பிரசாந்த் நடித்த செம்பருத்தி படத்தின் கதையும் இதுதான். அதில் பாட்டி பானுமதியை தேடி வருவார். இரண்டு குடும்பங்களுக்குமிடையில் பேச்சுவார்த்தை இல்லாமலிருக்கும். செம்பருத்தியில் பாட்டி பேரனை அவ்வளவு எளிதில் சேர்த்துக் கொள்ள மாட்டார். வின்னரில் பேரன் என தெரிந்ததும் பிரசாந்தை ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள்.
செம்பருத்தியில் மீனவப் பெண்ணான ரோஜா பானுமதி வீட்டில் தங்கியிருப்பார். அவருடன் பிரசாந்துக்கு காதல் வரும். ரோஜாவுக்கு நிச்சயித்த மன்சூர் அலிகான் பிரச்சனை செய்ய, இறுதியில் சுபமாகும். வின்னரில் வில்லன் ரியாஸ்கானுக்கு நிச்சயித்த கிரணுடன் பிரசாந்துக்கு காதல் ஏற்படும். இரண்டு படத்தையும் வித்தியாசப்படுத்தியது, வின்னரில் வரும் வடிவேலின் கைப்புள்ள கதாபாத்திரம். அவரது நகைச்சுவையின் சிகரம் கைப்புள்ள.
வின்னரில் கரீனா கபூரை நடிக்க வைக்க வேண்டும் என பிரசாந்தின் தந்தை கெடுபிடி செய்ததில் தயாரிப்பாளருடன் மோதல் ஏற்பட்டது. பிரசாந்துக்கு பேசியதைவிட அதிக சம்பளம் கேட்டதாக அப்போது சர்ச்சையானது. வின்னர் தொடங்கப்படும் முன் கிரண் வேடத்தில் குஷ்புவால் பரிந்துரைக்கப்பட்டவர் சோனியா அகர்வால். கமர்ஷியல் விஷயத்தில் கெட்டியான சுந்தர் சி. மனைவிப் பேச்சை கேட்காமல் கொழுகொழுவென்றிருந்த கிரணை நாயகியாக்கினார்.
வடிவேலு அப்போது விபத்தில் காயம்பட்டதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். சரியாக நடக்க முடியாது. நொண்டியபடிதான் நடக்க முடியும். இந்த நிலைமையில நான் எப்படி நடிக்கிறது என்று அவர் தயங்க, கட்டத்துரையிடம் கைப்புள்ளகாலில் அடிவாங்குவது போல் முதல் காட்சியை வைத்து, அதன் பிறகு படம் முழுவதும் அவர் நொண்டிக் கொண்டு வருவது போல் எடுத்து சமாளித்தார் சுந்தர் சி. சண்டைக் காட்சியில் பிரசாந்தும் ஒருமுறை அடிபட்டுக் கொண்டார்.
ஆனால், படத்தை தயாரித்தவர் நஷ்டமாகி சென்னை திநகர் ஓட்டலில் சர்வராக வேலை பார்த்தார். வெளிநாடுகளில் இருப்பது போல் காப்பிரைட் சிஸ்டம் இங்கு கறாராக இருந்திருந்தால் தயாரிப்பாளர் பல கோடிகளை சம்பாதித்திருப்பார். துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் அப்படி எதுவும் இல்லை. 2003, செப்டம்பர் 27 வெளியான வின்னர் இன்று 19 வருடங்களை நிறைவு செய்கிறது.