ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கி நடித்த திரைப்படம் இரவின் நிழல். இந்த திரைப்படத்தை ஒரு சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கி இருந்தார் பார்த்திபன். சமூகத்தில் ஒருவனின் பசி,பசி சார்ந்த பிரச்சனை மற்றும் அவனின் கருப்பு பக்கம் ஆகியவற்றை மையப்படுத்தி இரவின் நிழல் திரைப்படத்தை எடுத்திருந்தார் பார்த்திபன். அத்துடன் எந்த சூழலிலும் பாவம் செய்யக்கூடாது. அப்படி செய்தால் என்ன ஆகும் என்பதை கூற முயற்சித்து இருப்பார். 50 வயது மனிதனின் பல்வேறு வயது காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை Non linear முறையில் திரைக்கதை அமைத்து படமாக்கி இருந்தனர். 94 நிமிடம் 36 நொடிகள் ஒரே ஷாட்டில் படமாக்கப்படுவதால் நடிகர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்துள்ளது. ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இரவின் நிழல் திரைப்படம் சர்வதேச திரைப்பட திருவிழாக்கள் பலவற்றில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றது. இந்நிலையில் இந்தப் படம் ஆஸ்கர் 2023 பட்டியளில் இடம்பிடித்துள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் என்ற பெயரில் நடிகர் மாதவன் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு சினிமா துறையினர், பிரபலங்கள் என ஏராளமானோர் பாராட்டுக்களை தெரிவித்தனர். கடந்த ஜூலை 1ம் தேதி வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், ஓடிடி வெளியீட்டிலும் அதிக பார்வைகளை பெற்றது. இந்நிலையில் இந்தப் படம் ஆஸ்கர் 2023 பட்டியளில் இடம்பிடித்துள்ளது.
பாகுபலி, பாகுபலி 2 என்ற பிரம்மாண்ட படங்களுக்கு பிறகு ராஜமௌலி இயக்கிய படம் ஆர்ஆர்ஆர். பிரபல தெலுங்கு ஹீரோக்களான ஜுனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்த இந்தப் படம் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது. இந்திய அளவில் பிரபல நட்சத்திரங்களான ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கோல்டன் குளோப்ஸ் விருது விழாவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஓரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது. மேலும் இந்தப் படம் ஆஸ்கர் 2023 பட்டியளிலும் இடம்பிடித்துள்ளது.
ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கிய, கன்னட திரைப்படமான காந்தாரா செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றது. 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. காந்தாரா திரைப்படம் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய பிரிவுகளில் அகாடமி விருதுகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் இத்திரைப்படம் ஆஸ்கார் உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியுடையதாக மாறி, முக்கிய பரிந்துரைகளுக்குள் முன்னேற முடியும்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தயாரான இந்தி படம் கங்குபாய் கத்தியவாடி. பிப்ரவரி 25 கங்குபாய் வெளியானது. கங்குபாய் என்ற டைட்டில் கதாபாத்திரத்திரத்தில் அலியா பட் நடித்திருந்தார். மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியில் பாலியல் தொழிலாளியாக இறந்த கங்குபாய் என்பவரின் வாழ்க்கை வரலாறை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது. பாலியல் தொழிலில் இருந்து அரசியலுக்கு வந்து அதிகாரமிக்க பெண்மணியாக இருந்தவர் கங்குபாய். இந்தப் படத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியும் படம் வெளியான நாள் முதல் மிகப்பெரிய வசூலை பெற்றது. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் படம் நல்ல வசூலை பெற்றது. சஞ்சய் லீலா பன்சாலியின் இன்னொரு வெற்றிப் படமாக இது அமைந்து என்றும் கூறலாம். இந்நிலையில் இந்தப் படம் ஆஸ்கர் 2023 பட்டியளில் இடம்பிடித்துள்ளது.
இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'தி காஷ்மீர் பைல்ஸ்'. காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து தி காஷ்மீர் பைல்ஸ் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு சில மாநிலங்களில் வரி விலக்கும் கொடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் மொத்தமாக ரூ.340 கோடியை வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் ஆஸ்கர் 2023 பட்டியளில் இடம்பிடித்துள்ளது.
பான் நளின் இயக்கத்தில் குஜராத் மொழியில் உருவான படம் செல்லோ ஷோ. 1988ல் வெளியான சினிமா பாரடைசோ படத்தை தழுவி சொல்லோ ஷோ உருவாகியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர். செளராஸ்ட்ரா பகுதியில் உள்ள கிராமப்புறத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் சினிமா மீது காதல் கொள்வதும், அதன் தொடர்ச்சியாக வரும் சம்பவங்களும் தான் இந்தப் படத்தின் கதை என சொல்லப்படுகிறது. பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ள இந்தப் படம் ஆஸ்கர் 2023 பட்டியளில் இடம்பிடித்துள்ளது.
மீ வசந்தராவ் என்பது கடந்த ஆண்டு மராத்தியில் வெளியான படமாகும். இசைக்கலைஞர் வசந்தராவ் தேஷ்பாண்டேவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். இந்தப் படத்தை நிபுன் தர்மாதிகாரி இயக்கியுள்ளார். இப்படத்தில் வசந்தராவ் தேஷ்பாண்டேவின் பேரன் ராகுல் தேஷ்பாண்டே முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஆஸ்கர் 2023 பட்டியளில் இடம்பிடித்துள்ளது. மேலும் தி நெக்ஸ்ட் மார்னிங், விக்ராந்த் ரோனா ஆகிய இந்திய படங்களும் அந்த லிஸ்ட்டில் இடம்பெற்று உள்ளன.