சினிமாவில் அடிக்கப்படும் காப்பிகள் பலவிதம். சிலர் கதையை எடுத்துக் கொண்டு காட்சிகளை மாற்றுவார்கள். சிலர் கதை, காட்சி இரண்டையும் காப்பியடிப்பார்கள். மாட்டிக் கொள்ளாமல் இருக்க சிறந்தவழி, நமது கதைக்கு தேவையான முக்கியமான காட்சிகளை அல்லது சீக்வென்ஸ்களை மட்டும் பிற படங்களில் இருந்து காப்பியடிப்பது. இப்படி செய்யும் போது எளிதில் கண்டுபிடிக்கவும் முடியாது, பெயரும் கெட்டுப் போகாது. சந்திரமுகியில் அப்படியொரு சீக்வென்ஸை புத்திசாலித்தனமாக வைத்திருந்தார் இயக்குனர் பி.வாசு.
மோகன்லால் நடிப்பில் 1997 இல் வெளியான திரைப்படம் ஆறாம்தம்புரான். ரஞ்சித் திரைக்கதை எழுத, ஷாஜி கைலாஷ் இயக்கியிருந்தார். மும்பை தாதாவான மோகன்லால் கேரளாவின் உள்பகுதியில் உள்ள ஒரு பழைய அரண்மனை போன்ற வீட்டை வாங்குவார். அது சின்ன வயதில் அவர் வசித்த வீடு என்பதோ, அந்த வீட்டில் உள்ளவர்கள் சுமத்திய வீண் பழியால் தற்கொலை செய்து கொண்டவரின் மகன்தான் அவர் என்பதோ யாருக்கும் தெரியாது. அந்த வீட்டில் மஞ்சு வாரியரும், அவரது வளர்ப்பு தந்தை ஒடுவில் உண்ணி கிருஷ்ணனும் வசிப்பார்கள்.
மஞ்சு வாரியர் குழந்தைகளுக்கு கர்நாடக சங்கீதம் சொல்லித் தந்து, அதில் கிடைக்கும் வருமானத்தில்தான் அவர்கள் இருவரும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். குடியும், பாட்டும் கூத்துமாக இருக்கும் மோகன்லால், அவர்கள் சட்டவிரோதமாக அங்கு குடியிருப்பதாகக்கூறி, அவர்களை அங்கிருந்து கிளப்ப முயற்சி செய்து கொண்டிருப்பார்.
காலையில் மஞ்சு வாரியர் குழந்தைகளுக்கு கர்நாடக சங்கீதம் சொல்லிக் கொடுக்கும் சத்தத்தில் கண் விழிக்கும் மோகன்லால், எனக்கு குழந்தைங்க இந்த மாதிரி சத்தம் போடுறதே பிடிக்காது, அதுலயும், ஆ ஈன்னு கர்நாடக சங்கீதம் சுத்தமாக பிடிக்காது என்று ஆட்டையை கலைத்துவிட்டு செல்வார். சங்கீதம் தெரியாத தற்குறி என்று மஞ்சு வாரியர் அவர் மீது கோபம் கொள்வார்.
பிறகு ஒரு காட்சியில், பணத்தேவைக்காக தனது ஆர்மோனிய பெட்டியை மோகன்லாலிடம் கொடுத்து பணம் வாங்குவார் ஒடுவில் உண்ணி கிருஷ்ணன். அதனை மோகன்லால் இஷ்டத்துக்கு பயன்படுத்த, மஞ்சு வாரியர் பணத்துடன் வந்து அதனை திரும்ப கேட்பார். மோகன்லால் தர முடியாது என்பார். பணத்தால் வாங்க முடியாதது பலதும் உண்டு. அதில் ஒன்று சங்கீதம். நீ என்ன செய்தாலும் அந்த சித்தி கிடைக்காது என்று சாபமிடுவது போல் சொல்லிச் செல்வார். மோகன்லாலுடன் இருப்பவர்களுக்கும் இந்தப் பேச்சால் குற்றவுணர்வு ஏற்படும்.
இந்த நேரத்தில் மோகன்லால், ஆலாபனையுடன் பாட ஆரம்பிப்பார். மஞ்சு வாரியர் அசந்துபோய் நிற்பார். பிறகு மோகன்லாலை நோக்கி ஓடி வருவார். மோகன்லாலின் இசைத்திறமையில் கிறங்கிப் போய் அவரிடம் அவருக்கு மரியாதை உருவாகும். மோகன்லால் அவர்கள் நினைப்பது போல் தாதாவோ, குடிகாரரோ அல்ல, அதற்கும் மேல் என்பதை இந்தக் காட்சி உணர்த்தும்.