தமிழ் திரையுலகின் ஜென்டில்மேன் என்றால் அது ஜெய்சங்கர். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என்ற மூன்று நாயகர்கள் தமிழ் சினிமாவை ஆண்ட காலத்தில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்தவர் ஜெய்சங்கர். சம்பளத்தை ஒரு பொருட்டாக கருதாமல் தயாரிப்பாளரின் கஷ்டம் அறிந்து நடித்தவர். பண்பாளர். ஜெய்சங்கர் குறித்து இன்னும் சொல்லிக் கொண்டு போகலாம்.
ஜெய்சங்கர் நாயகனாக அறிமுகமான படம் இரவும் பகலும். 1965 இல் வெளியான இந்தப் படத்தை மலையாளியான ஜோசப் தளியத் ஜுனியர் தயாரித்து இயக்கியிருந்தார். க்ரைம் த்ரில்லர் கதையான இதில் ஜெய்சங்கர், சி.வசந்தா, அசோகன், காந்திமதி, பண்டரிபாய், நாகேஷ் உள்பட பலர் நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பல படங்களில் ஜெய்சங்கர் நடித்தார்.
அவர் அறிமுகமான 1965 லேயே இரவும் பகலும் தவிர நான்கு படங்கள் அவரது நடிப்பில் வெளியாகின. இந்நிலையில் 1966 இல் ஜோசப் தளியத் தனது சிட்டாடெல் நிறுவனம் சார்பாக அடுத்தப் படத்தை தயாரித்து, இயக்க தயாரானார். பிரபல கதாசிரியர் கலைஞானம் அரை லூஸு முக்கா லூஸு என்ற பெயரில் எழுதிய காமெடிக் கதையை படமாக்குவதாக திட்டம். நாகேஷ், சந்திரபாபு இருவரையும் நடிக்க வைப்பது என முடிவு செய்திருந்தனர். இதனை கேள்விப்பட்ட ஜெய்சங்கர் ஜோசப் தளியத்தை சென்று சந்தித்திருக்கிறார். படத்தில் தனக்கொரு வேடம் வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். எடுக்க இருப்பது காமெடிப் படம். இதில் ஜெய்சங்கருக்கு ஏது வேடம்?
ஆனால், ஜெய்சங்கர் பணிவான பிடிவாதத்துடன் இருந்துள்ளார். நான் அறிமுகமானது உங்களுடைய நிறுவனம். நீங்கள் எடுக்கும் இரண்டாவது படத்தில் எனக்கு வாய்ப்பு தரவில்லை என்றால் நான் உங்களிடம் பிரச்சனை செய்து பிரிந்துவிட்டதாக நினைத்து வேறு யாரும் வாய்ப்பு தர மாட்டார்கள் என்ற தனது கவலையை ஜோசப் தளியத்திடம் கூறியுள்ளார். அது நியாயமாகப்படவே, படத்தில் இரண்டோ மூன்றோ காட்சிகள் மட்டும் வரும் மேனேஜர் கதாபாத்திரத்தை ஜெய்சங்கருக்கு தருவதென முடிவு செய்திருக்கிறார்கள். நாயகனாக நடித்த நாம் சின்ன வேடத்தில் நடிப்பதா என்று பிகு செய்யாமல் ஜெய்சங்கரும் ஒத்துக் கொண்டிருக்கிறார்.
ஜெய்சங்கரின் பணிவையும், பண்பையும் பார்த்த ஜோசப் தளியத், அந்த மேனேஜர் கதாபாத்திரத்தை சற்று விரித்து எழுத கதாசிரியரான கலைஞானத்தை கேட்க, அவரும் அதன்படி எழுதியுள்ளார். ஒருகட்டத்தில் அந்த கதாபாத்திரமே ஹீரோ அளவுக்கு பெரிதாக, அவர்கள் முன்பு வைத்த காமெடிக் காட்சிகள் குறைந்திருக்கின்றன. இதுவே நன்றாக இருக்கிறதே என்று அரை லூஸு முக்கா லூஸு பெயரை மாற்றி ஜெய்சங்கரை நாயகனாக்கி எடுத்தப் படம்தான் காதல் படுத்தும் பாடு. படம் வெளியாகி வெற்றி பெற்று நடித்தவர்கள் அனைவருக்கும் பெயர் வாங்கித் தந்தது.
ஜெய்சங்கர் மட்டும், நாம்தான் பல படங்கள் நடித்துவிட்டோமே என்று ஜோசப் தளியத்தை சந்திக்காமல் இருந்திருந்தாலோ, இருப்பது சின்ன வேடம் என்று தெரிந்ததும் வேண்டாம் என்று மறுத்திருந்தாலோ அவருக்கு ஒரு நாயகன் வாய்ப்பும், ஒரு வெற்றிப் படமும் கிடைத்திருக்காது. அன்று நடிகர்கள் பணிவுடன் இருந்ததையும், அதனை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மதித்து, அவர்களுக்குரிய வாய்ப்புகளை அளித்ததையும் இதன் மூலம் அறிய முடிகிறது. இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம் அறுபது, எழுபதுகளில் கொடிகட்டிப் பறந்த வாணிஸ்ரீ தமிழில் நாயகியாக அறிமுகமான படமும் இதுதான்.
அப்போது அவர் சென்னையில் குடியிருந்தார். சினிமாதான் இலக்கு என்றாலும் பணத்துக்காக காங்கிரஸ் கட்சியினர் நடத்திவந்த பரப்புரை நாடகங்களிலும் நடித்து வந்தார். தெலுங்கு சினிமாவில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வந்தவரை காதலிக்க நேரமில்லை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகியின் தோழியாக நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தனர். அவரது அழகுக்கு நாயகியாகவே நடிக்க வைக்கலாமே என்று காதல் படுத்தும்பாடு படத்தில் அவரை நாயகியாக்கினர். வாணிஸ்ரீ விஷயத்தில் கதாசிரியர் கலைஞானமும், ஜோசப் தளியத்தும் கொண்டிருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. 15 வருடங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கின் முன்னணி நாயகியாக வாணிஸ்ரீ வலம்வந்தார்.