இந்தியன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ரஜினியை வைத்து படம் இயக்குவது என ஷங்கர் தீர்மானித்து, ரஜினியிடம் மூன்று கதைகளை கூறினார். அதில் ஒன்று வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்பும் இளைஞன் தனது சொந்த ஊரை முன்னேற்ற நினைக்கையில் எதிர்கொள்ளும் சவால்களை பற்றிய சிவாஜி படத்தின் கதை. அந்த நேரத்தில் ரஜினிக்கு அக்கதை முழுத் திருப்தி அளிக்கவில்லை. அதனால் ஷங்கர் - ரஜினி இணைவது தள்ளிப்போனது.
2005இல் பழம்பெரும் நிறுவனமான ஏவிஎம் ரஜினியை வைத்து படம் தயாரிப்பது என முடிவு செய்து, அவரது கால்ஷீட்டை வாங்கியது. ஏவிஎம் தயாரிப்பில் இதற்கு முன் 8 திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். அதில் பெரும்பாலானவை சூப்பர் ஹிட் திரைப்படங்களாக அமைந்தவை. அவற்றை விட இந்தப் படம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்று ஏவிஎம் நிறுவனத்தார் விரும்பினர்.
நாயகன் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க முதலில் அவர்கள் தேர்வு செய்தது ஐஸ்வர்யா ராய். சில காரணங்களால் அவரை தவிர்த்து ஸ்ரேயா சரணை ஒப்பந்தம் செய்தனர். நகைச்சுவைக்கு விவேக் தேர்வு செய்யப்பட்டார். வில்லனாக நடிக்க சத்யராஜை அணுகினார் ஷங்கர். ஏற்கனவே ஏவிஎம் இன் மிஸ்டர் பாரத் திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக சத்யராஜ் நடித்திருந்தார். ரஜினிக்கு இணையான வில்லன் வேடத்தை செய்த நான் அதே அளவு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிப்பது தான் சரியாக இருக்கும் என சிவாஜி பட வில்லன் வாய்ப்பை நிராகரித்தார். இதன் பிறகு அமிதாப்பச்சன் மோகன்லால் தொடங்கி பிரகாஷ்ராஜ் வரை பலருடைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் நடிகர் சுமனை வில்லனாக ஒப்பந்தம் செய்தனர். வெள்ளை வேட்டி சட்டை ரோலக்ஸ் வாட்ச் ரேபன் கண்ணாடி மீசை இல்லாத முகம் என்று அவருக்கு என தனி கெட்டப்பையும் உருவாக்கினார்.
ஏவிஎம் நிறுவனத்திற்கு இரண்டு கொள்கைகள் உண்டு. படம் தொடங்கும் முன்பே இயக்குனர் படத்தின் பட்ஜெட்டை தெளிவாக கூறி விட வேண்டும். அதற்கு மேல் செலவழிக்க அனுமதி இல்லை. அதே போல் படம் தொடங்கும் போது படத்தின் வெளியீட்டு தேதியையும் அறிவித்து விடுவார்கள். சிவாஜி படத்தை இயக்கியது ஷங்கர் என்பதால் இந்த இரண்டு விஷயங்களிலும் ஏவிஎம் நிறுவனம் சமரசம் செய்து கொண்டது.
ஷங்கர் இதுவரை எந்தப் படத்திற்கும் இதுதான் பட்ஜெட் என்று கூறியதில்லை. உத்தேச பட்ஜெட் மட்டுமே கூறியிருக்கிறார். எப்போதும் அதை தாண்டியே அவரது செலவுகள் இருந்திருக்கின்றன. அதேபோல் இத்தனை நாளில் படபிடிப்பு முடியும் என்றும் அவர் திட்டவட்டமாக கூறுவதில்லை. அதனால் சிவாஜி படத்தின் வெளியீட்டு தேதியை படம் தொடங்கிய போது ஏவிஎம் நிறுவனம் அறிவிக்கவில்லை. எனினும் 2007 ஏப்ரல் 14ஆம் தேதி படத்தை வெளியிடுவது என முடிவு செய்திருந்தனர். ஆனால் ஜூன் மாத மத்தியிலேயே படத்தை வெளியிட முடிந்தது.
ஏவிஎம் நிறுவனம் 2010ல் சிவாஜி தி பாஸ் திரைப்படத்தை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர். 2012இல் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு டிசம்பர் 12ஆம் தேதி சிவாஜி - தி பாஸ் திரைப்படத்தின் 3D வெர்சனை வெளியிட்டனர். சிவாஜி 3D என்ற பெயரில் இந்தப் படம் வெளியானது. ஒரிஜினல் வெர்ஷனை விட இந்த 3D வெர்ஷன் எடிட் செய்யப்பட்டு அதன் ரன்னிங் டைம் குறைக்கப்பட்டு இருந்தது.