அயோத்தி திரைப்படத்தின் கதை விவகாரத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பெயர் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. வட இந்தியாவிலிருந்து ஒரு குடும்பம் தமிழ்நாட்டுக்கு ஆன்மிக சுற்றுலா வந்த இடத்தில், குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்து போகிறார். அவரது உடலை சொந்த ஊரில் சேர்க்க, இங்குள்ள தமிழர் ஒருவர் உதவுகிறார். இதுதான் அயோத்தியின் ஒருவரி கதை.
இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றன. பத்திரிகைகளில் செய்தியாக வந்திருக்கின்றன. அதை வைத்து ஒருவர் இரண்டு பக்கத்தில் கதையொன்றை எழுதியுள்ளார். அந்தக் கதையை எஸ்.ராமகிருஷ்ணன் காப்பியடித்துள்ளார் என்பது சர்ச்சை. எஸ்.ராமகிருஷ்ணன், இந்த சம்பவத்தில் நேரடித் தொடர்புள்ள ஒருவர் சொன்னதை வைத்து அயோத்தி கதையை உருவாக்கியதாக கூறியுள்ளார். யார் பக்கம் நியாயம் என்பதல்ல நம்முடைய விஷயம்.
தமிழ் சினிமாவில் இதுபோன்ற காப்பி சர்ச்சைகள் தொன்றுதொட்டே இருந்து வந்திருக்கிறது. அவற்றையெல்லாம் கண்டும் காணாமலும், வழக்கு தொடுத்தும், நஷ்டஈடு வாங்கியும்தான் திரைத்துறை முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. 1978 இல் விஜயகுமார், லதா நடிப்பில் ஆயிரம் ஜென்மங்கள் என்ற திரைப்படம் வெளியானது. அப்போது ரஜினியைவிட விஜயகுமார் மூத்த, பெரிய நடிகர். அதனால் விஜயகுமார் ஹீரோ, முக்கியமான வேடத்தில் ரஜினி. படத்தின் கதை எளிமையானது.
தம்பதிகளான விஜயகுமாரும், லதாவும் சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள விஜயகுமாரின் எஸ்டேட்டுக்கு வருவார்கள். அங்கு வந்தது முதல் லதாவுக்கு அமானுஷ்யமான விஷயங்கள் அனுபவப்படும். ஒரு ஆவி லதாவின் உடலுக்குள் புகுந்து கொண்டு, வேறொரு நபராக நடந்து கொள்ள ஆரம்பிக்கும். இதனை கவனித்த லதாவின் அண்ணனான ரஜினிகாந்த், லதாவை பின்தொடர்ந்து, லதாவின் உடம்புக்குள் புகுந்திருப்பது விஜயகுமாரின் முன்னாள் காதலி, இறந்து போன பத்மப்ரியாவின் (இது தவமாய் தவமிருந்து பத்மப்ரியா அல்ல, கன்னட நடிகை பத்மப்ரியா) ஆவி என்பதை கண்டுபிடிப்பார்.
விஜயகுமாருடன் இணைய முடியாமல் போன ராதா, பவுர்ணமிக்கு ஐந்து நாள் முன்பு அவருடன் கூடினால் சுய உருவத்தை அடையலாம் (நன்றி ஜெகன்மோகினி) என்று லதா உடம்புக்குள் இருக்கும் ராதா தனது தாயிடம் கூறுவதை ரஜினிகாந்த் கேட்பார். இது நடந்தால் அவரது தங்கையை மறந்துவிட வேண்டியதுதான். ராதாவின் எண்ணம் நடக்காமல் தடுப்பது கதை.
'மதி ஒளி' சண்முகம் திரைக்கதை, வசனம் எழுத துரை ஆயிரம் ஜென்மங்களை இயக்கினார். இந்தப் படத்தின் கருவிலிருந்து உருக்கொண்டதுதான் பாசிலின் மணிசித்ரதாள் உள்ளிட்ட ஏராளமான படங்கள். ஆயிரம் ஜென்மங்கள் அந்தக்காலத்திலேயே மலையாளத்தில் யக்ஷகானம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. மது, ஷீலா, கே.பி.உம்மர், அடூர்பாசி, திக்குறிச்சி சுகுமாரன் நாயர் உள்ளிட்டவர்கள் நடித்தனர். ஆயிரம் ஜென்மங்களுக்கு இசையமைத்த எஸ்.எஸ்.விஸ்வநாதனே மலையாளப்படத்துக்கும் இசையமைத்தார்.
ஆயிரம் ஜென்மங்களை அப்படியே பிரதி செய்து அரண்மனை படத்தை சந்தர் சி. எடுத்தார். படம் பம்பர் ஹிட்டாகி இரண்டு, மூன்று என குட்டிகளாகப் போட்டு, கோடிகளை குவித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் ஆயிரம் ஜென்மங்களானாலும் இன்ஸ்பிரேஷனில் படம் செய்வதை சினிமாக்காரர்கள் நிறுத்தப் போவதில்லை, சர்ச்சைகளும் ஓயப்போவதில்லை.