சங்கிலியில் சிவாஜி கணேசன் இரு வேடங்களில் நடித்திருந்தார். பிரபு ராஜாளி என்ற சிறிய வேடத்தில் நடித்தார். நாயகியாக ஸ்ரீப்ரியாவும், வில்லன் 'லயன்' தயாநிதியாக நம்பியாரும் நடித்திருந்தனர். இந்தப் படம் தயாரிப்பில் இருக்கும் போதே பிரபு பிற படங்களில் ஒப்பந்தமானார். நம்ப மாட்டீர்கள், மொத்தம் ஆறு படங்கள். ஆறும் சங்கிலி வெளியான அதே வருடம் திரைக்கு வந்தது. அதில் குறிப்பிட வேண்டிய படம் கோழிக்கூவுது.
கங்கை அமரன் இயக்குனராக அறிமுகமான கோழிக்கூவுதில் பிரபு ராணுவ வீரனாக நடித்தார். அவருக்கு ஜோடி சில்க்ஸ் ஸ்மிதா. முரட்டு ஆளாக பிரபு இதில் நடித்தார். ஆனால், உள்ளுக்குள் நல்லவர். படத்தில் சுரேஷ், விஜி இன்னொரு ஜோடி. விஜி இந்தப் படத்தில் தான் அறிமுகமானார். இளையராஜாவின் பாடல்கள் கோழிக்கூவுதின் ஹைலைட்டாக அமைந்தன. வீரய்யா... வீரய்யா... பாடலை பஞ்சு அருணாச்சலம் எழுத, ஆயர்பாடி கண்ணனே... பாடலை கங்கை அமரன் எழுதினார். அண்ணே.. அண்ணே சிப்பாய் அண்ணே..., பொட்டப்புள்ள எல்லாருக்கும்... பாடல்களை வாலி எழுதினார். ஆனால், கலக்கியது வைரமுத்து. அவர் எழுதிய மூன்று பாடல்களில், ஏதோ மோகம்.. ஏதோ தாகம்..., பூவே இளைய பூவே பாடல்கள் அந்த காலத்தில் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தன. பிரபுவின் முதல் கமர்ஷியல் ஹிட்டாக கோழிக்கூவுது அமைந்தது.
பிரபு, சிவாஜி கணேசனுடன் இணைந்து பத்தொன்பது படங்களில் நடித்துள்ளார். அதில் சந்திப்பு, நீதிபதி, மிருதங்க சக்ரவர்த்தி போன்றவை முக்கியமானவை. எண்பதுகளில் வெளிவந்த அறுவடைநாள், பாலைவன ரோஜாக்கள், குரு சிஷ்யன், அக்னி நட்சத்திரம், என் தங்கச்சிப் படிச்சவ போன்ற படங்கள் பிரபுவின் ஸ்டார் அந்தஸ்தை உயர்த்தியது.