரியும், சகோதரனும் மாதவிக்கு உண்டு. சின்ன வயதிலேயே பரதநாட்டியம் கற்றுக் கொண்டார். ஆயிரம் மேடைகளுக்கு மேல் பரதநாட்டியம் ஆடியுள்ளார். அவர் சினிமாவில் அறிமுகமாகவும் அவரது நாட்டிய நிகழ்ச்சியே காரணமாக அமைந்தது.
மாதவியின் நடனத்தைப் பார்த்த தாசரி நாராயண ராவ், அவரது பாவங்களில் கவரப்பட்டு, தான் அப்போது எடுத்து வந்த, தூர்பு படமாரா என்ற தெலுங்குப் படத்தில் மாதவியை அறிமுகப்படுத்தினார். 1976 இல் இந்தப் படம் வெளியானது. அதன் பிறகு ஓய்வின்றி 17 வருடங்கள் மாதவி தொடர்ச்சியாக நடித்தார். 1978 இல் கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடித்த மரோ சரித்திராவில் மாதவி நடித்தார். பிறகு அந்தப் படத்தை இந்தியில் (ஏக் துஜே கே லியே) பாலசந்தர் எடுத்த போது, தெலுங்கில் செய்த அதே வேடத்தை மாதவிக்கு அளித்தார்.
தமிழில் கமலுடன் அவரது 100 வது படமான ராஜபார்வையில் மாதவி நடித்தார். அவரது வேடம் பிரபலமாகப் பேசப்பட்டது. முக்கியமாக அந்திமழை பொழிகிறது பாடலில் பிகினியில் அவர் தோன்றியது ரசிகர்களுக்கு பரவசமூட்டியது. தொடர்ந்து காக்கிச்சட்டை, மங்கம்மா சபதம், சட்டம், எல்லாம் இன்ப மயம், டிக் டிக் டிக் படங்களில் நடித்தார். இதில் டிக் டிக் டிக் படத்தில் மாதவியின் பிகினி உடை அன்று பேசுபொருளானது.
பொதுவாக நாயகிகள் பிகினி அணிவதென்றால் வயிற்றை மறைக்கும் சிங்கிள் பீஸ் பிகினியே அணிவார்கள். அதிலும் இடுப்பில் எக்ஸ்ட்ராவாக ஒரு சல்லடை துணிகட்டி கவர்ச்சியை கட்டுப்படுத்துவார்கள். ஆனால், மாதவி டூ பீஸ் பிகினியில் தைரியமாக நடித்தார். அதற்கேற்ற உடற்கட்டு அன்றைய தேதியில் அவருக்கு இருந்ததும் முக்கிய காரணம்.
ரஜினியுடன் மாதவி நடித்த தில்லு முல்லு இன்னொரு சிறப்பான திரைப்படம். ரஜினியுடன் தம்பிக்கு எந்த ஊரு, கர்ஜனை, விடுதலை, உன் கண்ணில் நீர் வழிந்தால் உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்தார். தெலுங்கில் என்.டி.ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், சோபன்பாபு, கிருஷ்ணா, சிரஞ்சீவியுடனும், கன்னடத்தில் ராஜ்குமார், விஷ்ணுவர்தனுடனும், இந்தியில் அமிதாப்பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் மாதவி நடித்துள்ளார். மம்முட்டிக்கு தேசிய விருது பெற்றுத் தந்த ஒரு வடக்கன் வீர கதா படத்தில் மாதவி நடித்த உண்ணியார்ச்சா கதாபாத்திரம் சிறப்பான ஒன்று.
தனது நடிப்பாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களை கவர்ந்த மாதவி ஒருகட்டத்தில் சில பிரச்சனைகளை எதிர்கொண்டார். ஆன்மிகத்தில் அவரது நாட்டம் சென்றது. அவரது ஆன்மிக குரு சொன்னதன்படி, அவரது பக்தர்களில் ஒருவரான ரால்ஃப் ஜெய்தீப் என்பரை திருமணம் செய்து கொண்டார். இவர் பாதி இந்தியர், பாதி ஜெர்மனியர். அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் அவருக்கு பார்மசூட்டிகல் கம்பெனி இருந்ததால் திருமணத்துக்குப் பின் மாதவி நியூ ஜெர்சியில் செட்டிலானார். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் மாதவி அளித்த பேட்டியில், நல்ல படங்களை பார்க்கையில் நாம் அதில் நடித்திருக்கலாமே என்று தோன்றும். அதே நேரம், நடிக்கச் சென்றால் குழந்தைகளையும், கணவரையும் யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணமும் வரும். என்னுடைய குழந்தைகள் நடிக்க ஆசைப்பட்டால் கண்டிப்பாக அவர்கள் நடிக்க அனுமதிப்பேன் என்றார்.