தற்போது, நடிகர் சூர்யா அவரின் குடும்பத்தினருடன் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டுள்ளார். நடிகர் சூர்யாவுடன் அவரின் மனைவியும் நடிகையும் ஆன ஜோதிகா, தந்தை சிவகுமார் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் ஆகியோர் இணைந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அகழாய்வு பொருட்களை இன்று பார்வையிட்டனர். மேலும் அருங்காட்சியக ஊழியர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.
கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வுகள் நடந்தன. இந்த அகழாய்வில் செங்கல் கட்டுமானங்கள், தமிழ் பிராமி எழுத்துகள், குறியீடுகள் பொறிந்த பானை ஓடுகள், கல் மணிகள், ஆட்டக்காய்கள், வெள்ளி முத்திரைக் காசுகள், கங்கை நாகரிகத்துடன் தொடர்புடைய கறுப்பு வழுவழுப்பு பானைகள் உள்ளிட்டவை கிடைத்தன. இதனைத்தொடர்ந்து மேற்கொண்ட அகழாய்வில், உருண்டையான பானைகள், உருக்கு உலைகள், சுடுமண் முத்திரைகள், கண்ணாடி, சங்கு மணிகள் உள்ளிட்டவையும் கிடைத்தன.