நடிகை மீனாவின் மகள் நைனிகா தெறியில் விஜய் மகளாக சினிமாவில் அறிமுகமானார். எளிதில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு. நைனிகாவை விளம்பரப் படம் ஒன்றில் நடிக்க வைப்பதற்காக அணுகிய போது, மீனா தரப்பில் சொல்லப்பட்ட நிபந்தனைகளைக் கேட்டு இயக்குநர் ஓடி வந்துவிட்டார். அரைநாள் ஷுட்டிற்கு சிங்கிள் டோர் கேரவன், மேக்கப், ஹேர் ஸ்டைல் மற்றும் காஸ்ட்யூமுக்கு தனித்தனி நபர்கள், அவர்களுக்கான சம்பளம், காலை, மதிய உணவுக்கு பல்லாயிரம் ரூபாய் பில்... பாதி கேட்டதுமே இயக்குநர் இது ஆகிற காரியமில்லை என திரும்பிவிட்டார்.
ஆனால், இதைவிட அதிகம் தந்து நைனிகாவை நடிக்க வைக்க பலர் தயாராக இருக்கிறார்கள். இந்தத் தங்கத் தாம்பாள வரவேற்பு ஒரேநாளில் கிடைத்துவிடவில்லை. இதற்காக நைனிகாவின் அம்மா மீனா, அவரது பாட்டி ராஜ் மல்லிகா, சின்ன பாட்டி ராஜ் கோகிலா என நிறைய பேர் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வெற்றியாளனுக்குப் பின்னாலும் இருக்கும் வறுமை, அவமானம், கஷ்டங்கள் அனைத்தையும் நைனிகாவின் குடும்பமும் எதிர்கொண்டிருக்கிறது.
அப்போது அவரது பெயர் கோகிலா. 1966 இல் வெளியான மோட்டார் சுந்தரம்பிள்ளை திரைப்படத்தில் சிவாஜி - மணிமாலா தம்பதியின் மகளாக கோகிலா நடித்தார். 1970 இல் வெளியான தேடிவந்த மாப்பிள்ளை படத்தில் ஜெயலலிதாவின் தோழியாக நடித்தார். 1972 இல் வெளியான பாலசந்தரின் வெள்ளி விழா படத்தில் ஜெமினி கணேசனின் மகளாக நடித்திருந்தார். 1966 இல் இருந்தே மலையாளத்தில் கோகிலா நடிக்க ஆரம்பித்தார். சத்யன், சாரதா நடித்த பகல்கினாவு, கொடுங்கலூரம்மா, யக்ஷி என தொடர்ச்சியாக நடித்தார். தமிழில் 1972 இல் கர்ணனின் கங்கா திரைப்படத்தில் நாயகியானார்.
ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கர்ணன் தமிழ் சினிமாவில் தனி உலகை படைத்தவர். ஹாலிவுட் கௌபாய் படங்களை தமிழ் நிலத்தில் எடுத்த சாகஸக்காரர். கௌபாய்களைப் போன்று உடையணிந்த நாயகன், வில்லன், அடியாள்கள், அங்குள்ளதைப் போன்ற மரத்தாலான பார்கள், நடன விடுதிகள், குதிரைகள் என தமிழில் கௌபாய் உலகை அறிமுகப்படுத்தியவர். இவரது படங்களில் சண்டைக்காட்சிகளும், கவர்ச்சிக் காட்சிகளும் தூக்கலாக இருக்கும்.
நாயகனுக்கு தோலால் ஆன கடின உடைகளை தருகிறவர், பலநேரம் நடிகைகளை தோலே ஆடையாக உலவவிடுவார். இவரது படங்களில் வரும் குளியல் காட்சிகளுக்காகவே இளைஞர் கூட்டம் திரையரங்கில் அள்ளும். கர்ணனின் படங்களில் கவர்ச்சி பிளஸ் சண்டை நாயகியாக ராஜ்கோகிலா நடித்தார். பிறகு அவரைப் போன்ற மலையாளத்தின் சண்டை நடிகர் கிராஸ்பெல்ட் மணியை மணந்து கொண்டு திரையுலகிலிருந்து விலகினார்.
தங்கையுடன் படப்பிடிப்புக்கு சென்ற மல்லிகாவுக்கு கர்ணன் தனது படங்களில் வாய்ப்புகள் தந்தார். அதிகமும் கவர்ச்சியான வேடங்கள். அதில் ஒன்று சுமன் நடித்த அவனுக்கு நிகர் அவனே. அதில் படுகவர்ச்சியாக வருவார். ராஜ் மல்லிகா அதிக வருடங்கள் சினிமாவில் தங்கவில்லை. ஆந்திராவைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு திரைத்துறையிலிருந்து விலகினார். அவருக்குப் பிறந்தவர்தான் நடிகை மீனா.