1993 இல் ஜென்டில்மேன் வெளியானதும் ஷங்கர் ரஜினியை வைத்து படம் இயக்க விரும்பினார். அவரிடம் பெரிய மனுஷன் என்ற கதையும் இருந்தது. சில காரணங்களால் அது நடக்கவில்லை. அந்த நேரத்தில் போலீஸ் கதைகளில் கல்லாகட்டிக் கொண்டிருந்த தெலுங்கு நடிகர் ராஜசேகரை வைத்து பெரிய மனுஷனை எடுக்க திட்டமிட்டார். ஒரு பிரதான கதாபாத்திரத்தில் ராஜசேகர், இன்னொன்றில் நாகார்ஜுன் போன்ற இளம் நடிகர். ஆனால், அதுவும் நடக்கவில்லை. அதற்குள் காதலன் படம் டேக்ஆஃப் ஆகி ரிலீஸும் ஆகியது.
இந்த நேரத்தில் ஏ.எம்.ரத்னம் கமலை வைத்து படம் எடுக்க கால்ஷீட் வாங்கியிருந்தார். பெரிய மனுஷன் கதை இதற்குள் நிறைய மாற்றம் பெற்று, கடைசியில் ஒருவரிக் கதையாக எஞ்சியது. ஒரு பெரியவர் சிலரை கத்தியால் குத்தி கொலை செய்கிறார்... ஏன்...? இதுதான் அந்த ஒருவரிக்கதையின் சாராம்சம். ஷங்கரின் மனதிற்குள் ஏன், எதற்கு என்ற கேள்விகளுக்கான பதில் இருந்தாலும், இந்த ஒருவரிக் கதையை உதவி இயக்குனர்களிடம் விவாதித்து, படிப்படியாக உருவாக்கியதே இந்தியன் படத்தின் கதை.
நாயகன் கமல் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்ட விஷயம். நாயகி? ஐஸ்வர்யா ராய் விளம்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்ததால் ஷங்கர் கேட்ட தேதிகளுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலையில் மனிஷா கொய்ராலாவை ஒப்பந்தம் செய்தனர். இன்னொருவர் கமலின் சாணக்யன் படத்தில் அறிமுகமான ஊர்மிளா மடோன்கர். அப்பா கமலின் ஜோடியாக நடிக்க ராதிகா முதற்கொண்டு பலரை பரிசீலித்து, மகாநதியில் கமலுடன் நடித்த சுகன்யாவை ஒப்பந்தம் செய்தனர். அதுபோல் நாசருக்குப் பதில் படத்தில் இணைந்து கொண்டவர்தான் நெடுமுடி வேணு.
வயதான கமலின் பிராஸ்தடிக் மேக்கப்பிற்காக ஹhலிவி[ட்டிலிருந்து மைக்கேல் வெஸ்ட்மோர் வரவழைக்கப்பட்டார். அதன்பிறகு நடந்தவை சரித்திரம். 1996 மே 9 இந்தியன் வெளியானது. பிறகு தெலுங்கில் பாரதியுடு என்ற பெயரிலும், இந்தியில் ஹிந்துஸ்தானி என்ற பெயரிலும் வெளியிட்டனர். இந்திக்காக பல காட்சிகள் புதிதாக எடுக்கப்பட்டன. குறிப்பாக மனோரமா நடித்த காட்சிகளை அருளா இரானியை வைத்து எடுத்தனர்.
இந்தியன் கேரளாவில் தமிழிலேயே வெளியானது. கர்நாடகாவில் தமிழில் வெளியான இந்தியன் 100 நாள்களை கடந்தது. அதே போல் தெலுங்கு, இந்திப் பதிப்புகளும் 100 நாள்களை கடந்தன. 1995 இல் பாட்ஷாவின் இன்டஸ்ட்ரி ஹிட் சாதனையை இந்தியன் முறியடித்தது. அத்துடன் தென்னிந்திய சினிமாவில் 50 கோடிகளை கடந்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது.
இந்தியன் வெளியான பிறகு கமலின் நடிப்புக்கு பெரும்பாலும் பாராட்டுக்களே கிடைத்தன. ஒருசிலர் எதிர்மறையாகவும் விமர்சித்தனர். அப்பா கமல் கதாபாத்திரத்தில் ஒரு வயதானவரையே நடிக்க வைக்கலாமே என கேட்டிருந்தனர். இது பேட்டியொன்றில் நேரடியாகவே கமலிடம் கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் அதிரடியான விளக்கம் ஒன்றை தந்தார் கமல். "மேஜிக்மேன் வெறுங்கையில் முட்டையை வர வைப்பார். முட்டைங்கிறது சாதாரணப் பொருள்தான், நாம தினசரி பார்க்கிறது. அதுல எந்த ஆச்சரியமும் இல்லை, ஆனா, அதை வெறுங்கையில எடுக்கிறார் இல்லையா, அதுதான் ஆச்சரியம், மேஜிக். 70 வயசு பெரியவர் 70 வயது நபரா நடிக்கிறதுல எந்த ஆச்சரியமும் இல்லை. எழுபது வயசு இல்லாத நான் அப்படி நடிச்சேன் இல்லையா, அதுதான் ஆச்சரியம் அந்த கேரக்டரோட மேஜிக் என்றார்.