நடிகர் கிஷோர் இயற்கை விவசாயம் செய்து வருவது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வெற்றிமாறனின் பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கிஷோர். முதல் படத்திலேயே சிறந்த வில்லனுக்கான விஜய் டிவி விருதை வென்றார். அதன் பிறகு அவர் ’ஜெயங்கொண்டான்’ ’சிலம்பாட்டம்’ ’வெண்ணிலா கபடி குழு’ ’போர்க்களம்’, ‘ஹரிதாஸ்’ போன்ற பல படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ரவிதாசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்த மாதம் 28-ம் தேதி இதன் இரண்டாம் பாகம் வெளியாகவிருக்கிறது. அதிலும் கிஷோரின் ரவிதாசன் கதாபாத்திரம் இடம்பெற்றிருக்கிறது. இதற்கிடையே தனது கல்லூரி தோழி விஜயலட்சுமி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட கிஷோருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். படப்பிடிப்பு நேரம் போக மற்ற நேரங்களில் குடும்பத்துடன் இயற்கை விவசாயம் செய்து வருகிறார் கிஷோர். அதை தனது மகன்களுக்கும் சொல்லிக் கொடுத்து, ஆர்வத்துடன் ஈடுபட வைக்கிறார். இயற்கை விவசாயத்தின் மூலம் கிடைத்த பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கில், பெங்களூரில் கடை ஒன்றையும் வைத்திருக்கிறார். இதற்கிடையே இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் கிஷோரின் படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.