இடைக்கால தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த சினிமாக்காரர் எல்.வி.பிரசாத். ஆந்திராக்காரர். சினிமா கற்றுக் கொள்ள மும்பை சென்று வாட்ச்மேன் முதற்கொண்டு அனைத்து வேலைகளையும் பார்த்தார். சினிமாவில் லைட் பாய் உள்பட அனைத்து வேலைகளையும் திறம்பட அறிந்திருந்தார். பல படங்களில் நடித்தார். படங்கள் இயக்கினார். ஒருகட்டத்தில் அவரே படங்கள் தயாரித்தார். பிறப்பிடம் தெலுங்காக இருந்தாலும் தமிழில் மனோகரா, மிஸ்ஸியம்மா போன்ற சிறந்த படங்களை இயக்கினார்.
மிஸ்ஸியம்மா திரைப்படம் வங்க நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். நாகி ரெட்டி, அல்லுரி சக்ரபாணியின் அன்றைய விஜயா வாஹினி ஸ்டுடியோ படத்தை தயாரித்தது. சக்ரபாணியே படத்தின் திரைக்கதையை எழுதினார். 500 படங்களுக்கு மேல் திரைக்கதை வசனம் எழுதி தமிழக அரசின் விருது பெற்ற 'கலை வித்தகர் 'ஆரூர் தாஸின் குரு தஞ்சை என்.ராமையா தாஸ் படத்தின் வசனங்கள், பாடல்களை எழுதினார்.
மிஸ்ஸியம்மா கதைப்படி நாயகன் பாலு (ஜெமினி கணேசன்) ஓர் இந்து. நாயகி மேரி (சாவித்ரி) கிறிஸ்தவர். பாலுவுக்கு ஒரு வேலை வேண்டும். மே ரிக்கு தந்தை வாங்கிய கடனை அடைக்க பணம் வேண்டும். இந்நிலையில் ஜமீன்தார் ஒருவர் தனது பள்ளிக்கூடத்திற்கு தம்பதிகளாக இருப்பவர்களை ஆசிரியர்களாக நியமிக்க இருப்பது தெரியவரும். பாலுவும், மேரியும் தம்பதிகள் என பொய் சொல்லி வேலையில் சேர்வார்கள். மேரி ஜமீன்தாரின் மகளுக்கு இசை சொல்லித் தருவாள்.
ஜமீன்தாரும், அவரது மனைவியும் 15 வருடங்களுக்கு முன் தங்களின் மூத்த மகளை திருவிழாவில் தொலைத்திருப்பார்கள். அவளது நினைவாக தங்களது பள்ளிக்கூடத்துக்கு மகாலட்சுமி என்று அவளது பெயரை சூட்டியிருப்பார்கள். மேரியின் பேச்சும், செயலும், குணமும் அவர்களது மூத்த மகளைப் போலவே தோன்றும். இதன் பிறகான கதையை சொல்லாமலே தமிழ் திரைப்பட ரசிகர்கள் யூகித்துக் கொள்வார்கள். ஜமீன்தாரின் காணாமல் போன் மூத்த மகள் மகாலட்சுமிதான் மேரி. இறுதியில் பாலுவும், மேரியும் உண்மையாகவே திருமணம் செய்து தம்பதிகளாவதுடன் படம் முடியும்.
எல்.வி.பிரசாத் மும்பையில் இருக்கையில் அவருக்கும் முஸ்லீம் நண்பருக்குமிடையில் இருந்த ஆத்மார்த்த நட்பை பிரதிபலிக்கும் வகையில் நாயகன், நாயகி இருவரையும் வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக காட்டியிருந்தார். நாயகியாக நடிக்க பானுமதியை ஒப்பந்தம் செய்து நான்கு ரீல்கள் அவரை வைத்து காட்சிகள் எடுத்த நிலையில், சரிவர படப்பிடிப்புக்கு வராமல் பிரச்சனை செய்ய ஆரம்பித்துள்ளார்.
வீட்டில் வரலட்சுமி விரதம் நடப்பதால் மதியத்துக்கு மேல்தான் படப்பிடிப்புக்கு வர முடியும் என்று கூறியுள்ளார். அவரால் படப்பிடிப்பு மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தனது தாமதத்திற்கு வருத்தம் தெரிவிக்கவும் பானுமதி மறுத்திருக்கிறார். கோபக்காரரான சக்ரபாணி, பானுமதி முன்பாகவே அந்த நான்கு ரீல்களையும் எரித்துவிட்டு, அவருக்குப் பதில் சாவித்ரியை ஒப்பந்தம் செய்தார்.
மிஸ்ஸியம்மா தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டது. தெலுங்கில் ஜெமினி கணேசன் நடித்த வேடத்தில் என்டி ராமராவும், தங்கவேலு நடித்த வேடத்தில் நாகேஸ்வரராவும் நடித்தனர். அங்கும் சாவித்ரியே மேரி கதாபாத்திரத்தில் நடித்தார். 1955 ஜனவரி 12 ஆம் தேதி தெலுங்குப் பதிப்பு மிஸ்ஸம்மா என்ற பெயரிலும், அதற்கு இரு தினங்கள் கழித்து ஜனவரி 14 ஆம் தேதி மிஸ்ஸியம்மா என்று தமிழிலும் படம் வெளியானது.
மிஸ்ஸியம்மாவில் ராஜேஷ்வரராவ் இசையில் தஞ்சை ராமையா தாஸ் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருந்தார். வாராயோ வெண்ணிலாவே..., பிருந்தாவனமும் நந்தகுமாரனும்..., என்னை ஆளும் மேரி மாதா... உள்ளிட்ட பாடல்கள் மிகுந்த வரவேற்பை பெற்று படத்தை 100 நாள்களுக்கு மேல் ஓட வைத்தன. படத்தைப் பார்த்த ஏவி மெய்யப்ப செட்டியார் அதன் உரிமையை வாங்கி இந்தியில் மிஸ் மேரி என்ற பெயரில் ரீமேக் செய்தார். தமிழ் தெலுங்குப் படங்களை இயக்கிய எல்.வி.பிரசாத்தே இந்திப் பதிப்பையும் இயக்கினார். ஜெமினி கணேசன் அதிலும் நாயகனாக நடிக்க, மீனா குமாரி நாயகியாக நடித்தார். கிஷோர் குமார், ஜமுனா, ஓம் பிரகாஷ் ஆகியோரும் நடித்தனர். ஹேமந்த் குமார் இந்திப் படத்துக்கு இசையமைத்தாலும், பிருந்தாவனமும் நந்தகுமாரனும்... பாடலின் மெட்டை அப்படியே இந்தியிலும் பயன்படுத்திக் கொண்டனர்.